Wednesday, August 22, 2012

உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டதால் தான்!இறைவனை எளிதாக நெருங்க முடியும்

"சுவாமி விவேகானந்தர். "நீங்கள் கீதை வாசிப்பதை விட கால்பந்து விளையாடுவதன் மூலம் இறைவனை எளிதாக நெருங்க முடியும்,'' என்று இளைஞர்களுக்கு அறிவுறுத்துகிறார் சுவாமி விவேகானந்தர். கீதையை கடைபிடிக்க வேண்டுமானால், இளைஞர்கள் உடல் வலிமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். கடோபநிஷதம் என்ற நூலில், "பலமில்லாதவன் ஆன்ம சாட்சாத்காரம் பெற முடியாது' என்று சொல்லப்பட்டிருக்கிறது. * ஜான் கென்னடி அமெரிக்க அதிபராக இருந்தபோது, ஆரம்பப்பள்ளி சிறுவர்கள் அனைவரும் பாடங்கள் தொடங்கும் முன் ஒரு கி.மீ., தூரமாவது ஓட வேண்டும், அதை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என ஆணையிட்டார். * தேசத்தலைவர் பாலகங்காதர திலகர் கணிதத்தில் எம்.ஏ., மற்றும் சட்டப் படிப்பில் பட்டம் பெற்றவர். அவர் கல்லூரியில் பயின்ற காலத்தில் நோஞ்சானாக இருந்ததால், படிப்பை மூட்டை கட்டி வைத்து விட்டு, ஓராண்டு காலம் ஒரு உடற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்தார். அவ்வாறு செய்ததே பிற்காலத்தில் பல இடங்களில் சிறையில் அடைக்கப்பட்ட போது, அங்கு நடந்த கொடுமைகளைத் தாங்க தனக்கு பேருதவியாக இருந்தது என்கிறார். * ஆரியசமாஜத்தை நிறுவிய சுவாமி தயானந்த சரஸ்வதி, ராமகிருஷ்ணரின் சமகாலத்தவர். இவர்தன் மாணவர்களுக்கு வேதம் கற்றுக்கொடுப்பார். அத்துடன் மற்போரும் (பாக்சிங்) பயிற்சி அளிப்பார். * கட்டான தசைகளும் பலமான நரம்புகளும் இருந்தால் தான் மனதில் எழும் தீய ஆசைகளை கட்டுக்குள் வைக்கும். கோபம், பொறாமை, காமம் ஆகிய கீழான ஆசைகளில் இருந்து மாணவர்கள் விலகியிருக்க வேண்டும். உடல் வலுவைப் பெருக்கிக் கொண்டால் இது சாத்தியமே. * விவேகானந்தர் ஒருமுறை இமயமலையிலுள்ள மாயாவதி ஆஸ்ரமம் முன்பு குதிரைச்சவாரி செய்து கொண்டிருந்தார். அவரது சீடர்களான ஞான், காளி கிருஷ்ணர் ஆகியோர் அவருக்காகக் காத்திருந்தனர். அவர்களைக் கவனிக்காதது போல் கடந்து சென்று விடுவதென நினைத்த சுவாமிஜி, வேகமாக அவர்கள் இருக்கும் இடத்தைக் கடக்க முயன்றார். ஆனால், ஞான் பாய்ந்து வந்து குதிரையின் லகானை இழுத்து நிறுத்திவிட்டார். குதிரையில் இருந்து இறங்கிய சுவாமிஜி, ""சபாஷ்! வேகமாகச் சென்ற குதிரையை நிறுத்திவிட்டாயே!'' எனப் புகழ்ந்தார். * மேற்கத்திய விளையாட்டுகளில், விவேகானந்த ருக்கு கால்பந்து மிகவும் பிடிக்கும். அது விளையாடுபவரின் தசைகளைக் கட்டமைக்கும். தைரியத்தை வளர்க்கும். * தன் உடலை முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருக்க உடற்பயிற்சி உதவும். ஒரு உடற்பயிற்சி கலைஞன் எந்த விளையாட்டிலும் தேர்ச்சி பெற்று திகழ்வான். * சென்னை மெரீனா கடற்கரையில் ஒரு மற்போர் வீரர் பயிற்சி செய்து கொண்டிருப்பதை விவேகானந்தர் பார்த்தார். அவரிடம் சென்று, தன்னுடன் பயிற்சிப்போருக்கு வரும்படி கேட்டார். அந்த நபரும் சம்மதிக்கவே இருவரும் மோதினர். அந்த நபர் தோற்றார். சுவாமியிடம் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். இதற்கு காரணம் சுவாமி தனது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டதால் தான்!

No comments:

Post a Comment