Thursday, January 27, 2011

பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்

பஞ்சாங்கம் என்பது இந்துக் காலக் கணிப்பு முறையின் படி, கணிக்கப்படுகின்ற கால அட்டவணை எனலாம். பஞ்சாங்கம் என்ற வட மொழிச் சொல், (பஞ்ச + அங்கம் = பஞ்சாங்கம் ) ஐந்து உறுப்புகள் எனப் பொருள்படும். இக் காலத்தில் பஞ்சாங்கம் சமய சம்பந்தமான விடயங்களுக்கும், சோதிடக் கணிப்புகளுக்குமே பெரிதும் பயன்படுகின்றது.

பஞ்சாங்கத்தின் முக்கிய உறுப்புகள்

பஞ்சாங்கம் என்ற பெயர் அது ஐந்து உறுப்புக்களைக் கொண்டிருப்பதைத் தெளிவுபடுத்துகிறது. இந்த ஐந்து உறுபுக்களும் மரபு வழிக் கால அளவீடுகளுடன் தொடர்பான அம்சங்களாகும். இவை:

1. வாரம்

2. திதி

3. கரணம்

4. நட்சத்திரம்

5. யோகம்

என்பனவாகும்.

வாரம்

இங்கே வாரம் என்பது ஏழு கிழமைகள் ஆகும். இவை:

1. ஞாயிற்றுக்கிழமை

2. திங்கட்கிழமை

3. செவ்வாய்க்கிழமை

4. புதன்கிழமை

5. வியாழக்கிழமை

6. வெள்ளிக்கிழமை

7. சனிக்கிழமை

என்னும் ஏழுமாகும்.

ஒவ்வொரு நாளும் மேற் குறிப்பிட்ட ஏதாவதொரு பெயரைக் கொண்டிருக்கும். இங்கே காட்டப்பட்ட ஒழுங்கின் படி ஒன்றன்பின் ஒன்றாக வரும் கிழமைப் பெயர்கள் சனிக்கிழமைக்குப் பின் மீண்டும் ஞாயிற்றில் தொடங்கிச் சுழற்சி முறையில் வரும்.

திதி

திதி என்பது சந்திரனின் பூமியைச் சுற்றியுள்ள சுற்றுப் பாதையின் 30 சம கோணப் பிரிவுகள் ஒவ்வொன்றையும் சந்திரன் கடக்க எடுக்கும் காலத்தைக் குறிக்கும். அமாவாசையில் இருந்து பூரணை வரையான வளர்பிறைக் காலத்தில் 14 திதிகளும், பூரணை தொடக்கம் மீண்டும் அமாவாசை வரும் வரையான காலத்தில் இன்னும் 14 திதிகளும் வருகின்றன. முதற் தொகுதி சுக்கில பட்சத் திதிகள் எனவும், இரண்டாம் தொகுதி கிருஷ்ண பட்சத் திதிகள் எனவும் அழைக்கப்படும். இவ்விரு தொகுதிகளில் வரும் திதிகளும் ஒரே பெயர்களையே கொண்டிருக்கின்றன. சுக்கில பட்சத்தில் வரும் 14 திதிப் பெயர்களே கிருஷ்ண பட்சத்திலும் வருகின்றன. இம் 30 பெயர்களும் வருமாறு:

1. அமாவாசை 16. பூரணை

2. பிரதமை          17. பிரதமை

3. துதியை             18. துதியை

4. திருதியை        19. திருதியை

5. சதுர்த்தி             20. சதுர்த்தி

6. பஞ்சமி               21. பஞ்சமி

7. சஷ்டி                   22. சஷ்டி

8. சப்தமி                 23. சப்தமி

9. அட்டமி             24. அட்டமி

10. நவமி               25. நவமி

11. தசமி                 26. தசமி

12. ஏகாதசி           27. ஏகாதசி

13. துவாதசி         28. துவாதசி

14. திரயோதசி    29. திரயோதசி

15. சதுர்த்தசி        30. சதுர்த்தசி

கரணம்

ஒரு திதியின் முற்காலம், பிற்காலம் ஆகியவை கரணம் எனப்படுகின்றது. கரணம் என்பது திதியின் அரைப்பங்கு ஆகும். திதியை இரண்டாகப் பிரித்து முற்காலத்துக்கு ஒரு கரணமும், பிற்காலத்துக்கு ஒரு கரணமும் இருக்கும். அதாவது 30 திதிகளுக்கும் மொத்தமாக 60 கரணங்கள் உண்டு. ஏழு கரணங்கள் சுழல் முறையிலும், நான்கு கரணங்கள் சிறப்பான முறையிலும், மொத்தம் 11 கரணங்களின் பெயர்களை ஏற்படுத்தி, இவற்றை வைத்து ஓர் ஒழுங்கு முறையில் மொத்தமுள்ள 60 கரணங்களுக்கும் பெயர் கொடுத்துள்ளனர்.

11 கரணப் பெயர்களும் வருமாறு:

1. பவம்

2. பாலவம்

3. கௌலவம்

4. சைதுளை

5. கரசை

6. வனசை

7. பத்திரை

8. சகுனி

9. சதுஷ்பாதம்

10. நாகவம்

11. கிமிஸ்துக்கினம்

நட்சத்திரம்
நட்சத்திரங்கள் என்பது ராசிச் சக்கரத்தை ஒவ்வொன்றும் 13.33 பாகை அளவு கொண்ட 27 பகுதிகளைக் குறிக்கும். சந்திரன் பூமியைச் சுற்றிவரும் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்தப் பிரிவில் இருக்கிறதோ அந்தப் பிரிவுக்குரிய நட்சத்திரம் அந்த நேரத்தில் நடப்பதாகச் சொல்லப்படுகிறது. 27 நட்சத்திரங்களும் பின்வருமாறு:

1. அச்சுவினி      10. மகம்       19. மூலம்

2. பரணி              11. பூரம்         20. பூராடம்

3. கார்த்திகை    12. உத்தரம்   21. உத்திராடம்

4. ரோகிணி        13. அத்தம்      22. திருவோணம்

5. மிருகசீரிடம் 14. சித்திரை 23. அவிட்டம்

6. திருவாதிரை 15. சுவாதி       24. சதயம்

7. புனர்பூசம்        16. விசாகம்     25. பூரட்டாதி

8. பூசம்                  17. அனுஷம்     26. உத்திரட்டாதி

9. ஆயிலியம்       18. கேட்டை      27. ரேவதி

யோகம்
சந்திரன் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் கடக்க எடுக்கும் காலப்பகுதி யோகம் எனப்படும். எனவே 27 நட்சத்திரங்களையும் கடக்கும் காலப்பதிகளுக்கு 27 பெயர்களைக் கொடுத்துள்ளனர். இவற்றை யோகம் என்பர்.



No comments:

Post a Comment