Sunday, June 17, 2012

ஹோமகுண்டத்தில் போடப்படும் பட்டுப்புடவையை ஏழைகளுக்குக் கொடுத்தால் புண்ணியம் தானே?


** ஹோமகுண்டத்தில் போடப்படும் பட்டுப்புடவையை ஏழைகளுக்குக் கொடுத்தால் புண்ணியம் தானே?

வயலில் போடும் விதை நெல்லை ஏழைகளுக்குக் கொடுத்தால் என்ன என்பது போன்றது தான் உங்கள் கேள்வி. ஹோமத்தில் போடும் ஒரு புடவையை எத்தனை ஏழைகளுக்குக் கொடுப்பீர்கள். வயலில் இட்ட நெல் பன்மடங்காகப் பெருகி எல்லோருக்கும் பயன்தருவது போல ஹோமத்தில் இடும் திரவியங்கள் எல்லாம் நம்மையே திரும்ப வந்தடைகின்றன. ஹோமத்தை ஏற்கும் அன்னை, மழை பொழியச் செய்தும், பருத்தி, பட்டு என எல்லாவற்றையும் விளையச் செய்தும் அருள்புரிவாள்.

* ஒருவனுக்கு ஒருத்தி என்ற நம் பண்பாடு கடவுள் வழிபாட்டில் இல்லாமல் இருப்பது ஏன்?

ஒரு சில தெய்வங்கள் இரு சக்திகளோடு இருப்பது தத்துவங்களின் அடிப்படையில் தான். இதனை இரண்டு பெண்டாட்டிக்காரன் கதையாக எடுத்துக் கொள்வது தவறு. மனிதவாழ்வில் கூறப்படும் மனைவி வேறு. தெய்வநிலையில் சக்தி என்பது வேறு. காக்கும் தொழிலைச் செய்பவர் விஷ்ணு. நாம் வாழ்வதற்கு பூமியும், செல்வமும் தேவைப்படுகின்றன. இதனை இரு சக்திகளாக அதாவது தனது திறன்களாக விஷ்ணு ஏற்றுக்கொண்டு செயல்படுகிறார். ஒன்று ஸ்ரீதேவியாகிய செல்வம். மற்றொன்று பூதேவியாகிய பூமி. ஒரு பொருளை நாம் விரும்புகிறோம். நமது விருப்பம் சரியா தவறா என்று அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து பிறகு அதை அடைய முயல்கிறோம். விருப்பம், அறிவு, செயல் என மூன்றும் சேர்ந்தால் தான் ஒருவிஷயம் நிறைவுபெறும்.
இம்மூன்றும் முருகப்பெருமான் வடிவம். விருப்பம் என்னும் இச்சாசக்தி வள்ளி, அறிவு என்னும் ஞானசக்தி முருகன், செயல் என்னும் கிரியாசக்தி தெய்வானை. எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தெய்வங்களுக்குரிய சக்தியை மனைவியாகச் சித்தரித்துள்ளனர். சக்தியைப் பெண்ணாக்கி வழிபடுவது நம் மரபு.

* பவுர்ணமியன்று முடிவெட்டக்கூடாது என்பது உண்மை தானா?

நாம் செய்யும் காரியம் நம்மை மட்டும் பாதிப்பதில்லை. நம் சுற்றத்தாரையும் பாதிக்கும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. காலவிதானம் என்னும் நூலில், குறிப்பிட்ட சில திதிகள், நட்சத்திரங்களில் சவரம் செய்து கொண்டால், குறிப்பிட்ட உறவினர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுகிறது.

* குரு உபதேசம் இல்லாமல் மந்திரம் ஜெபிக்கக்கூடாதா?
மந்திரம் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. இதனை அதிகமாக ஜெபம் செய்தவர்களிடத்தில் மகிமை பெருகியிருக்கும். பிறருக்கு உபதேசிக்கும்ஆற்றல் இவர்களுக்கு மட்டுமே உண்டு. இவர்களை அடையாளம் காண்பது கடினமான விஷயம். அவர்களை குருநாதராக ஏற்று உபதேசம் பெறும் மந்திரமே தெய்வத்தால் அங்கீகரிக்கப்பட்டதாகும். ரிசர்வ் வங்கி மூலம் அச்சடித்த பணமே செலாவணிக்குரிய உண்மைப் பணமாகும். அதையே நாம் அச்சடித்தால் போலியாகிவிடும். பணத்திற்கு அரசு அங்கீகாரம் எவ்வளவு முக்கியமானதோ, அதேபோல ஜபத்திற்கு குருஉபதேசம் முக்கியமானது.

* கன்னிப்பெண்கள் விரைவில் திருமணம் நடந்தேற எந்தக் கடவுளை வழிபட வேண்டும்?

படிப்பு வேலை என்று பல காரணங்களைச் சொல்லி பெண்கள் திருமணத்தைத் தட்டிக் கழித்து விடுகின்றனர். வெள்ளிக்கிழமையில் காலையும், மாலையும் துர்க்கையை வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும்.

No comments:

Post a Comment