Wednesday, September 26, 2012

இறைவனுடைய சரீரங்கள்

உயிர்களாகிய நாம் அனாதியாகவே மலங்கள் என்னும் ஆன்மீக அழுக்கினால் பீடிக்கப்பட்டவர்கள். ஆதலினால் பாசமாகிய ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்களில் ஒன்றான மாயையில் இருந்து நமக்கு உடம்புகள் வந்து பொருந்துகின்றன. மாயை என்பது இருளிலே கயிற்றைப் பாம்பாகக் காணும் மயக்கமாகிய இல் பொருள் அல்ல. எமது உலகங்கள், உடல்கள், மனம் போன்ற கருவிகள் மற்றும் அனுபவங்களுக்கெல்லாம் மூலப்பொருளாய் (Primordial Matter), முப்பத்தாறு தத்துவங்களுக்கும் மூலமாய் இருக்கும் உள் பொருளே மாயை. இறைவன் இயல்பாகவே மலங்கள் இல்லாதவன்; ஆதலினால் மலங்கள் மூன்றனுள் ஒன்றாகிய மாயையில் இருந்து அவனுக்கு உருவம் அமைவதில்லை. “பதியினைச் சென்றணு காப்பசு பாசம்… - திருமந்திரம் பாடல் 115-. But the Pasu-Pasa nears not the Pati supreme -Thiru Manthiram Song 115- இறைவன் தத்துவாதீதன்; அதாவது பஞ்ச பூதங்கள் முதல் நாதம் வரையான முப்பத்தாறு தத்துவங்களுக்கும் அப்பாலானவன். இறைவனுக்கு நம் போன்ற பஞ்ச பூத சரீரம் இல்லை. இறைவனுடைய சரீரங்கள் மாயையினால் ஆனவை அல்ல; மாயா சம்பந்தம் இல்லாதவை. மாயையானது பாசமாகிய மூன்று மலங்களுள் ஒன்றாகும். இறைவன் இயல்பாகவே பாசங்களில்நின்றும் நீங்கியவன். இது இறைவனின் எண்குணங்களில் ஒன்று. தூய உடம்பினன் ஆதல் இறைவனின் எண் குணங்களில் மற்றொன்று. “கோள்இல் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை” என்று இறை எண் குணங்கள் உடையவன் என்று தமிழ் மறையாகிய திருக்குறள் கூறுகின்றது. 1. சச்சிதானந்த சொரூபம்: “ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமிலாதானுக்கு… - திருவாசகம்- இறைவனுக்கு சொரூப நிலை என்னும் சிறப்பு நிலையில் உருவம் இல்லை. இந்நிலையில் அவன் சச்சிதானந்த சொருபி. சத்-சித்- ஆனந்தமே வடிவானவன். சத் என்பது என்றும் உள்ள நிலையான பொருள். சித் என்பது முற்றறிவு என்னும் பேரறிவு. “அதுஇது என்னாது அனைத்து அறிவு ஆகும் அது இது என்றறிந்து உந்தீபற அவிழ்ந்த சடையான் என்று உந்தீபற” – திருவுந்தியார்- “அந்தமொன்றில்லா ஆனந்தம் பெற்றேன்” - திருவாசகம்-. ஆனந்தம் என்பது எல்லையில்லாத இன்பம் என்னும் பேரின்பம். இது நிலையாமை, துன்பம் என்னும் இரு எல்லைகள் அல்லது வரையறைகள் அற்ற பேரின்பம். இது இறைவனுக்கே உரியது. நாம் அனுபவிக்கும் இன்பங்கள் வினை வழி வருவன. அவற்றுக்கு முன் சொன்ன இரண்டு வரையறைகளும் உள்ளன. ஆனால் ஆனந்தம் என்பது வினை வழி வாராது; முத்தி நிலையில் இறை தர ஆன்மா அனுபவிப்பது. இதற்கு எதிர் நிலை இல்லை. அதனால்தான் ஆனந்தம் என்ற சொல்லுக்கு எதிர்ச்சொல் தமிழ் மொழியில் கிடையாது. பல்கலை ஆகமம் வேதம் யாவையினும் கருத்துப் பதி பசு பாசம் தெரித்தல், பதி பரமே, அதுதான் நிலவும் அரு உரு இன்றிக், குணம் குறிகள் இன்றி, நின்மலமாய், ஏகமாய், நித்தம் ஆகி, அலகில் உயிர்க்கு உணர்வு ஆகி, அசலம் ஆகி, அகண்டிதம் ஆய், ஆனந்த உருவாய், அன்றிச் செலவு அரிதாய்ச், செல்கதியாய், சிறிதாகி, பெரிதாய்த், திகழ்வது தற்சிவம் என்பர், தெளிந்து ளோரே -பதியின் சொரூப இலக்கண்ம்-சிவப்பிரகாசம் பாடல் 13 – அங்கு இங்கு எனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி அருளொடு நிறைந்தது எது? தன் அருள் வெளிக்குளே அகிலாண்ட கோடி எல்லாம் தங்கும்படிக்கு இச்சை வைத்து, உயிர்க்கு உயிராய்த் தழைத்தது எது? மனவாக்கினிலே தட்டாமல் நின்றது எது? சமயகோடிகள் எலாம் தம் தெய்வம் எம் தெய்வம் என்று எங்கும் தொடர்ந்து எதிர்வழக்கு இடவும் நின்றது எது? எங்கணும் பெருவழக்காய் யாதினும் வல்ல ஒரு சித்து ஆகி, இன்பமாய், என்றைக்கும் உள்ளது எது? மேல் கங்குல்பகல் அறநின்ற எல்லை உளது எது? கருத்திற்கு இசைந்தது அதுவே; கண்டன எல்லாம் மோன உருவெளியது ஆகவும் கருதிஅஞ்சலிசெய்குவாம் - தாயுமானார் பாடல்- What is it that fills the cosmic units and the firmament with all-encompasing effulgence, complete bliss, perfect love, omnipotence and illimitable immensity overspreading with a presence in such a manner as to dissuade one from uttering that it is neither here nor there? What is it that by its will suatain innumerate number of worlds, life of life and its essence in the vastness of its grace? What is it that is measureless bty the mind unknowable by speech? What is it that diverse faiths contend with one another claiming that it is 'our divinity' and 'my divinity'? What is that in this innumerable dispute, predominates as ascendant " All powerful Spreme Intellect and Eternal joy? Besides, What is it on which neither night nor forgetfulness falls and without which the day or rememberance does not dawn? It is the Almighty that accords with the thoughts of one and all. Hence, let us deem all phenomina as this image we all see and as the still sweep of His silence by meditating on Him and paying Him obeisance. - Song by St. Thaayumaanar (1705-1743AD)- 2. அத்துவா சரீரம்; அத்துவாகள் ஆறையும் (கலை, தத்துவம், புவனம், வன்னம், பதம், மந்திரம் ) பஞ்சகலைகளையும் (நிவிருத்திகலை, பிரதிஷ்டாகலை, வித்யாகலை, சாந்திகலை, சாந்தியதீதகலை) தனது சரீரமாக இறைவன் கொள்கிறான். மந்திரமே சோரியா, வான்பதமே மாமுடியாத், தொந்தமுறும் வன்னமே தொக்காகப், பந்தனையா லொத்த புவனத்துருவே யுரோமமாத், தத்துவங்களே சத்ததாதுவா, வைத்த கலையை யவயவ மாக, காட்டும் அத்துவாவின் நிலையே வடிவமாய் நின்றோன் -குமரகுருபர சுவாமிகளின் கந்தர் கலி வெண்பா- அவயவங் கலைகளாகும், ஆகிய புவனரோமம், சுவையுறு துவக்கு வன்னஞ், சோரிமந்திர மதாகும், தவமுறுபத நரம்பு, தத்துவந் தாதுவாகும், சிவமுயர் சதாசிவர்க்குச் சிறந்த வாறுஉறுப்புத் தானே -அபியுத்தர் பாடல்- அத்துவா மூர்த்தி ஆக அறைகுவது என்னை? என்னின் நித்தனாய் நிறைந்து அவற்றின் நீங்கிடா நிலைமையானும், சித்துடன் அசித்திற்கு எல்லாம் சேட்டிதன் ஆதலானும், வைத்தவாம் அத்துவாவும் வடிவு என மறைகள் எல்லாம் -சிவஞானசித்தியார் பாடல் 76- ஓம் ஸ்ரீ ஷடத்வாதீத ரூபிண்யை நம; ஆறு அத்துவாக்களையும் கடந்த வடிவுடையவளுக்கு நமஸ்காரம் - ஸ்ரீ ல்லிதா ஸகஸ்ரநாமம் 991- அத்துவாக்கள் பற்றிய மேலதிக விளக்கத்துக்கு எமது ஆத்மீகக்கணக்கு பாடம் ஆறு அத்துவாக்கள் பார்க்க. குறிப்பு; இது சைவசித்தாந்த நூல்களின் மரபிலிருந்து விலகி நின்று அளிக்கப்பட்ட விளக்கம். 3. சைதன்ய சரீரம்; சிவமானது குருவினுடைய ஆன்மாவை தனது சரீரமாகக்கொண்டு அருள் புரியும் போது அது சைதன்ய சரீரம் எனப்படும். “…….கோகழி ஆண்ட குரு மணிதன் தாள் வாழ்க - திருவாசகம்- சிவபுராணம்- “……குருவாய் வருவாய் அருள்வாய் குகனே” - கந்தரலங்காரம் பாடல் 51- “குருவே சிவமெனக் கூறினன் நந்தி” - திருமந்திரம் பாடல் 1581- “ஆனந்தம் பெற்றோர் அருட் குருவே ஈசன் என்பர்” - துகளறு போதம் பாடல் 88- 4. மந்திர சரீரம்; இறைவன் வேத மந்திரங்களை தனது சரீரமாகக் கொண்டவன். “வேத மந்த்ர சொரூபா நமோ நம” - நாத விந்து காலாதி என்று தொடங்கும் திருப்புகழ் பாடல்- இறைவன் பஞ்சப் பிரம்ம மந்திரங்களே சரீரமாகக் கொண்டு வருவான். பஞ்சப்பிரம்ம மந்திரங்கள் தீட்சையில் வழங்கப்படுவன. பதியெனவே சொலற்குஉரிய பரமன் மந்திர ஆன்மா, பஞ்சமந்திர தேகி, மந்திரங்கட்கு எல்லாம் அதிபதி -சர்வஞானோத்தர ஆகமம், பாடல் 08- மந்திரான்மா- மந்திரங்களைச் சரீரமாகக் கொண்டு அவற்றின் உயிராக நிற்பவன் பஞ்சமந்திர தேகி- அம் மந்திரங்களுக்குள்ளும் சிறந்து விளங்கும் பஞ்சப்பிரம்ம மந்திரங்களை தனது தேகமாக உடையவன். ஓம் ஈசானாய நமஹ: ஓம் தற்புருஷாய நமஹ; ஓம் அகோராய நமஹ: ஓம் வாமதேவாய நமஹ; ஓம் சத்தியோசாதாய நமஹ; என்னும் ஐந்து பஞ்சப்பிரம்ம மந்திரங்களைத் தனது திருமேனியாகக் கொண்டவன். - தூத்துக்குடி பொ. முத்தையாபிள்ளை உரை- மந்திரம் அத்து வாவின் மிகுத்து வடிவம் ஆகத் தந்தது என் அரனுக்கு? என்னின் சகத்தினுக்கு உபா தானங்கள் விந்து மோ கினி மான் மூன்றாம்; இவற்றின் மேலாகி விந்துச் சிந்தை ஆர் அதீதம் ஆன சிவசத்தி சேர்ந்து நிற்கும் -சிவஞானசித்தியார் பாடல் 77- சுத்தம் ஆம் விந்துத் தன்னில் தோன்றிய ஆதலானும் சத்திதான் பிரேரித் துப்பின் தான் அதிட்டித்துக் கொண்டே அத்தினால் புத்தி முத்தி அளித்தலால் அரனுக்கு என்றே வைத்த ஆம்- மந்திரங்கள் வடிவு என மறைகள் எல்லாம் -சிவஞானசித்தியார் பாடல் 78- மந்திரம் அதனில் பஞ்ச மந்திரம் வடிவமாகத் தந்திரம் சொன்னவாறு இங்கு ஏன்? எனில் சாற்றக் கேள் நீ முந்திய தோற்றத் தாலும் மந்திர மூலத்தாலும் அந்தம் இல் சத்தி ஆதிக்கு இசைத்தலும் ஆகும் அன்றே -சிவஞான சித்தியார் பாடல் 79- 5. திருவைந்தெழுத்து; சிதம்பரத்திலுள்ள ஞானமா நடராசப்பெருமானுக்கு பஞ்சாக்கரமே திருமேனி அல்லது சரீரம். அவர் பஞ்சாக்கர வடிவானவர். அவருக்கு பூசையில் ஆவாகனம் இல்லை. இந்த நடராச மூர்த்தம் இருபத்தைந்து மகேசுவர மூர்த்தங்களில் ஒன்றாகிய சபாபதியாகிய நடராசர் அல்ல. இவருக்கு பூசையில் ஆவாகனம் உண்டு. நடராச மூர்த்தத்தின் திருவாசி ஓம் என்னும் ஓங்கார மந்திரமாகும். நற்றவத்தோர் தாம்காண நாதாந்தத்து அஞ்சு எழுத்தால் உற்று உருவாய் நின்றுஆடல் உள்ளபடி பெற்றிட நான் விண்ணார் பொழில் வெண்ணெய் மெய்கண்ட நாதனே தண்ணார் அருளாலே சாற்று. எட்டும் இரண்டும் உருவான லிங்கத்தே நட்டம் புதல்வா நவிலக்கேல்- சிட்டன் சிவாயநம என்னும் திருஎழுத்து அஞ்சாலே அவாயம்அற நின்று ஆடுவான் ஆடும் படி கேள்நல் அம்பலத்தான் ஐயனே நாடும் திருவடியிலே நகரம் - கூடும் மகரம் உதரம் வளர்த்தோள் சிகரம் பகரும்முகம் வாமுடியப் பார் சேர்க்கும் துடிசிகரம் சிக்கனவா வீசுகரம் ஆர்க்கும் யகரம் அபயகரம் -பாரக்கில் இறைக்கு அங்கி நகரம் அடிக்கீழ் முயலகனார் தங்கும் மகரம்அது தான். ஓங்காரமே நல் திருவாசி உற்றுஅதனில் நீங்கா எழுத்தே நிறைசுடராம்- ஆங்காரம் அற்றார் அறிவர் அணி அம்பலத்தான் ஆடல்இது பெற்றார் பிறப்பு அற்றார் பின். - உண்மைவிளக்கம் செய்யுள்- 30-40-. சத்தித் திருமேனி: இறைக்கு அதன் சத்தியே திருமேனி. நாயகன் எல்லா ஞானத் தொழில்முதல் நண்ண லாலே காயமோ மாயை யன்று; காண்பது சத்தி தன்னால் - சிவஞான சித்தியார்- சத்தியாவது அருள். அருளது சத்தியாகும் - சிவஞான சித்தியார்-. உரு அருள்; குணங்களோடும் உணர்வு அருள் உருவில் தோன்றும் கருமமும் அருள்; அரன்றன் கரசர ணாதி சாங்கம் தரும்அருள்; உபாங்கம் எல்லாந் தான் அருள்; தனக்கு ஒன்று இன்றி அருள்உரு உயிருக்குஎன்றே ஆக்கினன், அசிந்தன் அன்றே -சிவஞான சித்தியார் 67- அரன்றன் உருவருள்- இறைவனது உருவங்கள் எல்லாம் அவனது அருளாகிய சத்தியாகும். அசிந்தன்- சிந்தனைக்கு எட்டாதவன் இறைவன் உருவங் கொள்ளுதல் தனக்காக அல்ல; உயிர்களாகிய நமக்காகவே. இது இறைவனது அருள். ஆதலால் இறைவனது திருமேனியும், அவற்றின் அங்கங்களும், அவற்றிலுள்ள படைக்கலம், ஆடை அணிகலன்களும், செயல்களும் எல்லாம் அருளேயன்றி வேறில்லை. உமையலாதுருவமில்லை - நாவுக்கரசர் தேவாரம், திருவையாற்றுப்பதிகம்- ஆகாஸ சரீரம் பரஹ்ம ஆகாயத்தைச் சரீரமாக உடையது பிரம்மம் -தைத்திரீய உபநிடதம், சிக்ஷாவல்லி. 6-2- இங்கு ஆகாயம் என்றது பராசத்தியை - காசிவாசி செந்திநாதையர் விளக்கம் யஸயஸா பரமாதேவீ சக்திராகாச ஸம்ஞிதா எவருடைய பரமசத்தி உண்டோ. அந்த்ச் சத்தியே ஆகாசம் எனப்படுவது. - கூர்ம புராணம், உத்தர பாகம்- 36ம் அத்தியாயம்- சிதம்பரத்தின் ஆகாசம் சித்து (ஆதி அந்தம் அற்றது; பூரண அறிவு) இங்கு ஆகாசம் என்பது ஆன்மாவில் உள்ள இதயத்தாமரையின் வெளியாகிய ஆகாசமாகிய சிற்றம்பலம் ஆகும். இதுவே சத்தி. இங்கு இறையின் ஞான நடனம் நமது மலநாசத்துக்காக நடைபெறுகின்றது. மாயை தனைஉதறி, வல்வினையைச் சுட்டு,மலம் சாய அமுக்கிஅருள் தான்எடுத்து - நேயத்தால் ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான்அழுத்தல் தான்எந்தை யார்பரதம் காண் - ஞான நடனம், உண்மை விளக்கம்- 6. உலகத் திருமேனி; இந்த அண்டங்களாகிய உலகையே தனது உருவாகக் கொண்டவன் இறைவன். உலகமேஉருவ மாக யோநிகள் உறுப்ப தாக இலகுபேர் இச்சாஞான கிரியைஉள் கரணா மாக அலகிலா உயிர்கட் கெல்லாம் அறிவினை யாக்கி ஐந்து நலமிகு தொழில்க ளோடும் நாடகம் நடிப்பன்நாதன் -சிவஞான சித்தியார் பரபக்கம் பாடல் 237- இறைவன் இருநூற்று இருபத்து நான்கு உலகையும் தன் உடலாகவும் எண்பத்து நூறாயிரம் பிறப்பு வகைகளைத் தன் உறுப்புகளாகவும் இச்சை ஞானம் கிரியைகளைத தனது உட்கரணமாகவும் கொண்டு அளவிலா உயிர்களுக்கு பொருள்களை அறியும் அறிவை உண்டாக்கி நலம் மிகுந்த ஐந்தொழில்களையும் மேற்கொண்டு நாடகத்தை நடிப்பன். அண்டம் உருவாக அங்கம் சராசரமாய்க் கண்ட சத்தி மூன்று உட்கரணாமாய்த் தொண்டுபடும் ஆவிப் புலனுக்கு அறிவளிப்ப ஐந்தொழிலும் மேவித் தனிநடத்தும் எங்கோவே - குமரகுருபர சுவாமிகளின் கந்தர் கலி வெண்பா- 7. பஞ்ச சரீரங்கள்; ஆலயத்தைந்து மேனி அவனியில் ஐந்து மேனி மேலகத் தைந்து மேனி மெய்யெழுத் தைந்து மேனி நீலகத் தைந்து மேனி நுண்ணிறம் ஐந்து மேனி சாலஉட் கரண மேனி சகலமெய் யிறைவற் காணே -சீர்காழி தத்துவப் பிரகாச சுவாமிகளின் தத்துவப் பிரகாசம்- 7.1 இறைக்கு சிவாலயத்தில் ஐந்து சரீரங்கள் விமானம் - தூல லிங்கம் பீடம் - சூக்கும லிங்கம் அதனுள் இருக்கும் விந்து, நாதம் - பிராண லிங்கம் பலிபீடம் - பத்திர லிங்கம் உற்சவ மூர்த்தி - மூர்த்தி லிங்கம் 7.2 இதேபோல பஞ்ச பூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஐந்தும் பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவன் என்னும் இறையின் ஐந்து வடிவங்களாம். மண்ணோடு நீர் அனல்காலோடு ஆகாயம் மதிஇரவி எண்ணில்வரும் இயமானன் -சம்பந்தர் தேவாரம்- இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி இயமானனாய் எறியும் காற்று மாகி அருநிலைய திங்களாய் ஞாயி றாகி ஆகாசமாய் அட்ட மூர்த்தி யாகி - திருநாவுக்கரசர் தேவாரம்- 7.3 இதேபோல மேலகத்தில் இந்திரன், சந்திரன், சூரியன், இயமானன், வருணன் என் ஐந்து வடிவங்கள் இறைவனுக்காம். 7.4 முன்னர் சொன்னதுபோல பஞ்சாக்கரத்தின் ஐந்து எழுத்துகளான ந ம சி வ ய ஐந்தும் இறைவனின் திருமேனிகளாம். 7.5 வேதம், புராணம், மந்திரம், தந்திரம் ( தந்திரமாவது நீறு- சம்பந்தர் தேவாரம்; இங்கு தந்திரம் எனபது ஆகமம்), உபநிடதம் என ஐந்தும் இறைவனை திருமேனிகளே. 7.6 பஞ்ச பூதங்களின் ஐந்து வண்ணங்களாகவுள்ள வெள்ளை, கறுப்பு, சிவப்பு, பச்சை (பசும்பொன் என்றும் கூறுவர்) நீலம் ஐந்தும் இறைவன் திருமேனிகளாம். நிறங்க ளோர் ஐந்துடையாய் - மாணிக்கவாசகரின் சிவபுராணம். பொன்பார்; புனல் வெண்மை; பொங்கும் அனல் சிவப்பு; வன்கால் கருமை வளர்வான் தூமம் - என்பார் - உண்மை விளக்கம்- 7.7 அந்தக்கரணங்களாகிய மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியவற்றுடன் புருடனும் ( வித்தியா தத்துவங்களில் ஒன்று; காலம், நியதி, கலை, வித்தை, அராகம் ஆகிய ஏனைய வித்தியா தத்துவங்கள் ஐந்துடன் கூடிய ஆன்மாவே புருடன் எனப்படும்) சேர்ந்த ஐந்தும் பிரணவ ரூபம் ஆகையால் இறையின் திருமேனிகளாகின்றன.

No comments:

Post a Comment