Saturday, June 11, 2011

காக்கைக்கு உணவு அளிப்பது ஏன்?

தை மாதம் முதல் தேதியன்று சூரிய பகவானுக்குப் பொங்கல் வைத்து வழிபடுவது யாவரும் அறிந்ததே. பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கலன்று உழவுக்குப் பயன்படும் காளை களுக்கும் பால் கொடுத்து உதவும் பசுக்களுக்கும் விழா எடுத்து அதனை வழிபடுகிறோம். இந்த மாட்டுப் பொங்கலன்று "காணுப் பிடி' என்று சொல்லப்படும் காக்கைகளை வழிபடும் நிகழ்ச்சியை கிராமங்களில் காணலாம். அன்று குழந்தைகள், பெண்கள் பொங்கல் கட்டிக்கொண்டு காக்கைக்குச் சோறு வைக்கப் போவது வழக்கத்தில் உள்ளது.

குறிப்பாக சுமங்கலிப் பெண்கள் காக்கைகளை வழிபடுவது வழக்கம். தன் உடன்பிறந்தவர்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சி யாகவும் இருக்க, தங்களிடம் பாசம் உள்ளவர்களாகத் திகழ இந்தக் காணுப்பிடி பூஜையைச் செய்கிறார்கள். திறந்தவெளியில் தரையைத் தூய்மையாக மெழுகிக் கோலமிடுவார்கள். அங்கே வாழை இலையைப் பரப்பி அதில் வண்ண வண்ண சித்ரான்னங் களை ஐந்து, ஏழு, ஒன்பது என்ற கணக்கில் கைப்பிடி அளவு எடுத்து வைத்து, காக்கைகளை "கா...கா...' என்று குரல் கொடுத்து அழைப்பார்கள். அவர்களின் அழைப்பினை ஏற்று காக்கைகளும் பறந்துவரும். அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக் கும். வாழை இலையில் உள்ள அன்னங்களைச் சுவைக்கும்.


அப்படிச் சுவைக்கும்போது அந்தக் காக்கைகள் "கா... கா...' என்று கூவி தன் கூட்டத்தினரை அடிக்கடி அழைக்கும்.

அந்தக் காக்கைகள் உணவினைச் சாப்பிட்டுச் சென்றதும், அந்த வாழை இலையில் பொரி, பொட்டுக் கடலை, வாழைப் பழங்கள், வெற்றிலைப்பாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள். இதனால் உடன்பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை. இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள். மறைந்த முன்னோர்கள் (பித்ருக்கள்) காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வ தாக பெரியவர்கள் சொல்வர். இதனால் பித்ருக்களின் ஆசி கிட்டும் என்பது நம்பிக்கை. மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனி பகவானைத் திருப்திப்படுத்தியதாகவும் கருதுகிறார்கள். காக்கை சனி பகவானின் வாகனம். காக்கைக்கு உணவு அளிப்பது சனிக்கு மகிழ்ச்சி தருமாம்.


காக்கைகளில் நூபூரம், பரிமளம், மணிக் காக்கை, அண்டங் காக்கை என சில வகைகள் உண்டு. காக்கையிடம் உள்ள தந்திரம் வேறு எந்தப் பறவைகளிடமும் காண முடியாது. அதிகாலையில் எழுந்து கரைதல், உணவினை உடனே உண்ணாமல் தன் கூட்டத்தினரை அழைத்து பகிர்ந்து உண்ணல், உணவு உண்ணும் போதே சுற்றும் முற்றும் பார்த்தல், பிறர் காணாமல் ஜோடி சேர்ந்து இணைதல், மாலையிலும் குளித்தல், பிறகு தங்குமிடத்திற்குச் செல்லுதல் போன்றவற்றை வழக்கமாகக் கொண்டவை. தங்கள் இனத்தில் ஏதாவது ஒரு காக்கை இறந்து விட்டால் அனைத்து காக்கை களும் ஒன்று கூடி கரையும் தன்மையையும் காணலாம். இது அஞ்சலி செய்வதற்குச் சமமாகக் கருதப்படுகிறது.

இந்தக் காக்கை வகையில் வெள்ளைக் காக்கை என்ற அபூர்வ இனம் உண்டு. இதனைக் காண்பது அரிது. வெள்ளைக் காக்கையைக் கண்டால் மற்ற கருங்காக்கைகள் அதனை விரட்டி அடிக்கும். உயிரியல் பூங்காவில் அபூர்வமாக இதனைக் காணலாம்.

வெள்ளைக் காக்கை தோன்றியது குறித்து வரலாறு கூறும் தகவல்...

சித்தர்கள் வழிவந்த தேரையரின் மாணவர் களில் யூகி முனிவரும் ஒருவர். இவர் சித்த மருத்துவத்தில் நிபுணர். தான் புதிதாகக் கண்டுபிடித்த மருந்தை சித்தர்களின் தலைவ ராகக் கருதப்படும் அகத்திய முனிவரிடம் எடுத் துச் சென்று அதன் குணத்தைக் கூறி அவரின் அங்கீகாரத்தைப் பெறுவது வழக்கம். ஒருநாள் யூகி முனிவர் ஒரு மருந்தினைக் கண்டுபிடித்தார். அதன் விவரத்தை அகத்திய முனிவரிடம் சொல்லி, "கா...கா...' என்று காகங்களை அழைத்தார் யூகிமுனி. காகங்கள் பறந்து வந்தன. அந்தக் காகங்களுக்கு தாம் தயாரித்து வைத்திருந்த ஔஷதமாகிய வீரசுண்ணத்தை உணவில் கலந்து கொடுத்தார். அதனை உண்ட கருங் காக்கைகள் சிறிது நேரத்தில் வெள்ளை நிறமாக மாறின. இதனைக் கண்ட அகத்தியர் யூகிமுனி யைப் பாராட்டி "மதியூகி' என்ற பட்டத்தை அளித்தார். இந்த மதியூகி என்ற முனிவர்தான் சிந்தாமணி முதலிய பல மருத்துவ நூல்களை இயற்றினார் என்று சொல்லப்படுகிறது.

மதியூகி முனிவரால் வெள்ளை நிறமாக மாறிய காகங்கள் முதன்முதலில் மதியூகி காலத்தில் தோன்றினாலும், அதன் பாரம்பரியம் விரிவாகத் தொடரவில்லை. அதனால்தான் வெள்ளைக் காக்கையைக் காண்பது அரிதாகிறது.

எமதர்மராஜன் காக்கை வடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம். அதனால் காக்கைக்கு உணவு அளித்தால் எமன் மகிழ்வாராம். எமனும் சனியும் சகோதரர்கள் ஆவர். அதனால், காக்கைக்கு உணவிடுவதால் ஒரேசமயத்தில் எமனும் சனியும் திருப்தியடைவதாகக் கருதப் படுகிறது.

தந்திரமான குணம் கொண்ட காக்கை மனிதர்களுக்கு சில அறிகுறிகளைத் தெரிவிப்ப தாகச் சொல்லப்படுகிறது. யாராவது விருந்தினர் வருவதாக இருந்தாலும் நல்ல செய்திகள் வருவதாக இருந்தாலும் முன்கூட்டியே காகம் நம் வீட்டின்முன் உள்ள சுவரில் அமர்ந்து... "கா...கா...' என்று பலமுறை குரல் கொடுக்கும். இந்தப் பழக்கம் இன்றும் உண்டு. காலையில் நாம் எழுவதற்குமுன், காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். நமக்கு அருகில் அல்லது வீட்டின் வாசலை நோக்கிக் கரைந்தால் நல்ல பலன் உண்டு.

வீடு தேடி காகங்கள் வந்து கரைந்தால் அதற்கு உடனே உணவிட வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். எனவே, மாட்டுப் பொங்கலன்று "காணுப்பிடி' என்ற காக்கை வழிபாடு செய்வதால் சனி பகவான், எமன் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதத்தினைப் பெற்று மகிழ்வுடன் வாழலாம்!

No comments:

Post a Comment