Saturday, December 29, 2012

தாய்மார்கள் மூன்றுவகை.

தாய்மார்கள் மூன்றுவகை. மூன்றாவது வகைத் தாய்மார்கள் பிள்ளை பாலுக்கு அழுதாலும் அழவிட்டுவிட்டு, தன்வேலை முடிந்தபின்னர் வந்து பசியாற்றுவர். இரண்டாவது வகைத்தாய்மார்கள் பிள்ளை அழுதபின்னர் தன் தவற்றினை உணர்ந்து ஓடிச் சென்று பால் ஊட்டுவர். ஆனால் முதல்வகைத் தாய்மாரோ பாலூட்டி நேரமாயிற்றே! குழந்தைக்கு பசி எடுக்குமே! என்று நினைத்து தானே சென்று குழந்தை பசியினால் துடித்து அழுவதற்கு முன்பாகவே பாலூட்டுவர்.
ஆனால் இறைவனோ இவர்கள் யாவரிலும் மேலான தாயாக விளங்குபவன். பால் நினைந்து ஊட்டும் தாயினைவிட மேலான பரிவினை நம்மீது காட்டுபவன் இறைவன்.
நம்மை முழுமையாக அவனிடம் ஒப்புவித்தால் போதும். அவன் நம்மைத் தன் கருணை வட்டத்தில் வைத்து விடுவான். நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான். இறைவன் மீது முழுமையான நம்பிக்கை மட்டும் வைத்தால் போதும். இறைவன் நமக்குத் தேவையான எல்லாவற்றையும் வாரி வாரி வழங்கக் காத்திருக்கின்றான். இக்கருத்தைத் தான் மாணிக்க வாசகப்பெருமான் தேனினும்இனிய திருவாசகத்தில் ‘பால்நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்தவன்’ என்று சிவபெருமானைக் குறிப்பிடுகின்றார். இக்கூற்றினை மெய்ப்புக்கும் வரலாறுகள் நிறைய இம்மண்ணிலே உண்டு. விரிவஞ்சி ஒன்றிரண்டு வரலாறுகளை மட்டும் இங்கே காண்போம்.
சீர்காழியில் வாழ்ந்த சிவபாத இருதயர் சிவபெருமான் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்தார். “சைவநெறி வளர வழிகாட்டு” என்று வேண்ட, சைவநெறி வளர்க்கும் திருஞான சம்பந்தப் பெருமானை இறைவன் அவருக்கு மைந்தனாகப் படைத்தார்.
மூன்று வயதுப் பாலகனாகத் திருஞானசம்பந்தர் விளங்கியபோது ஒரு நாள் குளக்கரைக்கு தந்தையுடன் செல்ல வேண்டுமென்று அடம் பிடித்தார். குழந்தையின் பிடிவாதத்தை உணர்ந்து சிவபாத இருதயரும் குழந்தையுடன் குளக்கரைக்குச் சென்றார். நீராடுவதற்கு முன்பாக குழந்தையை யார் பொறுப்பில் விடுவது? என்று தந்தையாருக்கு ஒரு குழப்பம். திருத்தோணிபுரம் திருக்கோயில் கோபுரத்தில் வீற்றிருந்த சிவபெருமானிடம் குழந்தையை கவனிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். பின்னர் நிம்மதியாக நீராடத் தொடங்கினார்.
தந்தையைக் காணாத பாலகனாம் திருஞானசம்பந்தர் அழத் தொடங்கினார். தன்னிடம் பொறுப்பை சிவபாத இருதயர் ஒப்படைத்து விட்டாரே என்று சிவபெருமான் அம்பாளை நோக்க அம்பாள் பொற்கிண்ணத்தில் பால் கறந்து பச்சைப் பசும் தளிரான பாலகனாம் சம்பந்தன் கொச்சை மொழி குதறி குளக்கரையில் அழும்போது ஊட்டினார். குழந்தையின் பசி தீர்ந்தது. அம்பாளிடம் ஞானப்பால் உண்ட குழந்தை அழுகை மாறிச் சிரித்தது.
நீராடிவிட்டு குளக்கரைக்கு வந்த சிவபாத இருதயர், “யார் உனக்குப் பாலூட்டியது?” என்று கேட்க. குழந்தை கோபுரத்தில் வீற்றிருந்த சிவபெருமானைக் காட்டி “தோடுடைய செவியன்” தான் பால் கொடுத்ததாகக் கூறியது.
தன்னை முழுமையாக நம்பி ஒப்படைக்கப்பட்ட குழந்தையின் பசி தீர்த்ததோடு இறைவன் அக்குழந்தையைக் கைவிடவில்லை. சாதாரணத் தாய் என்றால் குழந்தையின் பசி தீர்ந்ததும் அக்குழந்தையைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காமல் தன் வேலையில் மூழ்கி விடுவாள்.
இறைவன் அப்படிப்பட்ட தாய் அல்லன். பால் நினைந்து ஊட்டும் தாயினும் சிறந்தவன் அல்லவா? அந்தக் குழந்தையை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டே வந்தார்.
குழந்தை இறைவன் எழுந்தருளியுள்ள திருத்தலம்தோறும் சென்று தேவாரப் பதிகங்களைப் பாடும்போது கை சிவக்கச் சிவக்க தாளம் போட்டது.
தாயுமான ஈசனுக்கே குழந்தைக்குக் கை வலிக்குமே என்று கவலை வந்தது. உடனே பொன்னாலாகிய தாளத்தைத் தந்தார். ஆனால் இக்கோயிலில் எழுந்தருளியுள்ள எம்பெருமானுக்கு “தாளபுரீஸ்வரர்” என்று பெயர். அம்பாளோ உடனே அந்தத் தாளத்தில் ஓசையாக வந்து அமர்ந்தாள். அதனால் அவளுக்கு “ஓசை கொடுத்த நாயகி” என்று பெயர்.
இத்துடன் இறைவனின் கருணை நின்றுவிடவில்லை. தான் கோவில் கொண்டுள்ள திருத்தலங்களுக்கெல்லாம் குழந்தை கால் வலிக்க வலிக்க நடந்து வருகின்றதே என்று முத்துப்பல்லக்கு தந்தார். குழந்தை வெயிலில் வாடக்கூடாதே என்று முத்துக்குடை தந்தார். இவையனைத்திற்கும் மேலாக தந்தையாரைப் போன்றே இந்த ஞானசம்பந்தரும் தன்னயே முழுமையாக நம்பியிருக்கின்றாரே என்று அவரது பெற்றோர் அவரோடு திருத்தலங்களுக்கெல்லாம் தொடர்ந்து செல்ல இயலாது என்பதனை உணர்ந்து, குழந்தை தாய் தந்தை அரவணைப்பினை இழக்க நேரிடுமே என்று கருதி, தன் சார்பாக திருஞானசம்பந்தருக்கு அன்பும் அக்கறையும் காட்டும் தாய் தந்தையைப் போன்று மதங்க சூளாமணி அம்மையாரையும் திருநீலகண்ட யாழ்ப்பாணரையும் திருஞான சம்பந்தருடன் இறுதி வரையிலும் துணையாக அனுப்பி வைத்தார்.
இவற்றை எண்ணிப் பார்க்கின்ற போது பெற்ற தாயைவிட மேலானவன் இறைவன் என்பது நமக்குத் தெளிவாகப் புலனாகிறது.
பால் நினைந்து ஊட்டும் தாய் தன் குழந்தைக்கு நோய் வந்தால் தான் பட்டினி கிடப்பாள். தன்நலத்தை மறந்து குழந்தையின் நலத்தினையே நினைப்பாள். ஆனால் இறைவனோ தன்னை நம்பும் பக்தனுக்காகத் தன் இயல்பினை, தன் வடிவத்தினையே மாற்றிக் காட்டுகின்றான். நம் மீது மாறாத பாசம் கொண்ட இராசசேகர பாண்டியனுக்காக சிவபெருமான் தன் இயல்பினை தன் வடிவத்தினை மாற்றம் செய்தார்.

மதுரையை ஆண்ட இராசசேகர பாண்டியன் என்னும் மன்னன் அவ்வூரில் கோவில் கொண்டுள்ள சோமசுந்தரப் பெருமானின் மிகச் சிறந்த பக்தன். அவன் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினான். சிவபெருமானுக்கு உகந்த கலை என்று நடனக்கலை மட்டும் பயிலாமல் மற்ற அறுபத்து மூன்று கலைகளையும் கற்று உணர்ந்தார்.
சோழ நாட்டுப் புலவன் ஒருவன் “உமக்கு அறுபத்தி நான்கு கலைகளும் தெரியவில்லையே!” என்று எடுத்துரைக்க “இறைவா! நடனக்கலையும் நான் கற்க வேண்டும் என்பது உன் விருப்பம் போலும்” என்று நடனக் கலையையும் கற்றுக் கொள்ள முனைந்தான்.
நடனம் பயிலும்போது தன் உடம்பில் வலியும் சோர்வும் ஏற்படுவதை இராசசேகர பாண்டியன் நன்கு உணர்ந்தான். சிறிதுநாள் நடனம் பயிலும் நமக்கே இவ்வளவு அயர்வு நோய் வந்தால் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்த நாள்முதல் இன்றுவரை ஒரே காலை ஊன்றி நடனம் ஆடிக் கொண்டிருக்கும் சிவபெருமானுக்கு கால்கள் எப்படி வலிக்கும்! காலை மாற்றாமல் கூட இறைவன் ஆடிக் கொண்டிருக்கின்றானே! என்று எண்ணி மனம் நொந்தான்.
சிவபெருமானுக்கு பூஜை செய்து, “இறைவா! உனக்கு அயர்வு நோய் வரக் கூடாது. உனக்கு கால்வலி வருமே என்று எனக்குக் கவலையாக இருக்கிறது. ஆகவே இந்த நகரில் நீ கால் மாற்றி நடனமாட வேண்டும். இல்லையேல் நான் இறந்து விடுவேன்.” என்று அன்புடன் வேண்டினான்.
பக்தனின் அன்பினை எண்ணி சிவபெருமானும் வெள்ளியம்பலமாகிய மதுரையில் மட்டும் வழக்கத்திற்கு மாறாக கால்மாற்றி இடக்காலை ஊன்றி வலக் காலை மேலே எடுத்து வீசி நடனமாடினார். இன்று வரை அக்காட்சி தொடர்கிறது.
தன்னை முழுமையாக நம்பும் தன் பக்தர்களுக்காக இறைவன் அவர்களின் ஒவ்வொரு நிலையிலும் எந்தக் குறையும் வாராமல் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்வதோடு தன்மீது பக்திகொண்ட ஜீவாத்மாவுக்காக அந்தப் பரமாத்மா தன் இயல்பினை மாற்றி கால் மாறி ஆடியதை நினைக்குந் தோறும் மாணிக்க வாசகப் பெருமான் எழுதிய “பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்தவன் இறைவன் என்ற உயரிய உண்மையை உணரும் போது நம் கண்களில் நீர் பெருகுகின்றது. அத்தகைய கருணை நிறைந்த எம்பெருமான் மீது நாமும் முழுநம்பிக்கை வைப்போம்! வாழ்வில் உய்வோம் !!

No comments:

Post a Comment