Friday, March 9, 2012

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே --சிவானந்தர்



மார்ச் 16 - உலக உறக்க தினம்

மனிதனுக்கு கிடைத்த பெருஞ்சொத்து தூக்கம். ஆனால், இன்று மனஅமைதியின்மை, பேராசை காரணமாக அநேகமாக பலர் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மூன்றாவது வெள்ளிக்கிழமை உலக உறக்க தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நாளில், மருத்துவரும்,ஆன்மிக வித்தகருமான பத்தமடை செல்வர், சுவாமி சிவானந்தர், நல்ல தூக்கத்திற்காக அருளிய நல்லுரையைக் கேட்போமா!

* கவலையை விடு. கவலை ஆத்மசக்தியை அரித்து விடும். கவலைப்படுபவனால் தூங்க முடியாது. இறைவனைச் சரணடை. அவனையே நம்பி, தினமும் பிரார்த்தனை செய். கவலைப்படுவது பறந்து போகும். நல்ல நிம்மதியான தூக்கம் கிட்டும்.
* எப்போதும் மகிழ்ச்சியுடனிரு. இன்முகம் காட்டு. இறைவன் திருநாமத்தைப் பாடு. கவலைகள் ஓடிவிடும். நீ நிம்மதியாகத் தூங்குவாய்.
* தூங்கும் போது, மெல்லிய ஆடைகள் அணிந்து கொள். தடித்த போர்வைகளால் உடலை மூடிக்கொள்ளாதே. அவை உனது தூக்கத்தைக் கலைக்கும்.
* தூங்குவதற்காக போதை மருந்துகளை சாப்பிடாதே. போதைப்பழக்கம் உன்னை ஆட்கொள்ளும் முதல்நாளில், அதிலுள்ள மயக்க மருந்து சிறிது தூக்கத்தைக் கொடுக்கும். ஆனால், சில நாட்களுக்குப் பிறகு அரைபாட்டில் அபின் சாப்பிட்டால் கூட துளி தூக்கம் வராது. மேலும், போதைப்பொருள்கள் மனச்சோர்வை விளைவிக்கும். இயற்கை வழிகளிலேயே தூங்க முயற்சி செய்.
* பெருந்தீனி உண்ணாதே. வயிற்றுச்சுமையை குறை. எளிதில் ஜீரணமாகும். தூக்கமின்மைக்கு அஜீரணமும் ஒரு காரணம். மாலையில் சீக்கிரமாக உணவை முடித்துக் கொள். அது பாலும் பழமுமாக இருந்தால் நன்றாகத் தூக்கம் வரும்.
* உடலையும் உள்ளத்தையும் நெகிழ்த்தித் தளர்த்து. நிச்சயமாக, உனக்கு நல்ல தூக்கம் கிடைக்கும்.
* உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் அநாவசியமான பேச்சு வார்த்தை, விவாதங்களில் ஈடுபடாதே. உனது மனநிலையை சாந்தமாக வைத்துக் கொள்.
* காப்பியையும், தேநீரையும் அறவே விட்டுவிடு. அவை மூளைகளையும், நரம்புகளையும் தேவையில்லாமல் தூண்டி விடுகின்றன.
* நவீனங்கள், பிசாசுக்கதைகள், துப்பறியும் நாவல்கள், அசாதாரண கிளர்ச்சி நூல்களை படிக்காதே. இவை உனது நரம்புகளுக்கு அளவு கடந்த கிளர்ச்சியைத் தந்து தூக்கத்தைக் கெடுக்கும்.
* இரவில் தூக்கத்தின் இடையே எழ நேர்ந்தால் கடிகாரத்தைப் பார்க்காதே. கடிகாரத்தைப் பார்த்தால்கவலை வந்து விடும்.
* தூங்கும்போது அறையில் விளக்கெரிவதை தவிர்த்தல் நலம். ஒளியின்றி தூங்க முடியாதென்றால் டிம் லைட்களைப் பயன்படுத்துங்கள்.
* தூங்கும் முன் சிறிது பிரார்த்தனை, தியானம் செய்யுங்கள். உள்ளத்தை உயர்த்தும் கீதை, பாகவதம், பைபிள், குர்ஆன் ஆகிய சிறந்த நூல்களைப் படியுங்கள்

No comments:

Post a Comment