Monday, October 1, 2012

தாய் மகன் உறவு பலப்படும் கருட பஞ்சமி

காஷ்யப முனிவருக்கு இரண்டு மனைவிகள். மூத்தவளுக்கு பாம்புகளும், இளையவளுக்கு கருடனும் பிறந்;து இருந்தனர். ஒற்றுமையாக வாழ்ந்து வந்தவர்களில் ஒரு முறை வாக்குவாதம் ஏற்பட்டது. இந்திரனின் குதிரையின் வாலின் நிறம் என்ன என்பதே வாக்குவாதம். முடிவாக இருவரும் அந்தக் குதிரையை சென்று பார்ப்பது எனவும் யார் தோற்றாலும் ஜெயித்தவளுக்கு தோற்பவர் அடிமையாக இருக்க வேண்டும் என முடிவு செய்தனர். மூத்தவள் தனது கறுப்பு நிறப் பாம்புகளை அழைத்து இந்திரனின் குதிரையின் வாலில் சென்று வால்போல சுற்றிக் கொள்ளுமாறு கூறி விட்டாள். இளையவளுக்கு அது தெரியாது. குதிரையை சென்று தூரத்தில் இருந்தே பார்த்தனர். இளையவள் மூத்தவள் செய்த மோசடியினால் தோற்று மூத்தவளுக்கு அடிமை ஆனாள். மூத்தவள் அவளை கேவலமாக நடத்தி வந்தாள். காலம் சுழன்றது . கருடன் பெரியவர் ஆனதும் அவருக்கு தன் தாயார் அடிமையாகி கஷ்டப்பட்டபடி இருப்பதும் அதற்கான காரணமும் தெரிந்தது. ஆகவே அவர் பெரிய தாயிடம் சென்று தன் தாயாரை அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்க என்ன செய்ய வேண்டும் எனக் கேட்க அவளும் தேவலோகத்தில் இருந்து அமிர்தம் கொண்டு வந்தால் விடுவிப்பதாகக் கூறினாள். கருடனும் வழியில் தன்னை எதிர்த்தவர்களை அழித்துக் கொண்டே தேவலோகம் சென்றார். இந்திரனிடம் சென்று நடந்ததைக் கூறி அவரிடம் இருந்து அமிருதம் பெற்று வந்து தமது பெரியம்மாவிடம் தந்துவிட்டு தாயை மீட்டார். மீட்டதும் தமது தாயாரை ஏமாற்றிய சகோதரர்களை துவம்சம் செய்யத் துவங்க காஷ்யப முனிவர் தலையிட்டு இருவருக்கும் சமாதானம் செய்தார். அங்கு வந்த இந்திரனும் அது முதல் கருடனுக்கு பாம்புகள் அடிமையாகட்டும்; என கருடனுக்கு அருள் புரிந்தார். பின்னர் கருடன் விஷ்ணுவிற்கு வாகனமாகினார். தமது தாயை அடிமைத்தனத்தில் இருந்து மீட்ட விஷ்ணுவின் வாகனமான கருடனை கொண்டாடும் விதத்திலேயே சக்தி வாய்ந்த மழலைச் செல்வமும், குடும்ப ஒற்றுமையும், முக்கியமாக தாயார் மகன் உறவு பலப்பட வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டு கருட பஞ்சமி கொண்டாடப் படுகின்றது. மேலும் கருடனுக்கு பாம்புகள் அடிமை ஆனதினால் நாக தோஷம் உள்ளவர்களும் கருட பஞ்சமியைக் கொண்டாடுகிறார்கள். அதே நாளில் சில இடங்களிலும் நாக பஞ்சமியையும் கொண்டாடுகிறார்கள். அன்றைக்கு ஒன்பது அனந்தா, வாசுகி, தட்ஷ்யா, குளிகா, ஷங்கபாலா ,மகா பத்மா, பத்மா, கேஷா மற்றும் கார்கோடன் போன்ற நாக தேவதைகளை வழிபட்டு நாக தேவதைகளின் அருளைப் பெற பிரார்த்தனை செய்கிறார்கள்.

No comments:

Post a Comment