Thursday, July 28, 2011

கணபதி ஹோமத்தின் சிறப்பு!

எந்தத் தொழில் தொடங்கினாலும் கணபதி ஹோமம் செய்தபிறகு துவக்குவது மிகச்சிறந்த பலனைத்தரும். வீடுகளில் கிரகப்பிரவேசம் நடத்தும்போது கணபதி ஹோமம் நடத்தி, புதுவீடு புகுவது எக்காலமும் நன்மை தரும். குடும்பத்தில் தொடர்ந்து சுகவீனம் ஏற்பட்டால் கணபதி ஹோமம் நடத்தி உடல்நிலை நன்றாகப் பெறலாம். ஒரு கடிதம் எழுதும்போதும் கூட பிள்ளையார்சுழியுடன் துவங்குவது மரபு. விநாயகரே முழு முதற்கடவுள். சிவபெருமான் முப்புரங்களையும் அழிக்க புறப்பட்ட போது கணபதி மந்திரத்தை சொல்ல தவறிவிட்டார். எனவே செல்லும் வழியில் அவரது தேர் பழுதானது. பெற்ற பிள்ளையாக இருந்தாலும்கூட கணபதியை வணங்கிய பிறகே எந்த செயலையும் துவங்கவேண்டும் என உத்தரவிட்டவரே சிவபெருமான்தான். அவரே அந்த விதியை கடைபிடிக்காததால் இந்த நிலைமை ஏற்பட்டது. சிவபெருமானின் தேர் அச்சு முறிந்த இடத்தை இப்போது அச்சிறுபாக்கம் என்று அழைக்கிறார்கள். செங்கல்பட்டு அருகே இந்த ஊர் அமைந்துள்ளது. இங்குள்ள விநாயகரையும் அச்சிறு விநாயகர் என்றே அழைக்கிறார்கள். கணபதி ஹோமத்தை விநாயகர் வேள்வி என்றும் சொல்வதுண்டு. விநாயகரை வணங்கி, விநாயகர் குறித்த மந்திரங்கள் ஓதி, அவரை புகழ்ந்து பக்திப்பாடல்களை மனமுருகிப் பாடி கணபதி ஹோமத்தை நிறைவேற்ற வேண்டும். நம் வீடுகளில் நடக்கும் காதணி விழா, பிறந்தநாள், திருமண நிகழ்ச்சி, தொழிற்சாலைகளில் நடக்கும் பவள விழா, முத்துவிழா ஆகிய நிகழ்ச்சிகளிலும் கணபதி ஹோமம் செய்ய வேண்டும். புதிய இயந்திரங்கள் வாங்கினால் அவை பழுதின்றி இயங்க விநாயகர் வேள்வி அவசியம். நல்ல காரியங்களில் மட்டுமின்றி மறைந்த நம் முன்னோரை நினைவுபடுத்தும் நாட்களான தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகிய நாட்களிலும் கணபதி ஹோமம் செய்வது மிகச்சிறந்த பலனைத்தரும். நமது சக்திக்கு ஏற்றபடி செலவு செய்து இந்த பூஜையை நடத்தலாம்

No comments:

Post a Comment