Monday, November 14, 2011

தீபாவளியன்று சூரியோதயத்துக்கு நாற்பத்தெட்டு நிமிஷம் எண்ணெய் தேய்த்து குளித்துவிட வேண்டும்


எல்லா நாளும் தீபாவளி

தராசுக்கு "துலாக்கோல்' என்று பெயருண்டு. தீபாவளி கொண்டாடப்படும் ஐப்பசியை துலாமாதம் என்பர். துலாஸ்நானம் என்னும் புனித நீராடல் இம்மாதம் முழுவதும் காவிரியில் நடைபெறும். துலாக்கோலான தராசு எப்படி நடுநிலையாகத் தன் முள்ளைக் காட்டி நிற்குமோ, அதுபோல தனக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்ற பேதமில்லாமல் செயல்படுபவனே நீதிமான். நீதிபதி முன் இருக்கும் பெண்தேவதையும் நீதியின் அடையாளமாகத் தராசு கையில் வைத்திருப்பதைக் காணலாம். சத்தியபாமா பெற்ற மகன் என்றும் பாராமல், உலகுக்கு கேடு செய்ததன் மகனை அழித்து நீதியை நிலைநாட்டினாள். அதேநேரம் தாய்பாசத்தோடு தீபாவளியைக் கொண்டாடவும் வழிகாட்டினாள். நீதியுணர்வும், மனவுறுதியும் உள்ள நாள் தீபாவளித் திருநாள் போல் என்றும் ஒளி வீசும்.


 
ஏழுபண்டாக்கள் பூஜை

தீபாவளி என்றதும் நினைவுக்கு வருவது காசி. காசியில் கங்கைக்கு முக்கியத்துவம். இதில் 64 நீராடும் தீர்த்தக்கட்டங்கள் அமைந்துள்ளன. அதில் மணிகர்ணிகா தீர்த்தக்கட்டம் மிகவும் விசேஷமானதாகும். பெரும்பாலான மக்கள் மணிகர்ணிகாவில் நீராடியே கங்கை தீர்த்தம் எடுப்பார்கள்.
இங்குள்ள காசிவிஸ்வநாதருக்கு பக்தர்களே கங்கைநீரால் அபிஷேகம் செய்து பூஜிக்கலாம். இங்கு தினமும் இரவு7.45 முதல் 8.30 மணிவரை நடைபெறும் சப்தரிஷி (ஏழு ரிஷிகள்) பூஜையைத் தரிசிப்பது சிறப்பாகும். அத்திரி, வசிஷ்டர், கஷ்யபர், கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர், ஜமதக்னி என்னும் ஏழுரிஷிகள் இந்நேரத்தில் பூஜிப்பதாகச் சொல்வர் இதைக்குறிக்கும் வகையில் ஏழுபண்டாக்கள்(ஏழு அர்ச்சகர்கள்) சூழ்ந்து நின்று காசிவிஸ்வநாதரை அர்ச்சனை செய்வார்கள்.
 எண்ணெய்க்குளியல் எத்தனை மணிக்கு - பெரியவர் சொல்றபடி செய்யுங்க

 சூர்யோதயத்துக்கு முன் அப்யங்கனம்(எண்ணெய்க் குளியல்) பண்ணக்கூடாது என்பது விதி. ஆனாலும், இதற்கு வித்தியாசமாக ஒரு விதியை பகவானிடமிருந்து வரமாக வாங்கி விட்டால் பிள்ளையை(நரகாசுரனை) பற்றி விசேஷமாக இருக்கும் என்று பூமாதேவி நினைத்தாள். அதனால், தீபாவளி நாளில் மட்டும் சூரியோதயத்துக்கு முந்தி அருணோதய காலத்தில் எண்ணெய் ஸ்நானம் பண்ண வேண்டும் என்று வரம் கேட்டு அதற்காக பகவானின்
அங்கீகாரத்தைப் பெற்றாள்.
அருணோதயம் என்றால் அருணனின் உதயம். அருணன் சூரியனுடைய தேரோட்டி. அவன் ஒரே சிவப்பாக இருப்பான். நல்ல சிவப்புக்கு "அருணவர்ணம்' என்று பெயர். சூரியன் அடிவானத்தில் தெரிவதற்கு முன்ஒரு முகூர்த்த காலத்துக்கு முந்தியே வானில் சிவப்பு பரவ ஆரம்பித்து விடுவதைத் தான் அருணோதயம் என்பது. ஒரு முகூர்த்தம் என்பது இரண்டுநாழிகை. அதாவது நாற்பத்தெட்டு நிமிஷம்.
தீபாவளியன்று சூரியோதயத்துக்கு ஒரு முகூர்த்தம் முந்தியே எண்ணெய் தேய்த்து குளித்துவிட வேண்டும். சிலர், விடிவதற்கு முன்னால் அப்யங்கனம் (எண்ணெய்க் குளியல்) செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக, ராத்திரி இரண்டு மணி, மூன்று மணிக்கே ஸ்நானம் செய்கிறார்கள். இப்படி செய்வது தப்பு.
இந்த ஆண்டாவது காஞ்சிப்பெரியவர் சொல்றதைக் கடைபிடிப்போமா!

No comments:

Post a Comment