Sunday, June 17, 2012

சூரியோதயத்திற்கு முன் ஜபம் செய்ய நல்லநேரம் பார்க்கத் தேவையில்லை என்கிறார்களே ஏன்?


* சூரியோதயத்திற்கு முன் ஜபம் செய்ய நல்லநேரம் பார்க்கத் தேவையில்லை என்கிறார்களே ஏன்?

சூரியோதயத்திற்கு முன் விடியற்காலை 4.30-6மணி வரை பிரம்ம முகூர்த்தம். இரவில் தூங்கி மீண்டும் எழுவதே ஒரு மறுபிறப்பு தான். பிறப்பு என்பது படைத்தல் அதாவது சிருஷ்டி சம்பந்தப்பட்டது. சிருஷ்டியைச் செய்யும் பிரம்மனின் பெயரால், ஒருநாளின் துவக்க நேரத்தை பிரம்ம முகூர்த்தம் என குறிப்பிடுவர். இவ்வேளைக்கு தோஷம் என்பதே கிடையாது. நேரம் பார்த்து செய்ய இயலாத ஒருசில அவசியமான சுபநிகழ்வுகளை பிரம்மமுகூர்த்தத்தில் செய்யலாம்.

* எனக்கு அறுபதாகும் போது மணிவிழா செய்ய இயலவில்லை. மனைவிக்கு 60 வயது ஆகும்போது சஷ்டியப்த பூர்த்தி செய்யலாமா?

உங்களுக்கு 60வயது பூர்த்தியான பொழுது செய்திருந்தால் அது சஷ்டியப்த பூர்த்தி. இதுவே உங்களுக்கும், மனைவிக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் நலன் கிடைக்கச் செய்யப்படுவதாகும். மனைவிக்கு 60வயதாகும்போது குடும்பத்தில் எல்லோருக்குமாக ஆயுள்ஹோமம் செய்யுங்கள். இது பொதுவான விஷயம் தான் என்றாலும், உங்களின் மணிவிழாவாக நினைத்து செய்து கொள்ளுங்கள்.

* குழந்தைக்கு ஏற்படும் பாலாரிஷ்டதோஷத்திற்குப் பரிகாரமாக யாரை வழிபடவேண்டும்?

பாலாரிஷ்டம் நீங்க சாந்தி ஹோமம் செய்வது நன்மை தரும். வேதவிற்பன்னர்களைக் கேட்டால் வழிகூறுவார்கள். பொதுவாக முருகன், சந்தானகோபாலன், மாரியம்மன், பேச்சியம்மன் ஆகிய தெய்வங்களை வழிபடுவது நன்மை தரும்.

** கோயில் கிணற்றில், குளத்தில் பக்தர்கள் காசைப் போடுவது ஏன்?

ஒருவர் போட்டுத் துவங்கி வைக்கிறார். ஏன் எதற்கு என்று கூட சிந்திக்காமல் எல்லோரும் அதைச் செய்கின்றனர். இதைச் செய்யாதவர்களை செய்தவர்கள் தூண்டுவது தான் வேடிக்கை. தேவையில்லாத ஒன்றை பலநாட்கள் செய்யப்பழகிவிட்டால் அது வழக்கமாகி விடுகிறது. கேள்வி என்று வரும்போது என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் யோசிக்க வைத்து
விடுகிறார்கள்.

ஸ்ரீசக்ரம் என்பது என்ன? அதை பிரதிஷ்டை செய்வதன் நோக்கம் என்ன?

சக்தியந்திர வழிபாடுகளில் மிக உயர்ந்தது ஸ்ரீசக்ரம். யந்திர ராஜா என்ற இதனைக் கூறுவர். ஒரே அளவிலான 43 முக்கோணங்களைக் கொண்டது இந்த யந்திரம். சிவாலயங்களில் உள்ள மனோன்மணி எனப்படும் அம்பாள் சந்நிதிகளில் இச்சக்கரத்தைப் பிரதிஷ்டை செய்ய ஆகமநூல்களில் கூறப்படவில்லை. துர்க்கை, ராஜேஸ்வரி, லலிதாம்பிகை போன்ற தெய்வங்களுக்கு பிரதிஷ்டை செய்வதும், யந்திரத்தைத் தனியாக வழிபாடு செய்வதும் வழக்கில் இருந்தது. சக்திவாய்ந்த இதனை வழிபடுபவர்களுக்கு எல்லா நலன்களும் உண்டாகும். உபதேசம் பெற்று உரிய நியமங்களை அறிந்து ஸ்ரீசக்ரத்தை வழிபடவேண்டும். 

No comments:

Post a Comment