Friday, December 28, 2012

பாவை நோன்பு

பாவை என்றால் பெண்ணைக் குறிக்கும். பொம்மை என்றும் பொருள்படும். பெண்கள் மட்டுமே மேற் கொள்ளும் நோன்பு (விரதம்) என்பதால் "பாவை நோன்பு''" என்றழைக்கப்பட்டது. மார்கழி மாதத்தில் சூடி கொடுத்த சுடர்க் கொடியாம் கோதை என்னும் ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரில் நீராட்டு உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். ஆண்டாள் யார்?

அவள் ஏன் பூமியில் அவதரித்தாள்? திருமாலின் துணைவியான திருமகள், பூலோகத்தில் பிறந்து, மக்களை நல்வழிப்படுத்தவும், தங்களை வணங்கினால் இம்மை மறுமைப் பேற்றை அடையலாம் என்பதை உணர்த்தவும் கூடியதான பிறப்பைத் தனக்கு அளிக்க வேண்டும் எனத் திருமாலிடம் கேட்டாள்.

உடனே திருமால் அவளின் விருப்பப்படி இம்மைக்கும் மறுமைக்கும் என்ன தேவை என்பதை முன்னரே பூமியில் உணர்த்தி இருக்கும் விஷ்ணு சித்தனுக்கு (பெரியாழ்வார்) மகளாக அவதாரம் செய்ய அருள் புரிந்தார். அதன்படி, ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய நந்தவனம் அமைத்து இறைவனை தரிசனம் செய்யாத நாள் எல்லாமே பட்டினி நாளாகக் கருதிக் கைங்கரியம் செய்து வந்த விஷ்ணு சித்தரின் நந்தவனத்தில் பச்சிளங் குழந்தையாய் விடியற்காலையில் அழுதபடியே திருமகள் அவதரித்தார்.

மலர் கொய்ய வந்த பெரியாழ்வார், திருமகளே குழந்தையாய் அவதரித்திருப்பதை அறியாது இறைவன் கொடுத்த குழந்தை என்று எண்ணி எடுத்து வந்து "கோதை'' என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். அரங்கனையே ஆளப்போவதால் "ஆண்டாள்'' என்றும், தன் தந்தை தொடுத்து கொடுத்த மாலையை முதலில் தான் அணிந்த பின்பே இறைவனுக்கு சூட்டியதால் "சூடிக் கொடுத்த சுடர் கொடி'' என்றும் அழைக்கப்பட்டாள்.

108 திவ்ய ஷேத்திரங்களின் திவ்ய சரித்திரத்தைப் பெரியாழ்வார் எடுத்துரைத்த போது, ஆண்டாளின் மனம் திருவரங்கத்தில் உறையும் ஸ்ரீரங்கநாதரின் மீது காதல் கொண்டது இதையறிந்த பெரியாழ்வாறோ மானுடராய்ப் பிறந்தவர் இறைவனை எப்படி மணக்க முடியும் எனக் கலங்கி நிற்க, ஆண்டாளோ எதுபற்றியும் கவலை கொள்ளாது திருமணக் கனவை ஸ்ரீரங்கநாதனோடு சேர்ந்த நிலையில் கண்டு கொண்டிருந்தாள்.

தன்னுடைய பக்தியையும், விருப்பத்தையும், தான் விரும்பியவனுக்கு தெரிவித்தது போதவில்லையோ என்று எண்ணிய ஆண்டாள் "பாவை நோன்பு'' நோற்க ஆயத்தமானாள். விடியத் துவங்கும் அதிகாலைப் பொழுதை ஆண்டாள் பாவை நோன்பு நோக்கத் தேர்ந்தெடுத்தாள், அவ்வாறே தன்னைச் சுற்றி உள்ள பெண்களுக்கு, தான் இருக்கும் நோன்பின் விபரம் யாரை வேண்டி இந்த நோன்பு அவனுடைய விபரங்கள், நோன்பு இருப்பதால் உண்டாகும் பலன்கள் ஆகியவைகளை அறிந்து கொள்ளவும் நோன்பிருக்கும் சமயத்தில் பாடுவதற்காகவும் பாசுரங்களை வடித்தாள்.

அப்பா சுரங்களுக்கு "திருப்பாவை''என்று பெயர் சூட்டினாள். பாவை நோன்பு நோற்று முடித்த ஆண்டாள், அவள் கொடுத்த மாலையோடு ஸ்ரீரங்கநாதர் விரும்பி ஏற்றார். அதனால்தான், திருமண மாகாத பெண்கள் விரும்பியபடி நல்ல கணவன் அமைய வேண்டும் என்று வேண்டி பாவை நோன்பு இருப்பதுடன், திருப்பாவை பாசுரங்களையும் பாடுகின்றனர்.

மார்கழி மாதத்தில் காலையில் எழுந்ததும், வாசல் முன்புறத்தைச் சுத்தம் செய்து, கோலமிட்டு, அதன் மையத்தில் சாணத்தைப் பிடித்து வைத்து அதன் மீது பரங்கிப் பூவை வைத்திருப்பதை வீதிகள் தோறும் பார்த்திருப்போம். ஆன்மீக மார்க்கத்திற்குச் செல்லும் சிறந்த மாதம் மார்கழி என்பதன் அடையாளம்தான் அது.

நோன்பு நாட்களில் பெண்கள் நெய் உண்ணாமல், பால் அருந்தாமல், கண்ணுக்கு மையிடாமல், கூந்தலுக்கு மலரிடாமல், செய்யக் கூடாத காரியங்கயைச் செய்யாமல், தீய வார்த்தைகளைப் பேசாமல் தர்மம் செய்து வர வேண்டும் என்று திருப்பாவையில் ஆண்டாள் கூறுகின்றாள். இத்தகைய முறையோடு பாவை நோன்பிருந்து வந்தால், நல்ல கணவன் அமைவான். மனத் தெளிவும், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். நாடு செழித்து நல்ல மழை பொழியும். பிரிந்த தம்பதிகள் இணைவர்.

No comments:

Post a Comment