பீமன் வெகு நாள்களாக தன் மனத்தில் தேங்கிக் கிடந்த ஓர் ஆசையை அன்று எப்படியும் கண்ணனிடம் கேட்டு விடுவது என்று தீர்மானம் செய்து கொண்டான்.

“கண்ணா! எனக்கு உன்னுடைய மாயையைக் காண வேண்டும் என்று வெகுநாள்களாக ஆசை. நீ அந்த மாயையை எனக்கு காட்டித் தருவாயா? மாட்டேன் என்று மட்டும் கூறிவிடாதே” என்று ஸ்ரீ கிருஷ்ணனிடம் பீமன் கேட்டான்.

பீமனின் கேள்வியைக் கேட்டவுடன், வாய்விட்டுச் சிரித்தார், வேணுகோபாலன்.

“பீமா! நீ என்னையே நேரில் பார்க்கிறாயே! பிறகு எதற்கு மாயையைக் காட்டச் சொல்கிறாய்?” என்றார்.

“மாயக் கண்ணன் என்று கூறுவது மெய்தானா என்று புரிந்து கொள்ள வேண்டாமா? என்னை ஏமாற்றாமல் தயை காட்டு” என்றான் பீமன். “உன் விருப்பம் அதுவானால் எனக்கு மறுப்பில்லை. அதோ அங்கு தெரியும் ஆலமரத்தில் வந்து அமர்ந்து கொள். சரிதானே? மறந்து விடாதே. நடு இரவில் வந்து விடு” என்று கூறி விட்டு ஸ்ரீ கண்ணன் அகன்றார்.

பீமனுக்கு இருப்பே கொள்ளவில்லை. எப்பொழுது நடுநிசி வரும் என்று காத்துக் கொண்டிருந்தான்.

அவன் எதிர்பார்த்த அந்த நேரமும் வந்தது.

ஸ்ரீ கிருஷ்ணர் குறிப்பிட்ட அந்த ஆலமரமானது காட்டிற்குள் இருந்தது. அதற்கு அருகில் வேறு எந்தச் செடி, கொடி, மரமும் காணப்படவில்லை.

நடக்கும் தூரம் எவ்வளவு என்பதைக் கூட பீமன் கணக்கிடவில்லை. மதுசூதனன் குறிப்பிட்ட அந்த மரத்தினை அடைந்து, அதன் மேலே ஏறி அமர்ந்து கொண்டான்.

சிறிது நேரத்திற்கெல்லாம் அந்தக் காட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஓர் ஒளி வெள்ளம். ஒளிர்ந்தது.

அநேகம் பேர் அந்த இடத்தைத் துப்புரவாக சுத்தம் செய்தனர். பிறகு நான்கு பேர் ஒரு பெரிய சிம்மாசனத்தைத் தூக்கிக் கொண்டு வந்து நடுவில் வைத்தார்கள்.

அடுத்ததாக அதைவிடச் சிறிது சிறிய சிம்மாசனம் ஒன்றைக் கொண்டு வந்தார்கள். அதற்கடுத்து மூன்று ஜோடி சிம்மாசனங்கள் போடப்பட்டன. மீண்டும் ஐந்து ஆசனங்களும், இறுதியில் ஒரேமாதிரியான இருக்கைகளும் வரிசையாக இடப்பட்டன.

‘இத்தனை ஆசனங்கள் எதற்கு? யார், யார் அமர்ந்து கொள்ளப் போகிறார்கள்?, என்கிற ஆவல் பீமனுக்கு உண்டானது.

பணியாட்களெல்லாரும் நின்று கொண்டிருக்க தேவலோகத்தில் இருந்தவர்களெல்லாரும் கடைசியில் இடப்பட்ட இருக்கைகளில் அமர்ந்து கொண்டார்கள்.

அடுத்து யுதிஷ்டிரர், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் நால்வரும் அமர்ந்து கொண்டனர்.

சிறிது நேரத்தில் உமா, மகேஸ்வரன், லக்ஷ்மி, விஷ்ணு, சரஸ்வதி, பிரும்மா ஆகிய மூன்று தேவத்தம்பதிகளும், மூன்று ஜோடி இருக்கைகளில் அமர்ந்து கொண்டனர்.

அவர்களைத் தொடர்ந்து மயிலிறகு அசைய அந்தப் பீதாம்பரதாரியான ஸ்ரீ கண்ணன் சிறிய சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டார்.

பீமனுக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘ஸ்ரீ கண்ணனைவிட உயர்ந்தவர் யாராக இருப்பார்? நடுவில் போடப்பட்டிருக்கும் சிம்மாசனத்திற்கு உரியவர் யார்?’ என்கிற கேள்வி அவனுடைய ஆவலை அதிகமாக்கியது.

திடீரென்று கீழே சலசலப்பு அதிகமானது. எல்லாரும் (ஸ்ரீ கிருஷ்ணர் உட்பட) எழுந்து நின்றார்கள்.

“பகவதி தாயார் வருகிறார்கள்” என்கிற குரல் மட்டும் பீமனுக்குக் கேட்டது.

திரௌபதியானவர் நடுவில் போடப் பட்டிருந்த பெரிய இருக்கையில் தான் அமர்ந்து கொண்டு, மற்றெல்லாரையும் அமர்த்தினார்.

பீமனுக்கு வியப்பு தாளவில்லை. ‘எல்லாரையும் விட உயர்ந்தவளா திரௌபதி?’ என்று சிறிது கலவரப்பட்டுப் போனான்.

‘அங்கே ஓர் இருக்கை காலியாக இருக்கிறதே! யார் இன்னும் வரவில்லை?’ என்றார் பகவதி.

நாரதர் பவ்யமாக எழுந்தார். ‘இன்னும் பீமன் மட்டும் தான் வரவில்லை. மற்றவர் எல்லாரும் இங்குதான் இருக்கிறோம்’ என்று பதிலளித்தார்.

“எங்கே இருக்கிறான் பீமன்? அவனை இழுத்து வாருங்கள் இங்கே!” என்கிற பகவதியின் குரலுக்கு. ‘இதோ இந்த ஆலமரத்தின் மீதுதான் அமர்ந்து கொண்டிருக்கிறான்” என்று நாரதமுனி மீண்டும் பதிலளித்தார்.

பீமனுக்கு பயத்தால் உடலே நடுங்கியது. வியர்வை வெள்ளமாக வழியத் தொடங்கியது.

“இதோ நானே வந்து விடுகிறேன்” என்று கூறியபடி மரத்திலிருந்து கீழே குதித்தான். கீழே இறங்கிப் பார்த்த பொழுது, மரத்தின் மேலே அமர்ந்து பார்த்த எந்தவிதக் காட்சியும் நடந்தேறியதற்கு உண்டான அறிகுறியும் அந்த இடத்தில் தெரியவில்லை.

“கண்ணா.. கண்ணா...! எனக்குப் பயமாக இருக்கிறது. என்னைக் காப்பாற்று.” என்று குரல் விறைக்கக் கத்தினான் பீமன்.

அந்தக் காட்டில், அந்த வேளையில், அவனுடைய குரல் எல்லாத் திக்குகளுக்கும் கேட்டது.

அடுத்த கணம் பீதாம்பரதாரி பீமனின் முன்னால் காட்சி கொடுத்தார்.

‘என்ன பீமா! பயந்து விட்டாயா?’ என்றார்.

‘ஆமாம் கண்ணா! உன் மாயையை ஒரு பொழுதும் எனக்கு இனிமேல் காட்டாதே. என்னை ஆசிர்வாதம் செய்” என்று அவரின் முன்னால் காலில் விழுந்து நமஸ்காரம் செய்தான் பீமன்.

“கவலைப்படாதே பீமா! என்னுடைய மாயையினால் உனக்கு எந்த விதப் பாதகமும் வராது. தைரியமாக வீட்டிற்குப் போ.” என்று ஸ்ரீ கிருஷ்ணர், பீமனை வழியனுப்பி வைத்தார்