Tuesday, June 28, 2011

ஆன்மிக கதைகள் 63விசாரிக்காமல் எந்த முடிவுக்கும் வரக்கூடாது

ஒரு இளைஞன் தன் முதுகில் ஒரு நடுத்தர வயது பெண்ணைத் தூக்கிக்கொண்டு நடந்தான். வழியில், சில இடங்களில் அவளை இறக்கி நடக்கச் சொன்னான். சில இடங்களில் அமரவைத்து, அவளது கால்களைத் தடவினான். தன் கையிலிருந்த ஒரு கலயத்தில் இருந்து ஏதோ குடித்தான். அவன் ஒரு கிராமத்தைக் கடந்தான். இதை அவ்வூர்வாசி ஒருவன் பார்த்துவிட்டான்.
""அயோக்கியப்பயல் குடிக்கிறான், தன்னை விட வயது கூடிய பெண்ணிடம் தகாத முறையில் நடக்கிறான். இவனை ஒரு வழி செய்தாக வேண்டும்,'' என்று ஊர்த்தலைவரிடம் முறையிட்டான்.
அவர் ஆவேசமாக கிளம்பி வந்து, மறைவிடத்தில் நின்று அவனது செயல்பாட்டைக் கவனித்தார். உள்ளூர்வாசி சொன்னது நூறு சதவீதம் உண்மை என்று புரிந்து விட்டது.
இந்நேரத்தில், திடீரென ஒரு மாட்டுவண்டி வேகமாக வந்தது. அந்தத் தெருவில் சில குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். தறிகெட்டு ஓடிய வண்டி குழந்தைகள் நின்ற இடத்தை நோக்கி பாய்ந்தது. குழந்தைகளுக்கு என்ன ஆகுமோ என்ற சூழ்நிலையில், இளைஞன் அந்தப்பெண்ணை இறக்கி விட்டு ஓடினான். வண்டியை அழுத்தி நிறுத்த வண்டிக்காரனும் சுதாரித்து மூக்கணாங்கயிறுகளை இழுத்தான். பிள்ளைகள் தப்பி ஓடிவிட்டார்கள்.
கிராமத்தலைவர் அவனை நெருங்கினார்.
""தம்பி! குழந்தைகளை காப்பாற்ற வேண்டுமென்ற நல்ல எண்ணம் கொண்ட நீ, இப்பெண்ணிடம் ஒழுக்கக்குறைவாக நடக்கலாமா? குடிக்கவும் செய்கிறாயே'' என்றார்.
""ஐயா! தாங்கள் நினைப்பது தவறு. இவர் எனது தாயார். நீண்ட தூரம் நடந்து வந்ததால் கால்வலியால் சிரமப்பட்டார். புண்பட்ட காலை தடவிக்கொடுத்து தூக்கிச் செல்கிறேன். இவரைச் சுமந்து வந்த களைப்பு நீங்க நான் குடித்தது வெறும் தண்ணீர்,'' என்றான்.
கிராமவாசிகள் தலை குனிந்தனர். விசாரிக்காமல் எந்த முடிவுக்கும் வரக்கூடாது புரிகிறதா!

No comments:

Post a Comment