Friday, November 25, 2011

ஆன்மிக தகவல்கள்

* குலதெய்வம் கோயிலுக்கு அகல் விளக்குகள் வாங்கிச் சென்ற பொழுது ஒரு சில உடைந்து விட்டன. இது நன்மையா கெடுதலா?

விளக்கேற்றி சுவாமி வழிபாடு செய்யும் பொழுது அதுவே தானாக விழுந்து உடைந்தால் தான் பரிகார தீபம் ஏற்ற வேண்டும். வாங்கிச் செல்லும் பொழுது கவனக்குறைவால் உடைந்ததற்கெல்லாம் பயப்பட வேண்டாம். எல்லாம் நன்மைக்கே.

* கிரகண வேளையில் கோயில் நடை சாத்துவது ஏன்?

நடை சாத்த வேண்டிய அவசியமில்லை. இந்தப் பழக்கம் எப்படி வந்தது என்றே புரியவில்லை.
கிரகண காலத்தில் புண்ய கால தீர்த்தம் கொடுத்துச் சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் செய்யச் சொல்லி சாஸ்திரங்கள் கூறுகின்றன. சில கோயில்களில் இது வழக்கத்திலும் உள்ளது.

* எங்கள் வீட்டில் துளசியுடன் வில்வமும் சேர்ந்து வளருகிறது. இரண்டையும் சேர்த்து வணங்கலாமா? அல்லது கோயிலில் நடலாமா?
கமலா, ஆத்தூர்
இரண்டும் உங்கள் வீட்டில் நன்றாக வளருவதே பெரிய பாக்கியம். தினமும் விளக்கேற்றி நன்றாக வழிபடுங்கள். உங்கள் வீடு மங்களகரமாக இருக்கும்.

** வீட்டில் சிலை வைத்து வழிபாடு செய்து வருகிறேன். அதனால் குறை ஏதுமில்லை. ஆனால், சிலை வழிபாடு கூடாது என்று சிலர் கூறுகின்றனர். விளக்கம் தேவை.
எஸ்.தீபா கடலூர்
வீட்டில் சாமி சிலைகளை ஆறு அங்குல உயரத்திற்கு மேல் இல்லாமல் வைத்து தாராளமாக பூஜை செய்யலாம்.

* பிறந்த கிழமையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது கூடாதா?

பிறந்த நட்சத்திரத்தில் மட்டுமே எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது. கிழமை பார்க்க வேண்டாம். தீபாவளியன்று ஜென்மநட்சத்திரம் வந்தால் சும்மா இருந்து விடாதீர்கள். அது விதி விலக்கு.

* வீடு, தீர்த்தக்கரை, கடற்கரை இம்மூன்றில் பிதுர்தர்ப்பணத்தை எங்கு செய்வது சிறப்பானது?

கடற்கரையில் செய்வது முதன்மையானது. நதி, குளக்கரைகளில் செய்வது விசேஷமானது. வீட்டில் செய்வது மத்திமம் தான். அவசர கதியில் சென்று கொண்டிருக்கும் வாழ்க்கைச் சூழலில், ஏதாவது ஓரிடத்தில் விட்டுவிடாமல் செய்வதே மிக மிக உத்தமமானது தான்.

* பஞ்சாட்சர மந்திரம் (நமசிவாய, சிவாயநம)சொல்லித்தான் திருநீறு பூச வேண்டும் என்பது உண்மையா?

பஞ்சாட்சரம் (நமசிவாய) சொல்லி திருநீறும், அஷ்டாக்ஷரம் (ஓம் நமோ நாராயணாய)சொல்லி திருமண்ணும் இட்டுக் கொள்வதைப் போன்ற புண்ணியச் செயல் இவ்வுலகில் வேறு கிடையாது.

* கருவறையில் திரைபோடும் போது சந்நிதியை தரிசனம் செய்வதோ சுற்றி வலம் வருவதோ கூடாது என்கிறார்களே? உண்மைதானா?

உண்மைதான். ஒருவரை சந்திக்கச் செல்கிறோம். அவர் நம்மை சந்தித்துப்பேசும் நிலையில் விழித்துக் கொண்டிருந்தால் தானே சந்திப்பு என்பது நிகழும். அதுபோலத் தான் திரைப்போடப்பட்ட சந்நிதியும்! அப்போது தரிசிப்பது வலம் வருவது போன்றவை செய்யக்கூடாது. இது போன்ற சமயங்களில் விமான கோபுரங்கள் உள்ளன. அவற்றை தரிசித்தாலே சுவாமி தரிசன பலம் கிட்டும்.
கோயில்களில் கொடுத்த பூமாலையை வீட்டில் உள்ள சுவாமி படங்களுக்கு போடுவது சரிதானா?
.
ஒருமுறை சுவாமிக்கு சாத்தப்பட்டு பிறகு எடுக்கப்படும் மாலைக்கு "நிர்மால்யம்' என்று பெயர். நிர்மால்ய மாலைகளை வேறு தெய்வத்திற்குச் சாத்துதல் கூடாது.

* பூஜை அறையில் சுவாமி படங்களுடன் மறைந்த பெரியவர்களின் படங்களை வைக்கலாமா?

சுவாமி படங்களுடன் சேர்த்து வைப்பது கூடாது. சற்று தள்ளி தனியாக வைத்து வழிபடலாம். மறைந்த பெரியவர்கள், பிதுர்கள் என்று அழைக்கப்படுவர். தெய்வநிலை வேறு. பிதுர்நிலை வேறு.

* அசைவம் சாப்பிடும் நாட்களில் கோயிலுக்கு செல்வது தவறுதானா?
எஸ்.ஆதிகேசவன், விருதுநகர்
கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டிருக்கும் நீங்கள் அந்த கருமத்தை விட்டுவிடக்கூடாதா? உலகிலேயே அதிகமாக அசைவம் சாப்பிடும் சீனர்கள் கூட இன்று சைவத்திற்கு மாறி வருகிறார்கள். உலகிற்கே எடுத்துக்காட்டாக இருக்கும் இந்து தர்மம் புலால் சாப்பிடுவதை அனுமதிப்பதில்லை. எனவே இந்தக் கேள்வி தள்ளுபடி செய்யப்படுகிறது.

* என் தாய் பூஜை செய்து வந்த விக்ரஹங்களுக்கு என்னால் சரிவர பூஜை செய்ய முடிவதில்லை பூ, பால் வைத்து வணங்கினால் போதுமா?

தாய் தந்தை விட்டுச் சென்ற மற்ற எல்லாவற்றையும் பராமரிக்கிறோம். பூஜை மட்டும் சரிவர செய்யமுடியவில்லை என்றால் எப்படிப் பொருந்தும்? நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தானே உங்கள் தாய் பூஜை செய்து வந்திருக்கிறார்கள். உங்கள் வாரிசுகளும் நன்றாக இருக்க, நீங்களும் முடிந்த வரை நன்றாகவே பூஜை செய்யுங்கள்.

** வேண்டுதல் நிறைவேறிய பின்னும் நேர்த்திக் கடனை செலுத்த என்னால் இயலவில்லை. இதனால் ஏதேனும் பாதிப்பு நேருமா?

வேண்டுதல் நிறைவேறிய பின்னும் நேர்த்திக் கடனை செலுத்தவில்லையே என உங்கள் மனம் உறுத்துகிறது. இதுவே பெரிய பாதிப்பு தானே! சீக்கிரம் நிறைவேற்றிவிடுங்கள்.

* திருமணம், காதுகுத்தல் போன்ற நிகழ்ச்சிகளில் முன்னதாக குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டும் என்கிறார்களே ஏன்?

திருமணம், காதுகுத்தல் போன்றவை நம் குலம் அபிவிருத்தியடைவதற்காகச் செய்யப்படும் சுபநிகழ்ச்சிகளாகும். இவை நல்ல முறையில் நடந்து நம் குலம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக முதலில் குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டும்.

* இரண்டு மாத இடைவெளியில் இறந்த பெற்றோருக்கு ஒரே நாளில் திவசம் பண்ணலாமா?

தாயின் சிராத்தம் முறை வேறு. தந்தையின் சிராத்தம் முறை வேறு. இரண்டையும் அவரவர்கள் திதியில் செய்தால் தான் பித்ருக்கள் திருப்தியடைவார்கள். ஒன்றாக செய்யக் கூடாது.

* திருமாங்கல்யத்தில் "சிவாயநம' என எழுதி வழங்கலாமா?

திருமாங்கல்யம் என்பது பரம்பரை பரம்பரையாக பழக்கத்தில் செய்து வருகிற ஒன்று. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு மாதிரி அமைந்துள்ளது. நம் குடும்பத்துப் பெரியவர்கள் கூறும் முறைப்படி செய்வது தான் நல்லது. சுவாமி அம்பாள் உருவங்கள் பொறிப்பது தான் வழக்கம். எழுத்துக்கள் எழுதுவது இல்லை. 

No comments:

Post a Comment