Friday, March 11, 2011

நரகம் சொர்க்கமானது எப்படி?

நரகம் சொர்க்கமானது எப்படி?

அது பிதுர்லோகம்.துர்வாச முனிவர் வருகிறார் என்றதும், அங்கிருந்த நம் மறைந்த மூதாதையர்களாகிய அத்தனை பிதுர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். அவரைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆவலோடு காத்திருந்தனர்.
குறிப்பிட்ட நேரத்தில் பிதுர்லோகத்தில் காலடி எடுத்து வைத்தார் துர்வாசர். அவரை பிதுர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு வரவேற்று மகிழ்ந்தனர்.
திடீரென்று, “அய்யோ... அம்மா...” என்று கூக்குரல்கள்! அது வந்த திசையைக் கூர்ந்து நோக்கினார் துர்வாசர். இப்போது, அந்த அவலக்குரல்களின் வேகம் இன்னும் அதிகரித்திருந்தது.
“அங்கே என்ன நடக்கிறது?” என்று கேட்பது போல், அருகில் நின்ற பிதுர்களை ஏறிட்டார் துர்வாசர்.
“மகா முனிவரே! பூலோகத்தில் பாவம் செய்தவர்கள் எப்படியும் தண்டனை அனுபவித்துதான் ஆக வேண்டும். அவர்களின் பாவங்களை நிறைவேற்றும் பொருட்டு உருவாக்கப்பட்டவையே நரகங்கள்! அவற்றுள் முக்கியமானது கும்பீபாகம் என்னும் நரகம். சிவ துரோகிககள், குரு துரோகிககள், கடவுள் இல்லை என்று சாடுபவர்கள், மோக வெறியால் பெண்களை சீரழித்தவர்களுக்கு அங்கே தண்டனை வழங்கப்படும். எமதூதர்கள் அவர்களுக்கு பல்வேறு தண்டனைகளை கொடுப்பார்கள். அவற்றின் வேதனை தாங்க முடியாமல்தான் அங்கே கத்துகிறார்கள்...” என்று விளக்கம் கொடுத்தார்கள், பிதுர்கள்.
அவர்கள் இப்படிச் சொன்னதும், துர்வாசருக்கு கும்பீபாகம் நரகத்தை பார்க்க வேண்டும் என்பதுபோல் தோன்றியது. உடனே, கும்பீபாகம் அமைந்திருந்த இடத்தை நோக்கி நடந்தார். அதற்குள் என்னதான் நடக்கிறது என்று எட்டிப் பார்த்தார்.
பூலோகத்தில் பாவத்தை தாராளமாகச் சேர்த்தவர்கள் அங்கே நரக வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருந்தனர்.
“அய்யோ பாவம்...” என்பது போல் நெற்றியை சுருக்கிக் கொண்டு, அங்கிருந்து பிதுர்லோகத்திற்கு மீண்டும் திரும்பினார். சிறிதுநேரத்தில் பிதுர்லோகத்தில் இருந்தவர்களிடம் விடை பெற்றுவிட்டு புறப்பட்டார்.
துர்வாசர் சென்ற அடுத்த நொடியே கும்பீபாகம் நரகத்தில் ஒரேயடியாக மாற்றம் நிகழ்ந்தது. அங்கிருந்து அதுவரை வந்து கொண்டிருந்த அவலக் குரல்கள் திடீரென்று மறைந்து போயின. மாறாக, மகிழ்ச்சியில் திளைப்பவர்களிடம் இருந்து வெளிப்படும் சந்தோஷ ஆரவாரம் அங்கிருந்து வந்தது. பாவம் செய்தவர்களுக்கு தண்டனை கொடுத்த எம தூதர்கள், தாங்கள் தண்டனை கொடுத்தவர்கள் திடீரென்று ஆரவாரத்துடன் எழுந்து மகிழ்ந்து ஆடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அடுத்த நிமிடமே எமதர்மராஜனுக்கு தகவல் போனது. கும்பீபாகம் நரகத்தில் நடந்த மாற்றங்கள் பற்றி கூறப்பட்டது. அவருக்கும் அதிர்ச்சி! ஆனாலும், அது உண்மையாக இருக்குமா? என்று சின்ன சந்தேகம். கும்பீபாகம் நரகத்திற்கு வந்து அதை உறுதி செய்து கொண்டார்.
கும்பீபாகம் நரகத்தில் நடந்த அற்புதத்தைக் காண தேவேந்திரன் தலைமையில் தேவர்களும் வந்தனர். அவர்கள் மகாவிஷ்ணுவிடம் அதுபற்றிக் கூற... அவர் சிவபெருமானிடம் நடந்ததைக் கூறி தனது வியப்பை வெளிப்படுத்தினார்.
சிவபெருமான் கண்களை மூடி ஒருகணம் யோசித்துவிட்டு விஷ்ணுவைப் பார்த்தார்.“என் பக்தனான துர்வாசரால் ஏற்பட்ட மாற்றம்தான் இது. கும்பீபாகம் நரகத்தில் பாவிகளுக்கு என்ன தண்டனை கொடுக்கப்படுகிறது என்று அவர் பார்த்ததால் இப்படி நிகழ்ந்துள்ளது. அதற்கு காரணம் அவர் தனது நெற்றியில் தரித்திருந்த திருநீறுதான். அவர், நெற்றியை சுருக்கி பாவிகளைப் பார்த்து வேதனைப்பட்ட போது, திருநீறு துகள்கள் காற்றில் பறந்து கும்பீபாகம் நரகத்தில் விழுந்தன. அந்த திருநீறுவின் மகிமையால் அங்கு அதுவரை நடந்த கொடுமைகள் மாறி, அந்த நரக லோகமே சொர்க்க லோகமாக மாறிவிட்டது...” என்று ஒரு விளக்கம் கொடுத்தார் சிவபெருமான்.இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாவம் செய்தவர்களுக்கு தண்டனை கொடுப்பதற்காக இன்னொரு கும்பீபாகம் நரகத்தை உருவாக்கி, தனது பணியை வழக்கம் போல் செய்யத் தொடங்கினார் எமதர்மராஜன்.



No comments:

Post a Comment