Friday, March 9, 2012

ஆன்மிக தகவல்கள்


கோயிலில் பிறரால் ஏற்றப்பட்டு அணைந்து போன விளக்கை மீண்டும் ஏற்றி வைப்பது நல்லதா?

நாம் புதிய தீபம் ஏற்றுவதைவிட உயர்ந்தது பிறர் ஏற்றி அணைந்த தீபத்தை மீண்டும் ஏற்றுவது. சுவாமி, சந்நிதியில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சுடர் விழுந்து அணையும் தருவாயில் இருந்த அந்த விளக்கில் எண்ணெய் குடிப்பதற்காகச் சென்ற எலி ஒன்று, தாம் அறியாமலேயே தீபத்தைத் தூண்டிவிட்டது. அறியாமல் செய்தாலும் கூட இச்செயல் மிகப் பெரிய புண்ணியமாக எலிக்குக் கிடைத்து மறு பிறவியில் மிகப் பெரிய அரச குடும்பத்தில் பிறக்கும் பாக்கியம் பெற்றது. எனவே சந்நிதியில், அணைந்துள்ள தீபங்களை எந்த குழப்பமும் இல்லாமல் செய்யுங்கள். அடுத்த பிறவியில் நீங்கள் தான் பிரதமர்.

* பிறந்த குழந்தையை கோயில் தரிசனத்திற்கு எவ்வளவு நாள் கழித்து அழைத்துச் செல்ல வேண்டும்?

குழந்தை பிறந்து 22 நாள் வரை தாய்க்கும் சேய்க்கும் தீட்டு உண்டு. எனவே அதன் பிறகு ஒரு நல்ல நாள் பார்த்து தரிசனத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

** தற்காலத்தில் புத்திர காமேஷ்டி யாகம் செய்கிறார்களா? விரும்புபவர்கள் எந்த தலத்திற்குச் செல்ல வேண்டும்?

புத்திர பாக்கியம் வேண்டி செய்யப்படுகிற இந்த யாகத்தை, பலர் தங்கள் இல்லங்களிலேயே செய்து கொள்கிறார்கள். நாகப்பட்டினம் மாவட்டம் திருவாவடுதுறை புத்திர காமேஸ்வரர் ஆலயம், திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆலயம் (நவக்கிரக புதன் ஸ்தலம்) ஆகியவை சிறப்புடையவை.

* கோயிலில் அரசமரம், வேப்ப மரம் இரண்டையும் சேர்த்து பக்தர்கள் வலம் வருகிறார்கள். இதன் முக்கியத்துவம் என்ன?

அரசமரம் விஷ்ணுவின் வடிவம். இதனை "அசுவத்த நாராயணர்' என்பர். இதன் அருகில் வேப்பமரம் வைத்து மகாலட்சுமியாக எண்ணி, "அ”வத்த விவாஹம்' எனப்படும் அரசவேம்பு கல்யாணம் செய்ய வேண்டும் என சாத்திரங்கள் கூறுகின்றன. இவற்றை வலம் வந்தால், ஸ்ரீ லட்சுமி நாராயணரை வலம் வந்த பலன் கிடைக்கும். திருமணத்தடை, புத்திரப்பேறின்மை நீங்கி இனிய இல்லறமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.

* மந்திரங்களின் வலிமையை அறிந்து கொள்ளும் வழி முறையைக் கூறுங்கள்.

இது கடையில் வாங்கும் மருந்தல்ல! சாப்பிட்டுப் பார்த்து வலிமையை அறிந்து கொள்ள! அல்லது அறிந்து கொண்டு பிரார்த்தனையைத் துவங்க! குருநாதரிடத்தில் அவர் கூறும் மந்திரத்தை உபதேசமாகப் பெற்று, அவரவர் நலனுக்காக நம்பிக்கையுடன் ஜபம் செய்தால் பலன் கிடைக்கும். இது விஷயத்தில் ஆராய்ச்சி வேண்டாம்.

* வழிபாட்டில் இருந்த விளக்கு உடைந்து விட்டது. அதை அகற்ற மனமில்லை. மீண்டும் பயன்படுத்தலாமா?

பயன்படுத்தக் கூடிய நிலையில் இருந்தால், தாராளமாக உபயோகிக்கலாம். தோஷம் எதுவும் கிடையாது. நல்ல பலனே ஏற்படும்.

No comments:

Post a Comment