Friday, December 28, 2012

மகாலட்சுமியின் அவதாரம் குறித்து ஆனந்த் ராமாயணத்தில் ஒரு தகவல்

மகாலட்சுமியின் அவதாரம் குறித்து ஆனந்த் ராமாயணத்தில் ஒரு தகவல் கூறப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

முன் காலத்தில் பத்மாட்சன் என்ற மன்னன் நீதிநெறி தவறாமல் நாட்டை ஆண்டு வந்தான். செல்வத்தின் தேவதையாகிய லட்சுமியை தன் பெண்ணாக அடைய வேண்டும் என்ற எண்ணம் அவன் மனத்தில் உண்டானது.


அப்போதே காட்டுக்குள் சென்று லட்சுமிதேவியை நினைத்து குறித்துக் கடும் தவம் செய்தான். லட்சுமிதேவி பத்மாட்சன் முன் தோன்றி, "நீ வேண்டும் வரம் யாது?' என்று கேட்டாள். பத்மாட்சன் மகாலட்சுமியை போற்றி துதித்து, `தாயே! இந்த உலகில் எனக்கு எந்தவிதக் குறையும் இல்லை. எனக்குள்ள ஒரே மனக்குறை ஒரு குழந்தை இல்லையே என்பது தான். தாயே!


தாங்களே எனக்கு மகளாக வந்து என்னை ஆட்கொள்ள வேண்டும் என்பதுதான் எனக்குள்ள விருப்பம். அதற்கு அருள்பாலிக்கவேண்டும்'' என்று கேட்டுக் கொண்டான். புன்னகை புரிந்த மகாலட்சுமி "பத்மாட்சனே! நீ விரும்பும் வரத்தை அளிக்கும் உரிமை மட்டுமே எனக்கு இருக்கிறது. நானே உன் மகளாகப் பிறக்க வேண்டுமென்று விரும்பியதால் உன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றும் சக்தி என் நாயக ரான மகாவிஷ்ணு விற்குத்தான் உண்டு.


அதனால் அவருடைய அருளைக்கோரி தவம் செய்'' எனக்கூறி மறைந்தாள். பத்மாட்சன் பகவான் விஷ்ணுவை நோக்கி கடுந்தவம் புரிந்தான். விஷ்ணு பகவான் பத்மாட்சன் முன் தோன்றி, "என்ன வரம் வேண்டும்'' என்று கேட்டார். பத்மாட்சன், மகாலட்சுமி தனக்கு மகளாகப் பிறக்கவேண்டும் என்ற தன் ஆசையை வெளியிட்டான்.


"உன் எண்ணம் உடனே நிறைவேறும்'' என மகாவிஷ்ணு வரம் கொடுத்தார். அடுத்த கணம் பத்மாட்சனின் முன்னால் எரிந்து கொண்டிருந்தயாக அக்னியில் இனிய குரலெடுத்து குழந்தை ஒன்று அழும் ஒலி கேட்டது. திடுக்கிட்டு யாக அக்கினியை கவனித்த பத்மாட்சன், அக்கினிக்கு மத்தியில் அழகிய பெண் குழந்தை ஒன்று கை, கால்களை உதைத்து விளையாடியவாறு கிடப்பதை கண்டான்.


பிரமிப்படைந்த பத்மாட்சன் யாக அக்கினிக்குள் கை நீட்டி குழந்தையை வாரி எடுத்தான். யாக அக்கினி அவனைத் தொடவில்லை. பத்மாட்சனின் மகளாக வளர்ந்த மகாலட்சுமி பல திருவிளையாடல்களை செய்த பின்னர் மகாவிஷ்ணுவை சென்றடைந்தாள் என்பது கதை.

No comments:

Post a Comment