Sunday, April 1, 2012

கோபம் கொள்ளலாமா? ஆன்மிக கதை


ஒரு பெற்றோருக்கு முருகன் என்ற மகன் இருந்தான். சிறு சிறு விஷயங்களுக்கு கூட பெற்றோரிடமும், நண்பர்களிடமும் கோபப்படுவான். இதனால், நண்பர்கள் அவனை விட்டு விலகி விட்டனர்.
தன்னை யாருமே அண்டாததால், அவனது கோபம் மேலும் அதிகமானது. சில வேளைகளில் அந்தக் கோபத்தை மூர்க்கத்தனமாக பெற்றோர் மீது காட்டினான். பாத்திரங்களை உடைத்தெறிவான். பெற்றோருக்கு மனக்கஷ்டத்துடன், பொருள் இழப்பால் பணக்கஷ்டமும் ஏற்பட்டது.
ஒருநாள், அவனது தந்தை கைலாசம் மகனை அழைத்தார்.
""முருகா! நீ செய்வது உனக்கே நன்றாக இருக்கிறதா! உன் கோபத்தால் எவ்வளவு பொருள் இழப்பு, அது மட்டுமா? உன்னை நாடி வருபவர்களும் குறைந்து விட்டார்கள். பள்ளிக்குச் சென்ற நீ, அங்கே பிள்ளைகளை அடித்ததால் நிர்வாகம் உன்னை நீக்கி விட்டது. படிப்பு பாழானது. ஆனாலும், திருந்த மறுக்கிறாய். உனக்கு கோபம் வருவதன் காரணம் தான் என்ன?'' என்றார்.
""எல்லாரும் என்னைக் கோபப்படுத்துகிறார்கள், என் விருப்பப்படி தான் எல்லாம் நடக்க வேண்டும். சூரியனும், சந்திரனும் என்னைக் கேட்டு தான் எழ வேண்டும், மறைய வேண்டும் என்ற கொள்கையுடைய வன் நான். என் சொல் எடுபடாததால், நான் கோபிக்கிறேன். நீங்களும், அம்மாவும் இனி நான் சொல்வதைக் கேட்டு நடந்து கொள்ளுங்கள். கோபப்படுவதை நிறுத்தி விடுகிறேன்,'' என்றான்.
அந்தக் கஷ்டத்திலும் கைலாசம் உலர்ந்த சிரிப்பொன்றை உதிர்த்தார்.
""உன் இஷ்டப்படியே ஆகட்டும். ஆனால், ஒரு நிபந்தனை . நீ கோபப்படும் சமயமெல்லாம், இந்தப் பெட்டியிலுள்ள ஆணியை எடுத்து அந்த மரத்தில் அடிக்க வேண்டும்,'' என்றார்.
முருகனுக்கு அவர் ஏன் அவ்வாறு செய்யச் சொல்கிறார் என்பது புரியவில்லை. இருந்தாலும், தலையாட்டி வைத்தான்.
அன்றுமுதல், அவன் கோபப்படும் சமயங்களில் ஆணிகளை எடுத்து அடித்தான். முதல்நாள் பத்து ஆணி அடிக்கப்பட்டது. மறுநாள், மரத்தின் அருகே சென்றான்.
""சே...இந்தளவுக்கா கோபப்பட்டிருக்கிறோம், கஷ்டமாக இருக்கிறதே!''என்று நினைத்தான்.
அதற்காக மறுநாள் கோபப்படாமல் இல்லை. ஆனால், எண்ணிக்கை ஏழாகக் குறைந்து விட்டது.
இப்படியே ஆறு, ஐந்து, மூன்று எனக் குறையவே, மறுநாள் சிந்திக்க ஆரம்பித்து விட்டான்.
""அப்படியானால், என்னால் கோபிக்காமலும் இருக்க முடியும் என்பது இந்த ஆணிகளின் எண்ணிக்கையில் இருந்ததே நிரூபணம்
ஆகிறது,'' என எண்ணிய வேளையில், கைலாசம் அவனை அழைத்தார்.
""முருகா! இனி நீ ஆணி அடிக்க வேண்டாம். அடித்த ஆணிகளைப் பிடுங்கு,'' என்றார்.
அவனும் அர்த்தம் புரியாமல் அவற்றைப் பிடுங்கினான்.
ஆணியைப் பிடுங்கிய இடங்களில் துவாரமாயிருந்தது. சில இடங்களில் பால் கசிந்து, மரத்தை அசுத்தப்படுத்தியிருந்தது.
""பார்த்தாயா முருகா! நீ மரத்தில் அடித்த ஆணி எந்தளவுக்கு துளை ஏற்படுத்தி அசுத்தப்படுத்தி உள்ளதை! மரத்திலேயே இந்தளவுக்கு துவாரம் விழுந்தால், உன் சொல்லால் புண்பட்ட இதயங்கள் எத்தனை இருக்கும்! மரத்தில் பால் வழிந்தது போல், அவர்களும் கண்ணீர் வடித்திருப்பார்களே! அவர்களது தாமரை போன்ற முகம் கூம்பிப் போய் இருக்குமே! சிந்தித்துப் பார்,'' என்றார்.
முருகனுக்கு கண்ணீர் வந்துவிட்டது.
அன்று முதல் அவனுக்கு ஆணியும், சுத்தியலும் தேவைப்படவில்லை.

No comments:

Post a Comment