Wednesday, September 26, 2012

தீபாவளியின் வேறு பல காரணங்கள்

எமது சமயத்தில் உள்ள திருநாட்கள் பல. இவையெல்லாம் மக்கள் உல்லாசமாகக் கொண்டாடி மகிழவும், இறையை நினைந்து உருகவும் உதவுகின்றன. குழந்தைகளுக்குத் திருநாள் என்றால் இனிய தின்பண்டங்களும், புத்தாடைகளும் என்று ஒரே குஷி. இளைஞர்களுக்கோ தம்மை அலங்கரித்தலும், தம் வயதொத்த காளையர் கன்னியரைக் கண்டு அளவளாவிக் களிப்பதும் என்று குதூகலம். பெரியவர்களுக்கு இவ்விழாக்களின் பாரம்பரியத்தையும், தத்துவங்களையும் அறிவதும் பகிர்ந்துகொள்வதும் என்று ஒரு ஆத்மீகத் திளைப்பு. கலைஞர்களுக்கு கலை நிகழ்ச்சிகள் என்று ஒரே கொண்டாட்டம். இவ்வாறு வாழ்க்கையின் வெவ்வேறு மட்டங்களில் உள்ளவர்கள் எல்லோரையும் ஒரே காலத்தில், ஒரே காரணத்தை வைத்து, வெவ்வேறு வகையாக, அவரவர் நிலைகளுக்கு ஏற்ப அனுபவக் களிப்பில் ஆழ்த்துவன இத்திருநாள்களே. பழையன கழிதலும் புதியன புகுதலும் கால நீரோட்டத்தில் எமது பாரம்பரிய திருநாள்கள் சில வழக்கொழிந்து போயின. வேறு சில புதிய திருநாள்கள் வந்து புகுந்தன. "பழையன கழிதலும் புதியன புகுதலும் காலவிதியினால் வழுவல" என்று எமது அடிப்படை நூலாகிய தொல்காப்பியம் இரண்டாயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்னரேயே இலக்கணம் வகுத்து ஆரோக்கியமான எதிர்காலத்தின் திறந்த பாதைக்கு வழிவகுத்துள்ளது. இந்த ஆரோக்கியமான அணுகுமுறை மட்டும் இல்லாதிருந்தால் எமது தொன்மையான நாகரிகம் குட்டைபோலத் தேக்கமடைந்து, நாற்றமெடுத்து அழிந்திருக்கலாம். தேவாரத்தில் திருநாட்கள் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் பூம்பாவை என்னும் இறந்த பெண்ணை சாம்பரில் இருந்து எழுப்புவதற்காக மயிலாப்பூரில் பாடிய பதிகத்தில் உள்ள பாடல்களில் பத்துவிதமான திருநாள்களைக் குறிப்பிட்டு "இவற்றையெல்லாம் பார்க்காமல் நீ போனாயோ பூம்பாவாய்?" என்று பாடுகின்றார். புரட்டாதி மாதத்தில் அடியார்களுக்கு உணவு படைக்கும் அட்டிட்டல் விழா, ஐப்பசி மாதத்தில் ஓண விழா, கார்த்திகையில் விளக்கீடு, மார்கழியில் திருவாதிரை, தை மாதத்தில் தைப்பூசம், மாசி மாதத்தில் கடலாடு விழா, பங்குனியில் பங்குனி உத்திரம், சித்திரை அட்டமி விழா, வைகாசி ஊஞ்சல் திருவிழா, ஆனி, ஆடி, ஆவணியில் பெருஞ்சாந்தி விழா என்று மாதமொரு திருநாள் மயிலாப்பூரில் கொண்டாடப்பட்டு வந்ததை இப்பாடல்களினூடாக அறிகின்றோம். இவற்றில் புரட்டாதி மாதத்தில் அட்டிட்டல் திருநாளும், மாசி மாதத்துக் கடலாடு விழாவும், ஆனி, ஆடி, ஆவணி மாதங்களின் பெருஞ்சாந்தி விழாவும் இன்று வழக்கற்றுப்போக சித்திரை அட்டமித் திருநாள், சித்திரா பௌர்ணமித் திருநாளாக மருவி வழங்கி வருகின்றது. இவற்றை விடவும் வேறு பல திருநாட்கள் பற்றிய விளக்கங்களையும், குறிப்புகளையும் எமது சமய இலக்கியங்களிலும், தமிழ் இலக்கியங்களிலும், அக்காலத்துக் கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பாரக்கின்றோம். தீபாவளித் திருநாள் இவற்றுள் புரட்டாதி மாதத்து அமாவாசைக்கு முன் தினமாகிய சதுர்த்தசி திதியில் இந்துக்கள் அனைவராலும் கொண்டாப்பட்டு வருகின்ற தீபாவளித் திருநாளுக்குப் பல விதமான விளக்கங்களும், கதைகளும், காரணங்களும் கூறப்படுகின்றன. வட இந்தியாவில் தீபாவளி நாள் இராமர் பதினான்கு வருட வனவாசத்தின் பின்னர் சீதை, இலட்சுமணனுடன் அயோத்திக்கு மீண்ட நாள் என்று கூறிக் கொண்டாடுவர். தென்னிந்தியாவில் கிருஷ்ணர் உருக்குமணியின் உதவியுடன் நரகாசுரனை வதம் செய்த நாள் என்று கூறி அன்று எண்ணெய் தேய்த்து, முழுகிக் கொண்டாடுவர். அன்றைய தினம் நீரெல்லாம் கங்கா தீர்த்தமாகப் பாவித்து நீராடிக்கொள்வர். இலங்கையிலும், தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் தீபாவளித் திருநாளுக்கு எண்ணெய் முழுக்காடி, மது அருந்தி, ஆட்டு மாமிச உணவை குடும்பத்தாருடனும், உற்றார், உறவினர், நண்பர்களுடனும் கூடி, உண்டு மகிழும் வழமையும் உள்ளது. சைவர்களின் தீபாவளி சைவர்களுக்கு தீபாவளியின் முக்கியத்துவம் வேறுவிதமானது. சைவ ஆகமங்கள் தீபாவளியை நரக சதுர்த்தசி என்று கூறுகின்றன. உண்மையில் தீபாவளி என்பதும் இந்து என்பதைப்போல பிற்காலத்தில் வந்த ஒரு புதுச் சொல் ஆகும். இதற்கு பாரம்பரியமான பெயர் நரக சதுர்த்தசி என்பதாகும். இந்நாளில் சைவ ஆலயங்கள், மற்றும் மடங்கள் யாவற்றிலும் உள்ள மூர்த்தங்களுக்கு எண்ணெய் ஸ்நானமும் புத்தாடையும் அணிதல் ஆகம மரபாகும். சைவம் சிவனை பிறப்பு இறப்பு அற்ற முழுமுதற் கடவுளாகக் காண்கின்றது. "பிறவா யாக்கைப் பெரியோன்" என்று பௌத்த சமய இலக்கியமான மணிமேகலை சிவனைப் போற்றுகின்றது. பிறப்பு இறப்பு என்பது உயிர்களுக்கே அன்றி கடவுளுக்கு அல்ல என்பது சைவத்தின் தெளிவான கொள்கை. ஆகவே சைவம் இராமாயணம், மகாபாரதம் ஆகியவை சொல்லும் அவதாரங்களை ஏற்றுக்கொண்டாலும் அவற்றை சிவனால் அதிகாரம் பெற்ற திருமாலின் லீலைகளாகவே கொள்கின்றன. வால்மீகியின் இராமாயணத்தில் இராவண வதத்தின் பின்னர் இராமன் அகத்தியரிடம் சிவ தீட்சை பெற்று இராமேஸ்வரத்தை தாபித்த வரலாறு கூறப்படுகின்றது. இதேபோல மாகாபாரதத்திலும் கிருட்டினர் உபமன்னியு முனிவரிடம் சிவ தீட்சை பெற்றுச் சிவ பூசை செய்து வந்த வரலாறு அனுசாசன பர்வத்தில், பதினான்காம் அத்தியாயத்தில் கூறப்படுகின்றது. வியாசரின் வட மொழி மகாபாரதம் மட்டுமல்ல, வில்லிபுத்தூராழ்வாரின் தமிழ்மொழி மகாபாரதமும்கூட கிருஷ்ணரை விபூதி, உருத்திராக்கம் ஆகிய சிவ சின்னங்கள் அணிந்த சைவராகவே வர்ணிக்கின்றன. வால்மீகி இராமாயணமும் இராமனை சிவசின்னங்களுடனேயே வர்ணிக்கின்றது. ஆக திருமாலின் இராம மற்றும் கிருட்டின அவதார லீலைகளைக்கூறும் இராமாயணம், மகாபாரதம் என்ற இரண்டு இதிகாசங்களும் அடிப்படையில் சிவபரத்துவத்தையே கூறுகின்றன. ஆகவே இந்த அவதாரங்களுடன் சம்பந்தமான தீபாவளியும் சிவத்திருநாளாகவே கொள்ளப்படுகின்றது. இவ்வாறான பிறவா யாக்கைப் பெரியோனாகிய சிவன் பல்வேறு காலங்களில் பல்வேறு நோக்கங்களுக்காக பல்வேறு வடிவங்களைத் தாங்கி வந்தான் என சைவம் கூறுகின்றது. இவையே சிவனின் இருபத்தைந்து மகேசுவர மூர்த்தங்கள். இவற்றிலே கஜமுகானுக்கிரக மூர்த்தியின் தோற்றம் நடந்தது புரட்டாதி மாதத்து கிருஷ்ண பட்சத்து சதுர்த்தசியிலேயாம். இந்நாளே தீபாவளித்திருநாள் என்பது சைவர்களின் இன்னொரு விளக்கமாகும். பிரிங்கி முனிவர் சிவனை மட்டுமே வலம் வந்து வணங்கி வந்தார். தேவி முனிவரின் சக்தியெல்லாம் போகும்படி பண்ணிணாள். அப்போது நிற்கக்கூட திராணியற்றுப்போன பிரிங்கி முனிவருக்கு சிவன் ஊன்றுகோல் கொடுத்து உதவினார். அதன் பின்னரும் பிரிங்கி முனிவர் தொடர்ந்தும் சிவனை மட்டுமே வழிபட உமை சிவனை வேண்டித் தவம் செய்து கேதாரகௌரி விரதத்தை அனுட்டித்தார். இதன் முடிவில் சிவனின் இடப்பாகத்தை கொண்டார். இந்நாளே தீபாவளித் திருநாளாகும் என்பது தீபாவளிக்குரிய சைவர்களின் இன்னொரு விளக்கமாகும். தீபாவளியின் வேறு பல காரணங்கள் முன் சொன்ன காரணங்களை விட வேறும் பல முக்கியமான காரணங்கள் தீபாவளிக்கு உள்ளன. 1. திருப்பாற்கடலை அமிர்தம் பெறுவதற்குக் கடைந்தபொழுது தோன்றியவர் இலட்சுமி. இவர் செல்வத்தைத் தரும் தேவி. விஷ்ணுவின் சத்தியாக அமைந்தவர். இவர் இவ்வாறு திருப்பாற்கடலில் இருந்து இலட்சுமி தோன்றிய நாள் தீபாவளி என்று கூறுவர். 2. பாண்டவர்கள் வனவாசம் முடிந்து பாரத யுத்தத்தில் வெற்றி பெற்று மீண்டும் தமது அத்தினாபுரம் மீண்ட நாள் தீபாவளி என்று கூறுவர். 3. விக்கிரமாதித்த மகாராஜா முடி சூடிய நாள் தீபாவளி என்பர். 4. சமண சமயத்தின் கடைசி தீர்த்தங்கரர் பரிநிர்வாணம் அடைந்த நாள் தீபாவளி என்று சமணர்கள் கொண்டாடுகின்றார்கள். 5. சீக்கியர்களின் கடைசி குருவான குரு கோவிந்த சிங் அவர்கள் அவுரங்க சீப் மன்னனுடைய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நாள் தீபாவளி என்பர். 6. இதேபோல இதற்கு முந்திய சீக்கிய குருவான ஹார்கோபிந்த் சிங் அவர்கள் ஜஹாங்கீர் மன்னனுடைய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நாள் கி.பி. 1619ம் ஆண்டின் தீபாவளி தினமாகும். 7. இதேபோல இந்தியாவில் அமிர்தசரஸில் உள்ள சீக்கியர்களின் பொற்கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதும் கி.பி 1577ம் ஆண்டு தீபாவளி நாளாகும். இவ்வாறு பல காரணங்களுக்காக சீக்கிய மதத்தவர்களும் தீபாவளியைச் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். தீபாவளிக்காக சீக்கியர்களின் பொற்கோவில் ஒவ்வொரு வருடமும் விளக்குகளால் வெகு சிறப்பாக அலங்கரிக்கப்படுவது வழமை. 8. இந்தியாவில் உள்ள பௌத்தர்களும்கூட கொண்டாடும் பண்டிகையாக தீபாவளி விளங்குகின்றது. 9. 1999 இல் கத்தோலிக்க மதத்தின் புனித போப்பாண்டவர் இந்தியாவிக்கு விஜயம் செய்தபோது அவர் பிரசங்கம் செய்த தேவாலயம் தீபாவளிப் பண்டிக்கைக்காக தீப அலங்காரங்களால் அலங்கரிக்ப்பட்டிருந்ததுடன் போப்பாண்டவர் நெற்றியில் திலகமிட்டு வரவேற்கப்பட்டார். அவருடைய உரையிலும் போப்பாண்டவர் தீபாவளியைக் குறிப்பிட்டு பேசியிருந்தார். 10. வட இந்தியாவில் இந்துக்கள் கொண்டாடும் தீபாவளியை இராமர் வனவாசத்தில் இருந்து மீண்டும் அயோத்திக்கு திரும்பிய நாளாகக் கொண்டாடி அதையே புது வருடப்பிறப்பாகக் கொண்டாடுவர். ஆங்கில புதுவருடம் போலவே இதற்கும் எந்தவிதமான வானியல் கணித விஞ்ஞான அடிப்படையோ ஆதாரமோ அல்லது ஆகம நூல்களின் ஆதாரமோ இல்லை என்பது இங்கு நோக்கத்தக்கது. உண்மையில் இராமர் வனவாசம் முடிந்து அயோத்தி நகருக்குத் திரும்பியது சித்திரை மாதத்து வளர்பிறை சஷ்டி நாள் என்றும் அதற்கு அடுத்த நாளான சப்தமியில் அவர் முடி சூடினார் என்றும் வான்மீகி இராமாயணம் யுத்த காண்டம் 127ம் சர்க்கம் கூறுகின்றது. இராமர் மீண்டும் நாடு திரும்பிய நாள்தான் புதுவருடப் பிறப்பு என்றால் இது நாம் புதுவருடம் கொண்டாடுகின்ற சித்திரை மாதத்தில்தான் வர வேண்டும். அனைவருக்கும் தீபாவளி ஆகவே தீபாவளித்திருநாள் பெண்களின் முக்கியத்துவத்தையும், அவர்களைப் புறக்கணித்து நாம் பயனடைய முடியாது என்பதையும் உணர்த்தி ஆண், பெண் சமத்துவத்தைக் கொண்டாடும் திருநாளாகும். தீபம் என்பது ஒளி விளக்கு; ஆவளி என்பது வரிசை. தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து, அறியாமை என்னும் இருள் விலகி, ஞானம் என்னும் ஒளி வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டாடும் திருநாள் தீபாவளி. ஆகவே இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள்,கிறித்தவர்கள், சைவர்கள், பகுத்தறிவுவாதிகள், தமிழர்கள், தமிழர் அல்லாதவர்கள் என்ற பேதமின்றி அனைவரும் கொண்டாடி மகிழுகின்ற, மகிழக்கூடிய திருநாள் தீபாவளி ஆகும்.

No comments:

Post a Comment