Monday, January 16, 2012

சச்சிதானந்தம்’

உலகின் கருத்தாவாக விளங்கும் ‘சிவம்’ எனும் பரம் பொருள் என்றைக்கும் அழியாது எம்முள் இருக்கிறார். மெய்ப்பொருளாக விளங்குகின்ற இறைவன் இப்பிரபஞ்சத்தை கடந்தும் இருக்கிறார், உள்ளேயும் இருக்கிறார். அதாவது கடந்தும் உள்ளும் இருப்பதால் கடவுள் என்கிறோம். என்றைக்கும் அழியாது மெய்பொருள் எனப்படும் ‘இறை’ இருப்பதால் ‘ஸத்யம்’ என்கிறோம்.

இருப்பதை ‘ஸத்’ எனவும் உணர்வு இருப்பதை ‘சித்’ எனவும் கூறப்படுகிறது. மெய்ப்பொருள், சித்சோருபம் ஆக விளங்கி வருகிறது.  அதனிடமிருந்தே உயிர்கள் உணர்வை பெறுகின்றன. அப்பொருளுக்கு மற்றொரு இயல்பு உண்டு. அது ஆனந்தமே வடிவெடுத்தது. ஆனந்தமே எண்ணிறைந்த உயிர்களிடத்து இன்பமாக இயங்குகிறது இன்பத்தை உணராத உயிர் இல்லை.

‘ஸத்’ ‘சித்’ ‘ஆனந்தம்’ மூன்று இயல்புகளை ஒன்றாகக் கூட்டினால் ‘சச்சிதானந்தம்’ என்று அழைப்பர். பிளவு படாத பெரிய பொருள் என்று அர்த்தம். ஆனந்தம் வேறு தெய்வம் வேறு இல்லை. இப்படிப்பட்ட தெய்வம் கல்லிலும் வேதச்சொல்லிலும் பூவிலும் முள்ளிலும் அன்பிலும் நம்பிக்கையிலும் இருப்பார். அவர் இல்லாத இடமே இல்லை. அடியையும் முடியையும் தேடவைத்து ஜோதியாய் நின்றார். உமை அம்மையுடன் சரிபாதியாய் நின்றார். அருவமும் உருவமும் அற்று சிவலிங்கத் திருமேனியராக நின்றார்.

ஆனந்தக் கூத்தாடும் அம்பலவாணர் அவர், களித்து ஆடும் இடமாகிய சிதம்பரத்தில் நடராஜர் என நின்றார். ஆகவே நடராஜர் என அழைத்து நாம் வழிபடும் திருக்கோலம் எமக்கு ஆனந்தத்தை நல்கி அருளை தரவல்லது. நான்கு கரங்களை ஏந்தி ஒரு காலைத்தூக்கி நின்றாடி ஆடல், ஒலி, எழுப்பி கனக சபையில் ஆடவல்லவர் நடராஜபெருமான். அவரது சிவஞானம் அமிர்தம் போன்றது. பிரகாசமாய் ஒளிர்வது, சாந்தமும், இனிமையும் நிறைந்து கானப்படும் தூய்மையின் இருப்பிடம்,  இக்கோட்பாட்டை விளக்குவதே சிவன் தலை ஜடாமுடியில் வீற்றிருக்கும் பிறைச்சந்திரன் ஆவார்கள்.

பாம்பு அதை ஆபரணமாக அணிந்துள்ளார். அதை பார்த்து யாரும் ஆசைப்படமாட்டார்கள் எவரும் அஞ்சுவார்கள். பாம்பை அணிந்ததால் பன்னக பூசஷனன் எனப்பெயர் பெற்றார். எதற்கும் அஞ்சார் கங்கையை தலையில் சூட்டியிருப்பது அறிவு எனும் ஞானம் சிரசிற்குள் பாய்ந்து குளிர்ச்சியாக எம்மை இயங்க வைக்கிறது. மூளை கொதிப்படையாது அதாவது சூடாகாது பார்த்துக் கொள்ள வேண்டியது எமது கடமை. கங்காதரருக்கு பணிய ஆத்ம ஞானம் உண்டாகும். நான்கு கைகளில்
ஒரு கையில் உடுக்கை, இன்னொரு கையில் நெருப்பு, மற்ற இருகைகளாலும் அபயமளித்து நடனமிடும் திருக்கோலத்திற்கு அர்த்தங்கள் உண்டு.



“டமருகம்” அதாவது உடுக்கையை ஒருகையில் அது ஓசை எழுப்ப வல்லது. “விந்து” அதாவது நாதம். விந்திலிருந்து மரம் உலகு அனைத்தும் தோன்றியது. ஒவ்வொரு ஜீவனிடத்தும் ஓசை உதித்துக்கொண்டு இருக்கிறது. சிவநாதன் நாதத்தை முறையாக ஓயாது ஒலித்துக் கொண்டு இருக்கிறார். இன்னொருகை கனல் ஏந்தியிருப்பது. அது  எல்லாவற்றையும் எரித்து சாம்பல் ஆக்கும் தன்மை, இத் தீக்கு உண்டு. இது சிவஞானத்தீ ஆகையால் நல்லது கெட்டது எல்லாவற்றையும் அழிக்கவல்லது. எல்லாம்  எரிந்து அழிந்தபின் எஞ்சியிருப்பது நீறு. பிரபஞ்சத்தில்  நீறு பூசிய சிவம் ஒன்றே அழிவு இல்லாது இருப்பவர்.

அழிவில்லாத படைப்போ அல்லது படைப்பு இல்லாத அழிவுவோ இருக்க இயலாதாகும். ஆக ஆடவல்லான் ஆடும் ஆனந்தக் கூத்தில் ஆக்கமும் அழிவும் தினம் தினம் நடைபெற்றுக் கொண்டு உலகம் இயங்குகிறது. நடராஐன் தூக்கிய திருவடி உயிர்கள் அசைந்து கொண்டிருப்பதை காட்டிய படியும், ஊன்றிய திருவடி முயலகன் அசுரனை மிதித்தபடி இருப்பது நமது, பாவங்கள் நமது பயங்கள் அனைத்தையும் போக்கி ஆனந்தத்தை அளிக்க வல்லான் என்ற அர்த்தத்தில் தில்லையம்பலத்தில் நடனமாடுகின்றார்.  குறி குணம் எதுவும் இல்லாத விழிப்பு, கனவு, உறக்க நிலைகளுக்கு அப்பாற்பட்டதும், பஞ்ச பூதங்களின் தொகுப்பு அற்றதுமான, பிரம்மமே சிவன் ஆவார்.

அதிகாலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் மெய்மை அறிவு, ஆனந்தமாக இதயத்திலே விளங்கவேண்டும் எனில், ஆத்ம சொரூபம் ஆன பிறப்பு இறப்பு அற்றவரும், முதன்மை யானவரும்  ஆகிய நடராஜப்பெருமானை இந்த மார்கழி மாதத்தில் வழிபாடாற்ற வேண்டும். நாம் இத் திருவேம்பாவை காலத்தில் காலை வேளையில் நீராடி தூயமனத்தினராய் பூஜை ஆராதனைகளில்  பங்கு கொண்டு இறைவனைத்தரிசிக்க வேண்டும். பத்தாவது நாளான திருவாதிரை நாளில் ஆருத்திரா தரிசனம் கண்டு நடராஜ பெருமானின் அருளை பெறுவோம். பஜனை பாடல்கள் பாடி அவரைத்துதி செய்து வணங்குவோம்.

No comments:

Post a Comment