Thursday, June 16, 2011

கடவுள் எங்கே இருக்கிறார்?

                        காலங்காலமாக இருந்து வரும் சமயக் கோட்பாடுகளைப் பொய் என்று நிரூபிக்கத் தோன்றியதே சித்தர் மரபு. இறைவனை அடையும் வழியாக புற வழிபாட்டையே அனைத்து சமயங்களும் முன்வைக்கின்றன. ஆனால் இறைவன் நமக்கு உள்ளே இருக்கிறான்; அக வழிபாட்டின் மூலமே அவனைக் காண முடியும் என்று திடமாக உரைத்தவர்கள் சித்தர்கள். இதை வலியுறுத்தும் சில திருமந்திரப் பாடல்களைக் காணலாம்.

"ஆயத்துள் நின்ற அறு சமயங்களும்

காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலா

மாயக் குழியில் விழுவர் மனை மக்கள்

பாசத்தில் உற்றுப் பதைக்கின்ற வாறே.'

-திருமந்திரம் பாடல் எண்: 1515.

திருமூலர் வாழ்ந்த காலகட்டத்தில் இந்தியாவில் பல்வேறு சமயக் கோட்பாடுகள் நிலைபெற்றிருந்தன. அவற்றுள் முதன்மையான மதங்கள் (சமயங்கள்) என ஆறு சமயங்களையே கூறுவர். அவை:

1. பைரவம், 2. காளாமுகம், 3. பாசுபதம், 4. சௌரம், 5. கௌமாரம், 6. காணா பத்யம்.

இந்த ஆறு சமயங் களுமே புற வழிபாட்டை வற்புறுத்தும் சமயங்களா கும். இந்த சமயங்கள் கூறும் வழிமுறைகளை மட்டும் பின்பற்றுவதால் நமது அகத்தில் இருக்கும் இறைவனைக் கண்டுணர இயலாது என்பதையே பாடலின் முதல் இரு வரிகளில் கூறுகிறார் திருமூலர்.

"ஆயத்துள் நின்ற அறு சமயங்களும்

காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலா.'

ஆயம் என்ற சொல்லுக்கு கூட்டம் அல்லது உலகம் என்று பொருள் கொள்ளலாம். காயம் என்பது பருவுடலைக் குறிக்கும் சொல். இந்த உலகில் உள்ள ஆறு சமயங்கள் கூறும் வகைமுறைகளால் உடலின் உள்ளே உறைந்திருக்கும் இறைவனைக் காண இயலாது என்பது பொருள்.

இந்த ஆறு சமயங்களைப் பின்பற்றுபவர் களும், மனைவி, மக்கள் என்ற பாசப் பிணைப்பு களால் கட்டுண்டுக் கிடக்கிறார்கள். இந்தப் பாசம் எனும் மாயக் குழியில் விழுந்து உழன்று கொண்டிருப்பவர்களால் உள்ளத்தின் உள்ளே உறைந்திருக்கும் இறைவனைக் காண இயலாது.

இந்தப் பாடலில் திருமூலர் சூட்சுமமான இரண்டு கருத்துகளைக் கூறியுள்ளார்.

● புற வழிபாடுகளை முன்னிறுத்தும் சமயங்களால் உள்ளே இருக்கும் கடவுளைக் காணவோ அடையவோ முடியாது. அக வழி பாடு மட்டுமே கடவுளைக் காணும் வழியாகும். இறைவனை அடைய பூஜைகள் செய்வதும் யாகங்கள் வளர்ப்பதும் வீண் வேலை. -இது முதல் கருத்து.

● இரண்டாவது கருத்து- பந்த பாசங்கள் எனும் மாய வலைகளில் சிக்கிக் கிடக்கும் வரையில் இறைவனைக் காண இயலாது. இந்த மாயைகளிலிருந்து விடுபடும்போதுதான் இறையனுபவம் உள்ளே மலரும். இந்த சமயங்கள் கூறும் வழிமுறைகளால் (புற வழிபாடு) மாயை யின் பிடிகளிலிருந்து விடுபட இயலாது.

ஏறக்குறைய இதே கருத்தை வலியுறுத்தும் மற்றொரு திருமந்திரப் பாடலையும் காணலாம்.

"ஆறு சமயமும் கண்டவர் கண்டிலர்

ஆறு சமயப் பொருளும் அவன் அலன்

தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்தபின்

மாறுதல் இன்றி மனை புகலாமே.'

-திருமந்திரம் பாடல் எண்: 1518.

நாம் இறைவனோடு ஒன்றிணைய, வீடுபேறு பெறத் தடையாக இருப்பவை புற வழிபாட்டை முன்னிறுத்தும் சமயங்களே என்று வலியுறுத்து கிறது இந்தப் பாடல்!

ஆறு சமயங்களின் கோட்பாடுகளைக் கரைத்துக் குடித்தவர்கள்கூட கடவுளைக் கண்டிலர் என்கிறது முதலாவது வரி. இரண் டாவது வரியில் இன்னமும் கடுமை காட்டுகி றார் திருமூலர்.

"ஆறு சமயப் பொருளும் அவன் அலன்.'

இந்த ஆறு சமயங்களும் யாரை அல்லது எதைக் கடவுள் என சுட்டிக்காட்டுகின்ற னவோ, அது கடவுள் இல்லை என்பதே இரண் டாம் வரியின் பொருளாகும்.

இறைவனைக் குறித்த ஒரு மிகப் பெரிய சூட்சுமம் இந்த இரண்டாம் வரியில் ஒளிந்து நிற்கிறது. இறைவன் என்பது சக்தி. ஆதியும் அந்தமும் இல்லாத இந்த சக்திக்கு உருவமும் கிடையாது.

சக்தி வடிவான இந்த இறைவனை உருவ வழிபாடுகளாலும் பூஜை, புனஸ்காரங்களாலும் அடையவோ உணரவோ முடியாது. சக்தியைக் காண முடியாது. ஆனால் அதன் செயல்பாடு களை- அதன் இயக்கத்தை உணர முடியும் அல்லவா?

பந்த பாசங்கள் எனும் மாயக் கட்டுகளிலிருந்து விடுபட்டு, மனம் பண்படும் போதுதான் நம் உள்ளே இருக்கும் அந்த மாபெரும் சக்தி யின் இயக்கங்களை நம்மால் உணர முடியும். இதுவே சித்தர் வழி! தந்திர யோகமும் இதையே வலியுறுத்துகிறது.

இறைவன் யார்? எப்படிப்பட்டவன் என்பதற்கு ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு விதமான விளக்கங்களைத் தருகிறது. ஆனால் இந்த சமயங்கள் கூறும் அந்தப் "பொருள்' அவன் அல்லன் என்கிறார் திருமூலர்.

சற்றே ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் இதிலுள்ள உண்மை புரியும். இறைவன் எனும் அந்த மாபெரும் சக்தி, வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. எவராலும் வர்ணிக்கவோ விவரிக்கவோ முடியாதது. சமயங்கள் வர்ணிக் கும்- விவரிக்கும் "கடவுள்' - நிச்சயமாக "கடவுள்' இல்லை.

இதை ஒரு சிறு உதாரணம் மூலமாக விளக்க லாம். பலாப்பழம் எப்படியிருக்கும் என்பதை வார்த்தைகளால் வர்ணிக்கலாம்- படம் வரைந்தும் காட்டலாம். ஆனால் பலாப்பழத்தின் சுவை எப்படியிருக்கும் என்பதை வர்ணிக்க முடியுமா? ஒருமுறை உண்டு பார்த்தால்தான் அந்தச் சுவையை முழுமையாக உணர்ந்து கொள்ள முடியும். சுவை என்பது ஒரு தனிப்பட்ட அனுபவம். அதை ஒவ்வொருவரும் தானே அனுபவித்து உணர்ந்து கொள்ள வேண்டும்.

இறைவனும் அப்படித்தான். அந்த இறை அனுபவத்தை ஒவ்வொருவரும் தங்கள் உள்ளத்தில் உணர வேண்டும். வார்த்தைகளாலோ படங்களாலோ சிலைகளாலோ இறைவனை விளக்க முடியாது. அது ஒரு தனிப்பட்ட அனுபவம் என்பதையே இந்தப் பாடலின் முதல் இரு வரிகள் சூட்சுமமாக விளக்குகின்றன. இனி அடுத்த இரு வரிகளுக்கு வருவோம்.

"தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்த பின்

மாறுதல் இன்றி மனை புகலாமே.'

"இறைவன் உருவமில்லாதவன்- உணரப்பட வேண்டியவன்' என்ற தெளிவு வந்தபின், வீடுபேறு பெறத் (மனை புக) தடையெதுவும் இராது. ஆனால் இந்தத் தெளிவு எப்போது வரும்?

இந்த சமயங்கள் கூறும் தத்துவங்கள், கோட்பாடுகள் ஆகியவற்றை முதலில் தெளிவாகக் கற்றுக் கொள்ள வேண்டும். கற்றவற்றை மனதில் அசைபோட வேண்டும். எழும் ஐயங்களுக்கு விடை தேட வேண்டும். ஞான மார்க்கத்தின் துணை கொண்டு அவற்றை ஆராய்ந்து பார்க்கும்போதுதான் இந்த சமயங்கள் கூறும் "கடவுள்' நிச்சயமாகக் கடவுளாக இருக்க முடியாது என்ற தெளிவு மனதில் பிறக்கும்.

"தேறித் தெளிதல்' என்பது இதுதான். சமயங்கள் கூறும் கருத்துகளை அப்படியே ஏற்றுக் கொண்டு அதன் வழி செல்வதையே "குருட்டு பக்தி' என்கிறோம். குருடர்களால் இறை எனும் ஜோதியைக் காணவோ உணரவோ இயலாது.

இந்தத் தெளிவு ஒருவருக்கு வந்துவிட்டால் அவரது அகக் கண்கள் திறந்து கொள்ளும்; மனம் விரிவடையும். உள்ளுக்குள் இருக்கும் இறைவனை- அந்த சக்தியின் அக- புறச் செயல் பாடுகளை- விந்தைகளை- பிரம்மாண்டத்தை உணர்ந்து கொள்ளும் திறன் தானே உருவாகும்.

இதுவே சித்தர் வழி! இதுவே தந்திர யோக வழி! இந்த வழியில் தொடர்ந்து பயணம் செய்பவர்களுக்கே சித்தம் தெளிவாகும்; சித்திகளும் கைகூடும். இறுதியாக வீடுபேறு எனும் முக்தி நிலையும் சாத்தியப்படும்.

இதுவரையில் நாம் கண்ட சில திருமந்திரப் பாடல்களைக்கவனிக்கும் போது இயல்பாகவே நமது உள்ளத்தில் ஒரு கேள்வி எழும்- "இறைவன் அகத்தில் மட்டுமே இருக்கிறான் என்றால், புறத்தில் இல்லையா?' என்று.

"அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவன்', "தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான்' என்றெல்லாம் இறைவனை வர்ணிக்கிறோம். இறை எனும் சக்தி இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவிலும் நிறைந்து நிற்கிறது என்பதுதானே உண்மை?

இறைவனை அகத்தில் மட்டுமே காண முடியும் என்கிறாரே திருமூலர். புறத்தில் காண முடியாதா? இதற்கு விடையாகத் திருமந்திரத்தின் மற்றொரு பாடல் அமைந்துள்ளது.

"உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க்கு

உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் எம் இறை

உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க்கு

உள்ளத்தும் இல்லை புறத்தில்லை தானே.'

-திருமந்திரம் பாடல் எண்: 1517.

இறைவன் உள்ளே இருக்கிறானா, புறத்தே இருக்கிறானா என்ற கேள்விக்கும், நாத்திக வாதம் குறித்த சந்தேகங்களுக்கும் ஒருசேர விடை கூறும் ஓர் அற்புதமான பாடல் இது.

நமது இந்திய கலாச்சாரத்தின் தனிச்சிறப்பு எதிர் கருத்துகளுக்கும் மதிப்பு அளிப்பதுதான்! மிகத் தொன்மையான காலம் தொட்டே, "நாத்திக வாதம்' இந்திய நாட்டில் -குறிப்பாகத் தமிழ் மண்ணில் இருந்து வந்திருக்கிறது.

"கடவுள் இல்லை' என்று மறுப்பவர்களுக்கும் இந்திய கலாச்சாரத்தில் தொன்மையான காலம் தொட்டே அங்கீகாரம் இருந்திருக்கிறது. அவர்களது கருத்துகளுக்கும் மதிப்பளித்து, அத்தகைய கொள்கை உடையவர்கள் ஒரு தனி சமயப் பிரிவினராக சமூகத்தால் அங்கீகரிக்கப் பட்டனர்.

அவர்கள் மேல் வெறுப்போ துவேஷமோ இருந்ததில்லை. சமயங்களில் பல பிரிவுகள் இருந்ததுபோல, கடவுள் இல்லை என்று மறுப்பவர்களும் ஒரு தனிப் பிரிவாகக் கருதப்பட்டனர். இந்த உண்மையை மனதில் இருத்திக் கொண்டு இந்தப் பாடலைப் படித்துப் பாருங்கள்.

"உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க்கு

உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் எம் இறை.'

கடவுள் உள்ளத்தின் உள்ளேயும் இருக்கி றான்; புறத்தேயும் இருக்கிறான் என்று நம்புகிறவர்களுக்கு அவன் உள்ளத்தின் உள்ளும் இருக் கிறான்; புறத்திலும் நிறைந்து நிற்கிறான்.

"உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க்கு

உள்ளத்தும் இல்லை புறத்தில்லை தானே.'

இறைவன் என்ற ஒன்று உள்ளத்திலும் கிடையாது, புறத்திலும் கிடையாது என இறை மறுப்புக் கொள்கை கொண்டவர்களுக்கு இறைவன் உள்ளத்திலும் இல்லை; புறத்திலும் இல்லை என்பதே வெளிப்படையான அடிப்படைக் கருத்தாகும்.

இந்த எளிய பாடலிலும் சில சூட்சுமமான கருத்துகள் பொதிந்து கிடக்கின்றன. அவற்றுள் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய கருத்துகள் இரண்டு.

● இறைவன் இல்லை என்று கூறுபவர்கள் குறித்து திருமூலர் எந்த கண்டனத்தையும் முன் வைக்கவில்லை.

● உண்டு என்பதாலும் இல்லை என்பதாலும் பெரிய வித்தியாசம் எதுவும் வந்துவிடப் போவதில்லை.

"அன்பே சிவம்' என்ற கருத்தை முதன்முதலாக முன்வைத்தவர் திருமூலர். சுயநலம் இல்லாத அன்பு, அனைத்து உயிர்களிடத்தும் அன்பு, வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடும் அன்பு- இத்தகைய அன்பே "சிவம்' என்பதே திருமந்திரம் உரைக்கும் கடவுள் தன்மை.

கடவுள் உண்டு என்பவர்கள், அந்த நம்பிக்கையால் மட்டும் கடவுளைக் கண்டுணர முடியாது. மனம் பண்பட்டு அகக் கண்கள் திறந்து, ஞானம் பிறக்கும்போதுதான் அவர் களால் கடவுளை உள்ளும் புறமும் கண்டு கொள்ள முடியும்.

கடவுள் உள்ளேயும் இல்லை; புறத்திலும் இல்லை என்று மறுப்பவர்களுக்கு அவன் உள்ளேயும் இல்லை; புறத்தும் இல்லை. ஆனால் அன்பு எனும் பண்பு அவர்களிடம் நிறைந்திருந்தால்- உள்ளம் பண்பட்ட நிலையில் இருந்தால்- அவர்களை அறியாமலேயே ஒருநாள் இறைவன் அவர்களது உள்ளத்தையும் கொள்ளை கொண்டு விடுவான்.

"கள்ளத் தலைவன்' என இறைவனை திருமூலர் வர்ணித்ததை கடந்த அத்தியாயத்தில் கண்டோம் அல்லவா? அந்தக் கருத்தை இங்கே பொருத்திப் பார்த்துச் சிந்தித்தால் மேலும் பல சூட்சுமங்கள் புலனாகும்.

இந்த திருமந்திரப் பாடலையே மேலும் எளிமையாக்கி, கவியரசர் கண்ணதாசன்,

"உண்டென்றால் அவன் உண்டு.

இல்லையென்றால் அவன் இல்லை'

என பாடி வைத்துள்ளதையும் இங்கே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்

No comments:

Post a Comment