Thursday, August 23, 2012

வள்ளுவர் சிந்தனைகள்

* கடவுளின் திருவடி என்னும் தோணியில் ஏறிக் கொண்டால் பிறவிக்கடலை நம்மால் எளிதாகக் கடக்க முடியும். * மழை பெய்யாவிட்டால் உலக வாழ்வு நடைபெறாது. இன்னும் சொல்லப்போனால், மக்களிடம் ஒழுக்கமும் இல்லாமல் போய்விடும். * நாளை பார்க்கலாம், நல்ல நாள் பார்த்து தர்மம் செய்யலாம் என்று இல்லாமல், இன்றே தர்மம் செய்து விடுங்கள். (ஏனெனில், நாளை என்பது நிச்சயமில்லை) செய்த தர்மம் இப்பிறவியில் மட்டுமல்லாமல் எப்போதும் துணைநிற்கும். * தர்மத்தைப் பின்பற்றி குடும்ப வாழ்வு நடத்துபவன் ஆசைகளில் இருந்து விடுபட முயற்சிக்கும் துறவியை விட மேலானவன். * கற்பு என்னும் மனவலிமை பெண்ணிடம் இருந்து விட்டால் அதைவிடச் சிறந்த விஷயம் உலகில் வேறு என்ன இருக்க முடியாது. * சிறையில் பூட்டி வைத்து பெண்ணைக் காப்பாற்ற முடியாது. பெண் என்பவள், தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதே சிறந்த பாதுகாப்பாகும். * பழிச்சொல்லுக்கு ஆளாகாத நல்ல பிள்ளைகளைப் பெற்றவனிடம் ஏழேழு பிறவியிலும் துன்பம் நெருங்குவதில்லை. * பாலை நிலத்தில் பட்டமரம் தளிர்ப்பதால் எந்த பலனுமில்லை. அதுபோல் மனிதனாய் பிறந்தும் மனதில் அன்பு இல்லாவிட்டால் அவனால் சமூகத்துக்குப் பயனில்லை. * வீட்டில் விருந்தினர் அமர்ந்திருக்க, சாகாவரம் தரும் அமிர்தமாகவே இருந்தாலும் தான் மட்டும் தனித்து உண்பது கூடாது. * இனிய சொற்களைப் பேசுவதால் இன்பம் உண்டாகும் என்பதை அறிந்திருக்கிறீர்கள். அப்படியிருந்தும் பிறர் மனம் நோகும்படி கொடிய சொற்களைப் பேசுவானேன்! * சரியான நேரத்தில் செய்யும் உதவி சிறிதாக இருந்தாலும், அதன் மதிப்பு பரந்த உலகத்தை விடப் பெரியது. * பழிச்செயலைச் செய்தாலும் கூட மீள்வதற்கு வழியுண்டு. ஆனால், ஒருவர் செய்த நன்றியை மறந்த பாவத்தில் இருந்து மீள வழியில்லை. * ஒருவனால் எதைக் காக்க முடியாவிட்டாலும், நாக்கைக் காத்துக் கொள்வது அவசியம். இல்லாவிட்டால் கொடிய துன்பத்திற்கு ஆளாக நேரிடும். * ஒழுக்கமாக வாழ்வதே மனிதன் உயர்வதற்கு வழி. உயிருக்கும் மேலாக ஒழுக்கத்தை மதித்துப் போற்றுங்கள். * உண்ணாமல் விரதம் மேற்கொள்வதை விட, பிறர் சொல்லும் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்வது மேலான விரதம். * பிறரது வளர்ச்சி கண்டு பொறாமைப்படுபவனிடம், செல்வத்திற்கு அதிபதியான திருமகள் தன் மூத்த சகோதரியை இருக்கும்படி செய்து விடுவாள். * பேசுவதாக இருந்தால் பயனுடைய நல்ல சொற்களைப் பேசுங்கள். பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் பேசுவது கூடாது. * மறந்தும் பிறருக்கு தீங்கு நினைப்பது கூடாது. அவ்வாறு நினைத்தவனுக்கு தீங்கு செய்ய வேண்டும் என்று அறக்கடவுள் எண்ணி விடுவார். * பொருள் இல்லாவிட்டால் இம்மண்ணுலகத்தில் வாழ முடியாது. அதுபோல, அருள் இல்லா விட்டால் விண்ணுலகத்தில் வாழ முடியாது. * மாமிச உணவு வேண்டாம் என்று உயிர்களைக் கொல்லாமல் வாழ்பவனை, உலக உயிர்கள் இருகரம் கூப்பி வணங்கும்.

No comments:

Post a Comment