Wednesday, September 26, 2012

புராணக்கதைகள்- அறிவியலா

சைவத்தின் நான்கு சமய நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர் என்று அழைக்கப்படும் சுந்தர மூர்த்தி நாயானார் வரலாறு பெரிய புராணத்தில் உள்ளது. தமது பதினெட்டாவது வயதில் திருவஞ்சைக்களம் என்ற கோவிலை வழிபடும்போது இவ்வுலக வாழ்வில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று அகத்தே வேண்டிப் பாடினார். உடனே சிவன் இவரை அழைத்து வர வெள்ளை யானையை அனுப்பினார். சுந்தரரும் வெள்ளை யானையின் மீது ஏறி வான் வழியே கைலாயம் சேர்ந்தார். யானையில் ஏறும்போது தம் அருமை நண்பரான அரசர் சேரமான் பெருமாளை நினைந்தார். அவரும் உடனடியாக இதை உணர்ந்து தமது குதிரையில் அமர்ந்து அதன் காதில் பஞ்சாட்சர மந்திரம் சொல்லி வான் வழியே கிளம்பி சுந்தரருக்கும் முன்னதாக கைலையை அடைந்தார். இது 63 சைவ அடியார்களின் வரலாறு சொல்லும் பெரிய புராணத்தில் உள்ள கதை. சுந்தரர் வாழ்ந்த வரலாறு உண்மை என்பது அவர் பாடி இன்று எமக்குக்கிடைத்துள்ள அவருடைய 1026 பாடல்களாலும், கோவில் கல்வெட்டுகளாலும் அறிகின்றோம். இவர் காலம் கி.பி 694 முதல் கி.பி 712 வரையாகும். சேரமான் பெருமாள் என்ற மலைநாட்டு மன்னனின் சம காலத்தவர். இவர் இன்றைய இந்தியாவின் தமிழ் நாட்டில் திருவாரூர் என்ற ஊரில் பிறந்தவர். இது தஞ்சாவூருக்கு கிழக்கே 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இவர் பாடிய திருத்தொண்டத்தொகையின் பதினொரு பாடல்களை மூலமாக வைத்தே பிற்காலத்தில் பெரிய புராணம் பாடப்பட்டது. சுந்தரரின் கதையை வரலாற்று நோக்கிலும், அறிவியல் நோக்கிலும் ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர் சிலர் இமய மலையின் அடிவாரத்தில் இன்றைய தீபெத், நேபாளப் பகுதிகளை அண்டி உள்ள திருக்கைலாய மலைக்கு சுந்தரர் தமது நண்பர் சேரமான் பெருமாளுடன் யாத்திரை சென்றார் என்று இக் கதையை எடுத்துக் கொள்கிறார்கள். இன்றும் கேதாரம், பத்ரிநாத், கைலாயம் போன்ற யாத்திரைகளில் குதிரைகள், கழுதைகள் போன்ற மிருகங்கள் பயன்படுத்தப்படுவதைக் காண்கிறோம். தமிழ் நாட்டில் இருந்து வட நாட்டுக்குச் செல்லும் ஒரு பகுதிப் பயணத்திற்காவது சுந்தரர் யானையைப் பாவித்திருக்கலாம். அல்பினிசம் (Albinism) என்ற மரபணுப் பிறழ்வுடைய வெள்ளை யானை என்பது அரிது என்றாலும் இல்லாத ஒன்றல்ல. இன்றும் கைலாய யாத்திரைக்குப்போகும் சிலர் பயணத்தின் கடுமை, கால நிலையின் தாக்கம், மலையேறுவோருக்கு உடலின் இசைபாக்க குறைவால் வருகின்ற சுவாசக்கடுப்பு (Mountain Sickness), இயற்கையின் அனர்த்தங்களான பனிப்புயல் போன்றவற்றுக்குப் பலியாகின்றார்கள். இன்று விமானத்தில் யாத்திரை செல்லுபவர்களுக்கே வைத்திய பரிசோதனைப் பத்திரம், காலநிலை உத்தரவாதம் என்பன இல்லாமல் மேலே பயணிக்க அனுமதிப்பதில்லை. ஆயிரத்து முன்னூறு வருடங்களுக்கு முன்னர் பயணம் எவ்வளவு கடினமானதாகவும், அபாயமானதாகவும் இருந்திருக்கும் என்பதை ஊகித்துப் பாருங்கள். இவ்வாறு கைலாயத்துக்கு தமிழ் நாட்டிலிருந்து யானை, குதிரைகளுடன் யாத்திரை சென்ற சுந்தரரும், சேரமான் பெருமாளும் மீண்டும் திரும்ப வில்லை. ஆகவே அவர்களின் கைலை யாத்திரை மேற் சொன்ன கதையாக வந்தது என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். இந்த இடத்தில் இன்னுமொரு வரலாற்றுப்பதிவை ஒப்பு நோக்குதல் பொருந்தும். கேரளாவிலே சேரமான் மஸ்ஜித்து என்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ஒரு இஸ்லாமியப் பள்ளிவாசல் ஒன்று திருவஞ்சைக்களத்தில் இருக்கின்றது. இதிலுள்ள மரக்கதவின் துகள்களை கரியக்கதிர்வீச்சுக் கால நிர்ணய முறையில் (Carbon Dating) ஆராய்ந்து இதன் காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை விஞ்ஞானரீதியாகவும் உறுதிப்படுத்தியிருக்கின்றார்கள். இந்தப்பள்ளிவாசல் சேரமான் பெருமாள் மன்னரினால் கட்டப்பட்டது என இதன் வரலாறு கூறுகின்றது. வழமையான மேற்கு நோக்கித் தொழுகின்ற இஸ்லாமியத் தொழுகை முறைக்கு மாறாக இங்கு கிழக்கு நோக்கியே தொழுகை நடைபெறும் வழமை உள்ளது. இந்தப் பள்ளிவாசலின் வரலாற்றுப் பதிவுகளின்படி இப்பள்ளிவாசலைக் கட்டிய சேரமான் மன்னர் புனித மெக்காவுக்கு யாத்திரை சென்றார் என்றும் அந்தக் கடற்பயணத்தில் இருந்து அவர் மீண்டும் திரும்பவில்லை என்றும் கூறுகின்றார்கள். இது நமது சேரமான் பெருமாள் நாயனாரின் கயிலைப்பயணத்தை இஸ்லாமிய வழியில் எடுத்துக்கூறவதாக அமைந்துள்ளதுபோலத்தோன்றுகின்றது. மேலும் இது சேரமான் மன்னரின் சமய சமரச வாழ்வையும் எடுத்துக்காட்டுகின்றது. வெள்ளை யானை என்பது ஞானத்தைக் குறிக்கும். புரவி அல்லது குதிரை என்பது யோகத்தைக் குறிக்கும். சுந்தரர் வெள்ளை யானையில் கைலை சென்றார் என்பது அவர் ஞானத்தால் இறைவனை அடைந்தார் என்பதையே குறிக்கின்றது. சேரமான் பெருமாள் புரவியில் கைலைக்குச் சென்றார் என்பது அவர் யோக மார்க்கத்தினால் இறைவனை அடைந்தார் என்பதையே குறிக்கின்றது. இவ்வாறு புராணக்கதைகளுக்கு அறிவியல் விளக்கம் கொடுக்க முயலும் அறிஞர்கள் சிலர் கூறுகின்றார்கள். இவர்கள் தத்துவங்களை மறைமுகமாக, குறியீட்டு வடிவங்களாக சொல்ல எழுந்தவையே புராணக் கதைகள் என்று கொள்வர். “முப்புரம் செற்றனன் என்பவர் மூடர்கள் முப்புரம் என்பது மும்மல காரியம்” என்ற திருமந்திரப் பாடலை தமக்கு எடுத்துக்காட்டாகக் கூறுவர். இன்னுமொரு சைவ சித்தாந்த தத்துவ முறையிலான நோக்கும் விளக்கமும் கூட சுந்தரரின் கதைக்கு உள்ளது. இதன்படி நாம் இருக்கும் இவ்வுலகம் பிரகிருதி மாயா உலகமாகும். சுந்தரர் சென்றது சுத்த மாயா உலகத்தில் உள்ள கைலைக்கு ஆகும். அது இந்த உலகில் தீபெத் நேபாள தேசங்களுக்கு அருகில் உள்ள கைலை அல்ல என்று சைவ சித்தாந்த அறிஞர்கள் கூறுவர். சாதாரணமாக சைவ சித்தாந்த விதிகளின் படி எமது இந்த பிரகிருதி மாய உலகத்திலுள்ள உடம்புடன் சுத்த மாயா உலகத்திற்கு நாம் செல்ல முடியாது. அதற்கு சுத்த மாயா தத்துவங்களால் ஆன உடல் வேண்டும். சுந்தரரின் தவச்சிறப்பால் அவருடைய பிரகிருதி மாயா தத்துவ உடல் சுத்த மாயா தத்துவ உடலாக மாற்றம் பெற்றது என்று இதற்கு விளக்கம் கூறுவர். அண்டவியல் விஞ்ஞானத்திலும் (Cosmology) நாம் இருக்கும் இந்த பூமி உள்ள அண்டத்தொகுதி போல வேறு பேரண்டத்தொகுதிகளும் (Parallel Universes) உள்ளன என்றும் அவற்றின் பௌதிக அமைப்புகளும் செயற்பாடுகளும் நமது அண்டத்தில் பௌதிக விதிகளுக்கு அப்பாற்பட்டவை என்றும் கேம்பிறிஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அண்டவியல் விஞ்ஞானி ஸ்ரீவன் ஹோக்கிங் (Stephen Hawkins) கூறுகின்றார். இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த விஞ்ஞானி ஆலபேர்ட் ஐன்ஸ்ரீன் (Alferd Einstein) இன் உடைய குவாண்டம் கொள்கையை (Quantum Theory) ஆராய்ந்து பல புதிர்களை விடுவித்தவர் இவர். இவர்கள் கூறவதெல்லாம் இருக்கட்டும். நமக்கு கைலையை அடைந்த சுந்தரர் பாடிய கடைசிப் பதிகமான பத்துப்பாடல்களைக் கொண்ட நொடித்தான்மலைப் பதிகம் கிடைத்திருக்கின்றது. தமது கடைசிப் பதிகத்திலே சுந்தரர் இவற்றைப் பற்றி என்ன சொல்லியிருக்கின்றார் என்று பார்ப்போம். “வானென வந்துஎதிர் கொள்ளமத்த யானை அருள் புரிந்து….” என்று முதலாவது பாடலிலும் “…வானை மதித்(து)அம ரர்வலஞ் செய்தெனை ஏறவைக்க ஆனை அருள்புரிந் தான் நொடித் தான்மலை உத்தமனே” என்று இரண்டாவது பாடலிலும் “….அந்தர மால்விசும் பில்அழ கானை அருள்புரிந்த….” என்று மூன்றாவது பாடலிலும் “…..வேழம் அருள் புரிந் தான்நொடித் தான்மலை உத்தமனே” என்று நான்காவது பாடலிலும் “…..விண்ணுல கத்தவர்கள் விரும் பவெள்ளை யானையின்மேல் என்னுடல் காட்டுவித் தான்நொடித் தான்மலை உத்தமனே” என்று ஐந்தாவது பாடலிலும் “…வெஞ்சின ஆனைதந் தான்நொடித் தான்மலை உத்தமனே” என்று ஆறாவது பாடலிலும் “…மலையிடை யானை ஏறிவழி யோவரு வேன்எதிரே..” என்று ஏழாவது பாடலிலும் “…ஏறுவதோர் சிரமலி யானை தந்தான்..” என்று எட்டாவது பாடலிலும் “…என்னை மத்த யானை அருள் புரிந்து..” என்று ஒன்பதாவது பாடலிலும் ஒன்பது இடங்களில் தான் யானையில் கைலை சேர்ந்த வரலாற்றைப் பாடியிருக்கின்றார். தாம் கண்ட கைலைக்காட்சியை “..மண்ணுல கிற்பிறந் துநும்மை வாழ்த்தும் வழியடியார் பொன்னுல கம்பெறு தல்கொண்ட னேன்இன்று கண்டொழிந்தேன்” என்று இவ்வளவு நாளும் செவிவழிச் செய்தியாக மட்டும் தெரிந்திருந்த 'உமது அடியார் உமது பொன்னுலகம் பெறுவர்' என்ற உண்மையை இன்று நான் நேரில் கண்டு அறிந்து கொண்டேன் என்று ஐந்தாவது பாடலில் பாடியிருக்கின்றார். “....மந்திர மாமுனி வர்இவன் ஆர்என எம்பெருமான் நந்தமன் ஊரன்என் றான்நொடித் தான்மலை உத்தமனே” என்று தன்னை சிவன் மற்றவர்களுக்கு அறிமுகம் செய்ததை ஒன்பதாவது பாடலில் பாடியிருக்கின்றார். “.....தனக்கு பிறிதோர் உடல் தந்ததை ஊனுயிர் வேறுசெய் தான்நொடித் தான்மலை உத்தமனே” என்று முதலாவது பாடலிலும் “..உடல் அழியா நிலை தந்ததை அலைகட லால்அரை யன்அலர் கொண்டுமன் வந்திறைஞ்ச உலையணை யாதவண் ணம்நொடித் தான்மலை உத்தமனே” என்று ஏழாவது பாடலிலும் பாடியிருக்கின்றார் சுந்தரர். “....சுந்தரர் ஒளி மயமான உடலுடன் கைலை சென்றதை அங்க ணோர்ஒளி ஆயிர ஞாயிறு பொங்கு பேரொளி போன்றுமுன் தோன்றிட ..” என்று பெரிய புராணம் 16ம் பாடல் சொல்லியிருக்கின்றது. இவ்வாறு சோதி வடிவான உடலுடன் நந்தனார் தில்லையில் இறையுலகம் சென்றதை பெரிய புராணத்தின் திரு நாளைப்போவார் கதையிலும் காண்கின்றோம். பிற்காலத்திலே உமாபதி சிவாச்சரியார் பெற்றான் சாம்பானுக்கு தீட்சை மூலம் ஒளியுடல் கொடுத்து இறையுலகம் அனுப்பியதையும், அதில் சந்தேகம் கொண்ட அரச ஆணையாளர்களுக்கும், சாம்பானின் மனைவிக்கும் ஒரு முள்ளிச் செடிக்கே ஒளியுடல் கொடுத்து எல்லோரும் காண இறையுலகம் அனுப்பி நிரூபித்ததையும் பிற்கால வரலாற்றுக் கதைகளில் காண்கின்றோம். கைலாயத்தில் நொடித்தான்மலைப் பதிகத்தைப் பாடிய பின்னர் சுந்தரர் கடல் தேவனான வருணனிடம் அதைக் கொடுத்து திருவஞ்சைக்களம் சேர்த்ததாக பெரிய புராணம் கூறுகின்றது. “..நாவல ஊரன்சொன்ன ஏழிசை இன்தமி ழால்இசைத் தேக்கிய பத்தினையும் ஆழி கடல்அரை யாஅஞ்சை யப்பர்க்(கு) அறிவிப்பதே” என்று பத்தாவது பாடலில் இப்பதிகத்தைக் கடல் தேவனான வருணன் மூலமாக திருவஞ்சைக்களத்துக்கு அஞ்சல் செய்ததைதயும் சுந்தரர் பாடியிருக்கின்றார். இப்போது உங்கள் கருத்து என்ன?

No comments:

Post a Comment