Friday, March 11, 2011

ஒருவரின் ராசிக்கும் உணவுப் பழக்கத்திற்கும் தொடர்பு உண்டா?

ஒருவரின் ராசிக்கும் உணவுப் பழக்கத்திற்கும் தொடர்பு உண்டா? நாகரீகமான, படித்த மனிதர்கள் மத்தியிலும் உணவுக் கட்டுப்பாடு தொடர்பான விடயத்தில் தயக்கம் இருக்கிறது. எவ்வளவு சாப்பிடுவது என்பது முதல் எதைச் சாப்பிடுவது என்பது வரை இளைஞர்கள் மத்தியில் கூட குழப்பம் காணப்படுகிறது.
பண்டிகை தினங்களில் வீட்டில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளை அதிகளவில் சாப்பிடுவதற்கும் சிலர் தயக்கம் (சர்க்கரை நோய் இல்லாதவர்கள் கூட) காட்டுகின்றனர். இதற்கும் அவர்களின் ஜாதக அமைப்பிற்கும் தொடர்பு உள்ளதா?
பதில்: ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ள 12 ராசிகளில், மேஷம், ரிஷப ராசிக்காரர்கள் அசை போடுவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு இயல்பாகவே இரைப்பை வலுவானதாக இருக்கும். செரிமானத்துக்கு உதவும் நீர் சுரப்பிகளும் அதிகமாகச் சுரப்பதால் இவர்கள் நொறுக்குத் தீனி சாப்பிடுவதில் விருப்பமாக இருப்பார்கள்.
இதேபோல் மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் போஜனப் பிரியர்களாக இருப்பார்கள். ருசியாக சாப்பிடுவதை இவர்கள் விரும்புவர். மேஷம், ரிஷப ராசிக்காரர்கள் ஆவியில் வேக வைக்கும் உணவு வகைகளில் கவனம் செலுத்துவார்கள். ஆனால் மகரம், கும்ப ராசிக்காரர்கள் எண்ணெயில் பொறித்த உணவுகளை விரும்புவர்.கடகம், மீனம் ஆகிய ராசிகளைச் சேர்ந்தவர்கள் தயிர், மோர் மற்றும் அவற்றை கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை விரும்பிச் சாப்பிடுவர்.
மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் அதிகம் சாப்பிடுவதை விரும்ப மாட்டார்கள். பசி நேரத்தில் கூட வயிற்றுக்கும், உடல் நலத்திற்கும் ஏற்ற உணவு வகைகளை மட்டுமே சாப்பிடுவர். எனினும், மிதுனத்தில் திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் மட்டும் போஜனப் பிரியர்களாக இருப்பர்.
புதனின் ராசிகளாக மிதுனமும், கன்னியும் வருவதால் அவர்கள் பார்த்து பார்த்துதான் சாப்பிடுபவர்களாக இருப்பர். குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னரே அடுத்த வேளை சாப்பாட்டை எடுத்துக் கொள்வர். எனவே, ஜோதிட ரீதியாகப் பார்க்கும் போது ஒருவரின் உணவுப் பழக்கமும், சுவை விருப்பமும் அவரது ராசியைப் பொறுத்தே அமையும். மேலும், உடல்வாகு, குடல்வாகு ஆகியவை லக்னாதிபதி, ராசிநாதன் ஆகியோரைப் பொறுத்து மாறுபடும்.மேஷம், ரிஷபம், மகரம், கும்பம் ஆகிய ராசிகளைச் சேர்ந்தவர்கள் காரம் நிறைந்த உணவுகளை விரும்புவர். துலாம் ராசிக்காரர்கள் சூடாகச் சாப்பிடுவார்கள். கடக ராசியில் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிக சூட்டுடன் சாப்பிடுவர். மிதுனம் ராசியில் பிறந்தவர்கள் மிதமான சூட்டில் உணவு உட்கொள்வர். மீனம், தனுசு ராசிக்காரர்கள் முற்றிலும் சூடு இல்லாத ஜில்லென்ற நிலையில் உள்ள உணவுகளை விரும்புவர்.

1 comment: