Wednesday, September 26, 2012

அரசனுக்கு சிறப்பாகக் கூறப்படும் பத்து அங்கங்கள்

தசாங்கம் என்றதும் எங்கள் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது தூபம் இடுவதற்குப் பாவிக்கின்ற பத்து சுகந்தவாசனைப்பொருட்களின் கூட்டாகிய தசாங்கம்தான். தசம் என்றால் பத்து. ஆங்கிலத்தில் decimal என்பதும் இதுவே. பத்து விதமான பாதார்த்தங்கள் சேர்ந்ததினால் இதற்கு தசாங்கம் என்று பெயர். அரசனுக்கு சிறப்பாகக் கூறப்படும் பத்து அங்கங்கள் உள்ளன. இவையும் தசாங்கம் என்றே அழைக்கப்படுகின்றன. அவையாவன நாமம், நாடு, ஊர், ஆறு, மலை, ஊர்தி, படை, முரசு, மாலை, கொடி எனும் பத்துமாம். படையும், கொடியும், குடையும், முரசும் நடை நவில் புரவியும், களிறும், தேரும் தாரும், முடியும், நேரவன் பிறவும் தெரிவு கொள் செங்கோல் அரசர்க்கு உரிய என்று தொல்காப்பியம் 1571 ம் சூத்திரம் அரசர்க்குரிய சிறப்புகள் பற்றி வரையறுக்கின்றது. களிறு- யானை தார்- மாலை நேரவன் பிறவும் - அரியணை, அரண் முதலியன அரசனுக்கு வழங்கும் இந்த சிறப்புகள் பத்தும் இறைவனுக்கும் கூறப்படுகின்றன. திருவாசகத்தில் திருத்தசாங்கம் என்ற பகுதி உள்ளது. இதில் உள்ள பத்து பாடல்களும் இறைவனுக்கு இத்தசாங்கத்தைப் பாடுகின்றன. 1. நாமம் ஏரார் இளங்கிளியே எங்கள் பெருந்துறைக்கோன் சீரார் திருநாமம் தேர்ந்துரையாய் - ஆரூரன் செம்பெருமான் வெண்மலரான் பாற்கடலான் செப்புவபோல் எம்பெருமான், தேவர்பிரான் என்று 2. நாடு ஏதமிலா இன்சொல் மரகதமே ஏழ்பொழிற்கும் நாதன்தமை ஆளுடையான் நாடுரையாய் - காதலவர்க்கு அன்பாண்டு மீளா அருள்புரிவான் நாடொன்றுந் தென்பாண்டி நாடே தெளி 3. ஊர் தாதாடு பூஞ்சோலைத் தத்தாய் நமையாளும் மாதாடும் பாகத்தன் வாழ்பதியென் - கோதாட்டிப் பத்தரெல்லாம் பார்மேற் சிவபுரம்போற் கொண்டாடும் உத்தர கோசமங்கை ஊர். 4. ஆறு செய்யவாய்ப் பைஞ்சிறகிற் செல்வீநஞ் சிந்தைசேர் ஐயன் பெருந்துறையான் ஆறுரையாய் - தையலாய் வான்வந்த சிந்தை மலங்கழுவ வந்திழியும் ஆனந்தங்காண் உடையான் ஆறு 5. மலை கிஞ்சுவாய் அஞ்சுகமே கேடில் பெருந்துறைக் கோன் மஞ்சன் மருவும் மலைபகராய் - நெஞ்சத்(து) இருளகல வாள்வீசி இன்பமரு முத்தி அருளுமலை என்பதுகாண் ஆய்ந்து 6. ஊர்தி இப்பாடே வந்தியம்பு கூடுபுகல் என்கிளியே ஒப்பாடாச் சீருடையான் ஊர்வதென்னே - எப்போதும் தேன்புரையுஞ் சிந்தையராய்த் தெய்வப்பெண் ஏத்திசைப்ப வான்புரவி யூரும் மகிழ்ந்து வேதமாகிய குதிரை இறைவன் வருகின்ற புரவி ஆகும். 7. படை கோற்றேன் மொழிக் கிள்ளாய் கோதில் பெருந்துறைக்கோன் மாற்றாரை வெல்லும் படை பகராய் - ஏற்றார் அழுக்கடையா நெஞ்சுருக மும்மலங்கள் பாயுங் கழுக்கடைகாண் கைக்கொள் படை கழுக்கடை என்றது திரிசூலத்தை குறக்கும். திரிசூலம் மும்மலங்களை அழிக்கும் என்பது "மருள் பொழி மும்மலஞ் சிதைக்கும் வடிச்சூலம்" என்னும் பெரியபுராண வரிகளால் காண்க. (பெரியபுராணம் பாடல் 3699) "மூவிலை ஒருதாள் சூலம் ஏந்துதல் மூவரும் யானென மொழிந்த வாறே" என்று பதினோராம் திருமுறையில் உள்ள திருவொற்றியூர் ஒருபாஒருபது கூறுகின்றது. 8. முரசு இன்பால் மொழிக் கிள்ளாய் எங்கள் பெருந்துறைக்கோன் முன்பால் முழங்கும் முரசு இயம்பாய் - அன்பால் பிறவிப் பகை கலங்கப் பேரின்பத் தோங்கும் பருமிக்க நாதப் பறை நாதப்பெரும்பறை என்பது நாத தத்துவம். இதிலிருந்தே சூக்குமை முதலான வாக்குகளும், வேதங்களும், ஆகமங்களும், ஏனைய தத்துவங்களும் தோன்றுகின்றன. இதுவே நடராசர் தாங்கி நின்றாடும் உடுக்கை. இதுவே படைத்தல் தொழிலைக் குறிக்கும். இது புனருற்பவம். "தோற்றந் துடியதனில்" என்று இதை மெய்கண்டசாத்திரங்கள் பதினான்கில் ஒன்றான உண்மை விளக்கம் பாடல் 36 கூறுகின்றது. தோற்றம் என்பது படைப்பு, துடி என்பது உடுக்கை. இதை டமருகம் என்று வடமொழியில் கூறுவர். 9. மாலை (தார்) ஆய மொழிக் கிள்ளாய் அள்ளூறும் அன்பர்பால் மேய பெருந்துறையான் மெய்த்தாரென் - தீயவினை நாளும் அணுகா வண்ணம் நாயேனை ஆளுடையான் தாளி அறுகாம் உவந்த தார் இண்டை, தொடை, கண்ணி, பந்து என்பன பல வகையான மலர் மாலைகளாம். 10. கொடி சோலைப் பசுங்கிளியே தூநீர்ப் பெருந்துறைக்கோன் கோலம் பொலியுங் கொடிகூறாய் - சாலவும் ஏதிலார் துண்ணென்ன மேல்விளங்கி ஏர்காட்டும் கோதிலார் ஏறாம் கொடி ”ஏற்றுயர் கொடியுடையாய்” என்பது திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள்.

No comments:

Post a Comment