Thursday, June 21, 2012

சமயோசித புத்தி


சமயோசித புத்தி இல்லாவிட்டால், வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது என்கிறாள் ஒரு மகாராணி. அவளது கதையைக் கேட்போமா!
கலிங்கநாட்டை சிம்ம மகாராஜா ஆண்டு வந்தான். அவனது மனைவி திலகவதி. ராஜா திறமைசாலி என்றாலும், திலகவதியின் அளவு புத்திசாலியல்ல. ஆனாலும், மனைவியே மந்திரி போல் அமைந்து விட்டதால், இக்கட்டான சூழ்நிலைகளில் அவள் சொல்லும் யோசனைகளைச் செயல்படுத்தி நிர்வாகத்தை சீராக நடத்தினான் சிம்மராஜா.
ஒருமுறை, அவனது நாட்டிற்கு ஒரு பூதம் வந்தது. மக்களை தாறுமாறாகப் பிடித்து தின்ன ஆரம்பித்தது.
மக்கள் ராஜாவிடம் முறையிட்டனர். அவன் சில வீரர்களை அனுப்பி, அதைப் பிடித்துக் கட்ட உத்தரவிட்டான். ஆனால், பூதம் அந்த வீரர்களை அவர்கள் கொண்டு வந்த ஆயுதங்களுடன் விழுங்கி விட்டது.
சிம்மன் நூற்றுக்கும் மேற்பட்ட மல்யுத்த வீரர்களை அனுப்பி, அதை ஒரே அமுக்காகக் கட்டித் தூக்கி வர உத்தரவிட்டான்.
பூதமோ, அவர்களை ஒரே வாயில் போட்டு மென்று விட்டது.
"ஆஹா...இது அமானுஷ்ய சக்தி கொண்டதாக இருக்கும் போல் தெரிகிறதே! என்ன ஆனாலும், சரி...நானே நேரில் சென்று பூதத்தைப் பிடித்து வருகிறேன்' என சிம்மன் கிளம்பி விட்டான்.
பூதத்தைப் பிடிக்க முயன்றான். அது அவன் பிடியில் அகப்படவில்லை.
""ராஜா! பலநூறு வீரர்களை விழுங்கிய நான், உன் ஒருவனை விழுங்குவதில் தடையேதும் இராது என்பதை நீ அறிவாய். இருப்பினும், நான் நல்லவர்க்கு நல்லவன். மக்களுக்கு கஷ்டம் என்றதும், நீயே நேரில் வந்து அவர்களின் குறைதீர்க்க முயல்கிறாய். இந்த எண்ணத்தைப் பாராட்டுகிறேன். மேலும், உன் நாட்டில் மக்கள் குறைந்த வரி செலுத்தி நிறைவாக வாழுகிறார்கள். இதனாலும் உனக்கு நான் நன்மை செய்ய விரும்புகிறேன். நீ எனக்கு வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அதை முடித்தவுடனே அடுத்த வேலையைத் தந்து விட வேண்டும். இல்லாவிட்டால், உன்னை விழுங்கி விடுவேன்,'' என்றது.
ராஜாவும் பூதத்துடன் அரண்மனைக்கு வந்தான்.
""பூதமே! மக்கள் வசிக்க பத்து லட்சம் மாளிகைகள் வேண்டும், உடனே கட்டு,'' என்றான்.
பத்தாவது நிமிடத்தில் பூதம் அவனை இழுத்துக் கொண்டு வெளியே வந்தது. அவனது நாடெங்கும் மாளிகைகள் ஜொலித்தன. ""உம் அடுத்த வேலை,'' என்றது. ஆச்சரியப்பட்ட மன்னன், ""என் நாட்டிலுள்ள கிணறு, குளம், ஆறுகளைத் தூரெடுத்து வா,'' என்றான். அப்போது ராணி திலகவதி வந்தாள்.
அவளிடம் தன் இக்கட்டான நிலையைச் சொன்னான் சிம்மன்.
""இதற்காகவா கலங்குகிறீர்கள்! அந்த பூதத்தை என்னிடம் அனுப்பி வையுங்கள், நான் பார்த்துக் கொள்ளுகிறேன்,'' என்றாள்.
மன்னன் எதிர்பார்த்தது போல. ஐந்தே நிமிடங்களில் தூரெடுத்து திரும்பிய பூதத்தை, ""மகாராணியிடம் ஏதோ வேலை இருக்கிறதாம்! அங்கே போய் கேள்,'' என்றான்.
பூதம் ராணியின் முன்னால் வந்து, ""வேலை கொடு, இல்லாவிட்டால் உன்னை விழுங்கி விடுவேன்,'' என பயமுறுத்தியது.
""கொஞ்சம் பொறு,'' என்றவள், தன் கூந்தலில் இருந்து ஒரு முடியை எடுத்தாள்.
""பூதமே! இதை 108 ஆக கிழிக்க வேண்டும். கிழித்த ஒவ்வொரு துண்டின் மீதும் ஒவ்வொரு கோட்டை கட்டு,'' என்றாள்.
முடியை வாங்கிய பூதம் ஒரு வாரம் கழித்து சிரமப்பட்டு அதை எப்படியோ இரண்டாகக் கிழித்தது. அடுத்து அதனால் அதை அசைக்கக்கூடமுடியவில்லை. ராணியிடம் மன்னிப்பு கேட்டது.
""பூதமே! நான் கூப்பிடுகிற நேரத்தில் வந்து, கொடுக்கிற வேலைகளைச் செய்தால் போதும், பயமுறுத்தல் எல்லாம் கூடாது, புரிகிறதா? போ இங்கிருந்து..'' என அதட்டினாள்.
பூதம் தலை குனிந்தபடியே வெளியேறியது.
இக்கட்டான சூழ்நிலைகளில், சமயோசிதம் ரொம்ப அவசியம்...புரிகிறதா!

No comments:

Post a Comment