Saturday, December 29, 2012

பெண்களின் தர்மங்கள்

“தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை”
என்கின்ற வரிகளுக்கேற்ப தாயையும், தந்தையையும் தெய்வமாக வழிபடுவது நமது பாரதப் பண்பாடு. பெண்ணைத் தாயாகப் போற்றுவதும் நமக்கே உரிய சிறப்பு. பாரதியக் கலாசாரத்தில் பெண்மைக்கு மிகுந்த மரியாதை தரப்படுகின்றது. நதிகளுக்கும் பெண்களின் பெயரையே இட்டு தெய்வமாக வணங்குகின்றோம். பெண்மையானது மனுஷ்யஜாதியில் மட்டும் சிறப்பிடம் பெறவில்லை. பசுவினைக் கூட தெய்வமாக வணங்குவது நம்முடைய இயல்பு. பெண்மையே தாயாகத் தோன்றி நம்மைப் பெற்றெடுத்தும், காத்தும், வளரக்கின்றது. பெண்மையே நமக்கு மனைவியாகி உறுதுணை புரிகின்றது. பெண்மையே நமக்கு மகவாகி பணிவிடைகளைச் செய்கின்றது. பெண்மையின்றி அதாவது பெண்ணின்றி இவ்வுலகத்தில் ஒன்றும் நடவாது, அதை உணர்த்துவதற்குத்தான் இறைவனே தன்னுடைய உடலில் பாதியை பெண்மைக்கு ஈந்து (பரமேஸ்வரிக்குத் தந்து) அர்த்தநாரீஸ்வரனாக விளங்குகின்றான். “பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகையிருந்ததே” என்று ஞானசம் பந்தரும் அம்பாளை பெண்ணில் நல்லாள் என்று குறிப்பிடுகின்றார்.
பெண்மையின் சிறப்பியல்புகளை வார்த்தைகளினால் வடித்துக் கூற இயலாது. அப்பேர்ப்பட்ட சிறப்பியல்புகளைப் பெற்று பெண்ணாகப் பிறந்தவர்கள் ஆற்றவேண்டிய அறங்கள் எவையென்று சற்றுப் பார்ப்போம்.
(பிதா ரக்ஷதி கௌமாரே பர்தா ரக்ஷதி யௌவனே
ரக்ஷந்தி ஸ்தவிரே புத்ரா: ந ஸ்த்ரீ ஸ்வாதந்த்ரியமர்ஹதி)
மனுஸ்மிருதி அத்யாயம் 9 ஸ்லோகம் - 3
இளமையில் தகப்பனாலும், பருவ காலத்தில் கணவனாலும், முதுமையில் மைந்தர்களாலும் பெண்ணானவள் காகப்பட வேண்டியவள். பெண்ணானவள் தன்னிச்சைப்படி வாழக் கூடாதவள் என்று மனுஸ்மிருதி கூறுகின்றது.
இவ்விடத்தில் பெண்களுக்கு ஸ்வதந்த்ரம் (விடுதலை) இல்லை என்று அர்த்தமில்லை. அவர்களுக்கு கல்வி கற்பது முதல் தன்னுடைய எதிர்காலத்தை திட்டமிட்டுக் கொள்ளல் வரைக்கும் தற்காலத்தில் ஸ்வதந்த்ரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆணைப்போன்று பெண்களுக்கும் எல்லாவற்றிலும் உரிமை உண்டு (விலக்கப்பட்ட சிலவற்றைத் தவிர). ஒரு ஆண்மகனானயன் பெண்ணைத் தனியே தவிக்கவிடாது அவளுக்கு வேண்டிய வாழ்க்கை வசதிகள் அனைத்தையும் செய்துகொடுத்து இவ்வுலகில் அவளை இனிமையாக வாழவைக்க வேண்டும். என்று பெண்களை ரக்ஷிக்குமாறு ஆண்களைத்தான் வற்புறுத்துகின்றது. பெண்கள் தனியே வாழ நேரிடுமாயின் அவர்களுக்கு பல இடர்ப்பாடுகள் தோன்றும். அவ்வாறு அவர்கள் துன்பமடையாது ஆண்கள் அவர்களைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். ஆதரவற்ற பெண்ணொருத்தியை அழ வைப்பவனுக்கு மறுமையில் அவன் மீண்டுவராத வண்ணம் கொடிய தண்டனைகள் காத்திருக்கின்றன. ஆதரவற்ற பெண்கள் வயது முதிர்ந்தவர்களாக, இளம்பெண்களாக, சிறுமிகளாக, குழந்தைகளாக எவ்வகையில் இருந்தாலும் அவர்களுக்கு தகுந்த உதவிகளைச் செய்து அப்பெண்களுக்கு இழுக்கு நேராவண்ணம் பண்புடன் போற்றிப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்லாது ஒவ்வொரு ஆண்மகனின் கடமையாகும். ஒவ்வொரு ஆண்மகனுக்கும் மனைவியைத் தவிர மற்ற எல்லா பெண்களும் (வயதில் சிறியவர்களாக இருந்தால் கூட) தாயைப்போன்று எண்ணத்தக்கவர்கள். எனவே பெண்மைச் சமுதாயத்தை துன்பமின்றி காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு ஆண்மகனுக்கும் உண்டு.

(காலேதாதா பிதா வாச்யோ வாச்யஸ்சானுபயன்பதி:
ம்ருதே பர்தரி புத்ரஸ்து வாச்யோ மாதுரரக்ஷிதா)
மனுஸ்மிருதி, அத்யாயம் -9 ஸ்லோகம் -(4)
தக்க பருவத்தில் தக்க ஒருவனுக்கு தம்பெண்ணை மணமுடித்துக் கொடுக்காத தந்தையும், மனைவியை தனிமையில் வாட விடுபவனும், கணவனை இழந்தவளான தன்னுடைய தாயைப் போற்றிப் பாதுகாக்காத பிள்ளையும் நிந்தைக்குரியவர்கள்.
இனி பெண்களுடைய குணநலன்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
பெண் குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே பெற்றோர் சிறந்த பண்புகளைச் சொல்லித்தர வேண்டும். கல்வி கற்றலில் ஊக்கம், தெய்வபக்தி, பெரியவர்களிடத்தில் பணிவுடன் நடந்து கொள்ளுதல், இனிமையாகவும் பொருளுடனும் பேசுதல், ஆடைகளில் நாகரிகம் போன்றவற்றை பெற்றோர் அவர்களுக்கு எடுத்தியம்ப வேண்டும். இவை பெண் குழந்தைகளுக்கு மட்டுமன்று ஆண் குழந்தைகளுக்கும் தான்.
இளம் வயதிலிருந்தே குழந்தைகளை ஒழுக்கம் நிறைந்த கல்வியினை போதிப்பதன் மூலம் ஸம்ஸ்காரம் நிறைந்தவர்களாக உருவாக்க இயலும்.
காலையிலும், மாலையிலும் வாசலில் நீர்தெளித்து பெருக்கி கோலமிட்டு வழிபாட்டு அறையில் விளக்கேற்றி இறைவனைத் துதிக்க அவர்களுக்கு சொல்லித் தருதல் வேண்டும். ஸம்ஸ்க்ருதம் தெரியாத குழந்தைகளுக்கு விநாயகர் அகவல், கந்தர்சஷ்டி கவசம், அபிராமி அந்தாதி போன்றவற்றைக் கற்றுத் தருதல் வேண்டும். இல்லத்தை எவ்வாறு நிர்வகிப்பது போன்றவற்றையும் சிறுசிறு வேலைகளின் மூலம் சொல்லித் தரலாம். அதற்காக பெண்குழந்தைகள் என்றாலே வீட்டு வேலை செய்வதற்கு மட்டும் தான் என்ற சூழ்நிலையை உண்டாக்கி விடக்கூடாது. பெண்குழந்தைகளுக்கும் விளையாட்டு, உலகநிகழ்வுகளை அறிந்து கொள்ளுதல், விஞ்ஞானக் கல்வி போன்றவற்றில் ஊக்கத்தை அளிக்க வேண்டும். கூடவே அவர்களை நல்ல பழக்க வழக்கங்களின் மூலம் ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவது அவர்களால் உண்டாகப் போகும் வருங்காலத் தலைமுறைகளுக்கு நன்மை பயக்கும். சம்ஸ்க்ருத மொழியையும் பெண்குழந்தைகள் கற்குமாறு செய்ய வேண்டும்.
ஒழுக்கம் நிறைந்த வாழ்வே இனிமை பயக்கும். கட்டுப்பாடுகளற்று வாழ்வது என்பது கடிவாளமற்ற குதிரையில் பயணம் செய்வது போன்றது, நிச்சயம் அது நம்மைத் துன்பத்தில் ஆழ்த்தி விடும்.
ஆடைகளிலும் ஒரு கட்டுப்பாடு வேண்டும். உடலினை முழுவதுமாக மறைக்கும் ஸம்ப்ரதாயமான ஆடைகளையே பெண்கள் அணிய வேண்டும். உடலின் அங்கங்களை ஆபாசமாக வெளிப்படுத்தும் ஆடைகளை பெண்கள் அணியக் கூடாது. தன்னுடைய அங்கங்களை அரைகுறை ஆடைகள் மூலமாக வெளிப்படுத்தி கணவனையன்றி காண்போரின் உள்ளத்தில் காமத்தினை வளரச் செய்யும் பெண்கள் மிகவும் இழிந்தவர்கள் என்று தர்மசாஸ்த்ரங்கள் குறிப்பிடுகின்றன. அவர்களால் ஒழுக்கமற்ற குற்றச் செயல்கள் பெருகிவருவது கண்கூடு. இன்றைய சூழலில் நீதிபதிகள் கூட மேற்கண்டவற்றை உதாரணம் காண்பித்து பெண்களுக்கு எதிரான இம்மாதிரியான குற்றங்கள் பெருகாதிருக்க உடலினை முழுவதும் மறைக்கும் உடைகளை (ஸ்ம்ப்ரதாயமான உடைகளை) உடுத்தச் சொல்கின்றார்கள். இவ்வாறு கூறுவது பெண்களின் ஸ்வதந்தரத்தைப் பறிப்பது போன்று உள்ளதே என்று கேட்டால் அவ்வாறு இல்லை. ஆடை என்பதே நம்முடைய அங்கங்களைப் பிறர் காணா வண்ணம் மறைப்பதற்குத்தானே! எனவே பெண் குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே ஆடை அணிவதில் ஓர் ஒழுங்கினை பெற்றோர் ஏற்படுத்த வேண்டும்.
நெல்மணிகள் நிறைய இருக்கின்றன. அவற்றை எடுத்துக் கொண்டுபோய் அப்படியே வயலில் கொட்டிவிட்டு வந்து சில மாதங்கள் கழித்துப் போய்ப் பார்த்தால் அங்கு ஒன்றும் விளைச்சல் ஏற்பட்டிருக்காது. எல்லாமே அழிந்து போயிருக்கும். தப்பித்தவறி முளைத்த ஏதோ ஒன்றிரண்டு நெற்பயிர்கள் கூட பராமரிப்பு இல்லாததால் விளைச்சலின்றி இருக்கும். நல்ல விளைச்சல் வர வேண்டுமானால் நல்ல பருவத்தில் நிலத்தை உழுது, நீர்நிரப்பி விதைதெளித்து குறிப்பிட்ட காலத்தில் அவற்றைப் பிடுங்கி வேறிடத்தில் நட்டு நீர்பாய்ச்சி, களையெடுத்து உரம் இட்டுக் காப்பாற்றினால் தான் நெல்லிலிருந்து நல்ல விளைச்சல் கிடைக்கும். அதுபோன்றே நல்ல குடிமக்களை உருவாக்கப் போகும் பெண்களும் இளம் வயதிலிருந்தே ஒழுக்கத்துடன் கூடியவர்களாக வளர வேண்டியது இன்றியமையாதது. கட்டுப்பாடின்றி ஸ்வதந்தரமாக விட்டுவிட்டால், அவர்கள் திசைமாறும் போது அவர்களுக்கு வாழ்க்கையின் உண்மை நிலையைச் சொல்லிப் புரியவைக்காவிட்டால், அவர்களின் வாழ்க்கை வருங்காலத்தில் கேள்விக் குறியாகிவிடும்.

இப்பொழுது காதல் திருமணங்கள் அதிகமாகிக் கொண்டு வருவதைக் காண்கின்றோம். பெற்றோரின் அனுமதியின்றி தாமாகவே திருமணம் செய்து கொள்ளும் இளந்தலைமுறைகளை நிறையப் பார்க்கின்றோம். ப்ராஹ்மண ஜாதியிலும் இது அதிகமாகி வருகின்றது. ஸமான ஜாதியில் தன்னுடைய கோத்ரமல்லாத பொருத்தமான ஒரு வரனையோ அல்லது பெண்ணையோ காதலித்து திருமணம் செய்து கொள்வது தவறென்று சொல்லவில்லை. ப்ராஹ்மணர்களுக்கு “ப்ராஹ்மம்” எனப்படும் பெற்றோர் பார்த்துச் செய்து வைக்கும் விவாஹமே சிறந்தது என்று கூறப்பட்டுள்ளது. ப்ராஹ்மணனாகிய ஒருவன் ப்ராஹ்மண குலத்தைச் சாராத ஒரு பெண்ணை மணந்தால் அவனுக்குப் பிறக்கும் குழந்தைகள் ப்ராஹ்மணர்கள் அல்லர். அவர்கள் அவனுக்கு எவ்விதமான வைதீக கர்மாக்களையும் செய்ய முடியாது. புத்திரர்கள் இருந்தாலும் அவர்களால் அவனுக்கு ப்ரயோஜனம் இல்லை.
அதுபோன்று ஒரு ப்ராஹ்மணப் பெண் ப்ராஹ்மண குலத்தைச் சாராத வேறோர் ஆடவனை மணந்தாலும் அவளுக்குப் பிறக்கும் குழந்தைகளும் ப்ராஹ்மணர்கள் அல்லர். அத்தகைய குழந்தைகளுக்கு வைதீக முறைப்படி உபநயனம் முதலிய எந்தக் கர்மாக்களையும் செய்ய முடியாது.
இவ்வாறான உண்மைகளை ப்ராஹ்மணர்கள் தங்கள் புத்ரனுக்கோ, புத்ரிக்கோ சொல்லி அவர்களுக்குப் புரியவைக்கவேண்டும். கலப்பு மணம் செய்வதனால் உண்டாகும் இடர்ப்பாடுகள் இப்போது அவர்களுக்குத் தெரியாது. பின்னால் அவர்கள் வருத்தப்பட வேண்டியிருக்கும்.
ஆகவே பெற்றோர் பெண்குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே ஆடைகளில் ஒரு நியமத்தையும் பழகுவதில் ஒரு பண்பாட்டினையும், நடத்தையில் ஒழுக்கத்தினையும், ஆன்மிகக் கல்வியைக் கற்பதில் ஊக்கத்தினையும் அளித்து அவர்களை வளர்க்க வேண்டும்.
திருமணம் செய்து கொண்ட பெண்ணானவள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று பார்ப்போம்.
“மனைத்தக்க மாண்பு உடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. (திருக்குறள் அதிகாரம் 6 குறள் - 1)
இல்வாழ்க்கைக்கு ஏற்றவாறு சிறந்த நற்பண்புகளை உடையவளாக கணவனுடைய பொருள் வளத்திற்கேற்றவாறு வாழ்க்கையைச் செம்மையாக நடத்துகின்றவளே வாழ்க்கைத் துணை (மனைவி) எனப்படுவாள்.
அவ்வாறு ஒரு பெண்ணிடத்தில் நற்பண்புகளே இல்லையென்றால் அவளை வாழ்க்கைத் துணையாகப் பெற்றவனின் கதி அதோ கதிதான். அதையும் வள்ளுவர் கூறுகின்றார் -
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை
மனைவி நற்பண்புகளை உடையவளாக இருந்தால் வாழ்க்கையில் இல்லாதது ஒன்றுமில்லை. அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது துயரத்தைத் தவிர வேறொன்றுமில்லை.
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்எனப் பெய்யும் மழை.
தன்னுடைய சிறந்த பண்புகளால் தன்னுடைய கற்பினைக் காப்பாற்றிக் கொண்டு வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டவள், பெய் என்றால் மழை உடனே பெய்யும்.
சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும்? மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை.
மகளிரைக் காவல் காப்பதால் ஒருபயனும் ஏற்படப் போவதில்லை. அவர்களே தங்களை கற்பு, ஒழுக்கம் போன்றவற்றினால் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று வள்ளுவர் கூறுகின்றார். ஆகவே குடும்பத்தின் நிலையறிந்து கணவனின் பொருளாதாரத்திற்கு ஏற்றவாறு, பண்புடன் குடும்பத்தினை இனிதே நடத்தி பெரியவர்களைப் போற்றியும், இறைவனைப் பற்றி சிந்தித்துக் கொண்டும், விருந்தினர்களை வரவேற்று உபசரித்தும், கடுஞ்சொற்களைக் கூறாது எல்லாரிடத்திலும் இனிமையாகப் பேசியும், பண்பாகப் பழகியும் வாழ்வதே குலமகளிர்க்கு அழகாகும்.
பெண்மையின் பூரணத்வம் அவள் தாயாக ஆன பின்னர்தான் பரிணமிக்கின்றது. தாயாக ஆன ஒரு பெண் தன்னுடைய குழந்தையைச் சான்றோனாக ஆக்க முயல வேண்டும்.
ஈன்ற பொழுதின் பெரிதுஉவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
தன்மகனைச் சான்றோன் எனப் பிறர்கூறக் கேட்டதாய் அவளை ஈன்ற பொழுது பெற்ற மகிழ்வை விட மிகுந்த மகிழ்வினை அடைவாள். எனவே நல்ல தலைமுறையினை உருவாக்கும் பெரும் பொறுப்பு பெண்களுக்கு இயல்பாகவே இருக்கின்றது.
(பதிம் யா நாபிசரதி மனோவாக்தேஹஸம்யுதா
ஸா பர்த்ருலோகமாப்னோதி ஸத்பி: ஸாத்வீதி சோச்யதே)
மனுஸ்மிருதி அத்யாயம் - 5 ஸ்லோகம் (165)
மனம், சொல், புலன் ஆகியவற்றை அடக்கி நெறி தவறாமல் இருப்பவள் இறந்த பிறகு கணவன் வசிக்கும் உலகத்தை அடைவதுடன் கற்புக்கரசி என்றும் போற்றப்படுவாள்.
(அநேன நாரீவ்ருத்தேன மனோவாக்தேஹஸம்யதா
இஹாகன்யாம் கீர்த்திமாப்னோதி பதிலோகே பரத்ர ச)
(மனுஸ்மிருதி அத்யாயம் 5 ஸ்லோகம் 166)
இப்படி மனம், மொழி, மெய்களால் கற்பரசியாகத் தூய்மையுடன் வாழ்பவள், இம்மையில் புகழுடனும், மறுமையில் பதிலோகத்தையும் அடைகின்றாள்.
மனைவியின் கடமை வைதீகக் கார்யங்களிலும் நிறைந்திருக்கின்றது. கணவனால் செய்யப்படும் அனைத்து வைதீகக் கார்யங்களிலும் மனைவியின் பங்கு அவசியம் இருக்கின்றது. ஸோமயாகம் முதலியவற்றில் கூட யஜமானனின் பத்நிக்கு சில கார்யங்கள் சொல்லப்பட்டுள்ளன. எனவே இல்லறம் நல்லறமாவதற்கு இல்லாளின் செயல்பாடுகள் மிகவும் இன்றியமையாதனவாக இருக்கின்றன.
“காதல் மனையாளும் காதலனும் மாறின்றித்
தீதி லொருகருமம் செய்பவே - ஓதுகலை
எண்ணிரண்டு மொன்றுமதி என்முகத்தாய் நோக்கல்தான்
கண்ணிரண்டு மொன்றையே காண்.
-நன்னெறி
கண்கள் இரண்டும் தனித்தனியே இரண்டு பொருள்களைக் காணாமல் ஒரே பொருளைக் காண்பது போலக் கணவனும் மனைவியும் தம்முள் எவ்விதக் கருத்து வேற்றுமையுமின்றி ஒத்த மனத்துடன் இல்லறக் கடமைகளைச் செய்தல் வேண்டும்.
பெண்கள் ஒரு காலமும் தன்னுடைய கணவனுக்கு அநீதி இழைத்து வேற்றானுடன் நட்பு கொள்ளக் கூடாது. அவ்வாறு கணவனுக்கு துரோகம் செய்யும் பெண்ணின் நிலை என்னவாகும் என்றால்
(வ்யபிசாரத்து பர்து: ஸ்த்ரீ ப்ராப்னோதி நிந்த்யதாம்
ஸ்ருகாலயோனிம் ப்ராப்னோதி பாபரோகைஸ்ச்ச பீட்யதே)
(மனுஸ்மிருதி. அத்யாயம் 5 ஸ்லோகம் - 164)
கணவனை விடுத்து மாற்றானுடன் கள்ள உறவினை உடைய ஒரு பெண்ணை உலகம் நிந்திக்கும். அவள் இறந்தவுடன் நரகத்துக்குச் சென்று சொல்லவொணாத துன்பங்களை அனுபவித்துப் பின்னர் குள்ள நரியாகவும் பிறப்பெடுப்பாள். வாழும் காலத்திலேயே கொடிய நோய்களால் துன்புறுவாள்.
காளிதாஸனின் சாகுந்தலத்தில் ஓரிடத்தைப் பார்ப்போம். கண்வ மஹர்ஷி தன்னுடைய மகளாகிய சகுந்தலை அவள் கணவன் வீட்டிற்குச் செல்லும் போது அவளைப் பார்த்து இவ்வாறு கூறுகின்றார்!
(ஸுஸ்ரூஷஸ்வ குரூன் குரு ப்ரியசகீவ்ருத்திம் ஸபத்நீஜனே
பர்துர்விப்ரக்ருதாபி ரோஷணதயா மா ஸ்ம ப்ரதீபம் கம:
பூயிஷ்டம் பவ தக்ஷிணா பரிஜனே பாக்யேஷு அனுத்ஸேகினீ
யாந்த்யேவம் க்ருஹிணீபதம் யுவதயோ வாமா: குலஸ்யாதய:)
“என் அன்பிற்குரிய மகளே கேள்! உன்னுடைய கணவன் வீட்டில் இருக்கும் வயதுமுதிர்ந்த மாமனார், மாமியார் முதலிய பெரியவர்களுக்குப் பணிவிடைகள் செய்து அவர்களைப் போற்றி வருவாயாக! உன் கணவனின் மற்ற மனைவிகளிடத்தில் (அரசர்கள் நிறையப் பெண்களைத் திருமணம் செய்து கொள்வது வழக்கம்) தோழியைப் போன்று அன்பு செலுத்துவாயாக! உன் கணவன் துஷ்யந்தன் அரசனாக இருந்தாலும் அரசியான நீ செல்வச் செழிப்பான வாழ்க்கை முறையினால் பகட்டினை உடையவளாக இராமல் எளிமையாக பண்புடன் வாழ்வாயாக! வேலைக்காரர்களைக் கண்டபடி திட்டாமல் அவர்கள் மனம் மகிழுமாறு ஊதியங்களை அளிப்பாயாக! இவ்வாறு பண்போடு வாழ்க்கை நடத்துபவளே குடும்பத் தலைவிக்கான லக்ஷணத்தை உடையவள். இவற்றிற்கு மாறாக நடந்து கொள்ளும் பெண்ணானவள் தன்னுடைய குலத்திற்கே இழிவைத் தேடித்தரும் கொடிய வியாதியைப் போன்றவள்.”
எனவே பெண்ணாக பிறவியெய்தியவர் எல்லாரும் சாஸ்த்ர விதிப்படிதான் வாழ்க்கை நடத்த வேண்டும். தன்னுடைய இச்சைப்படி அல்ல என்பதை அறியமுடிகின்றது. இவையெல்லாம் “பழைய பஞ்சாங்கம்” என்று ஒதுக்கித் தள்ளி தன்னிச்சைப்படி வாழவிரும்பும் பெண்கள் தம் வாழ்நாளின் இறுதியில் துன்புறுவது மட்டுமல்லாமல் நரகத்திலும் கிடந்து துன்புறுகின்றார்கள்.
எனவே கிடைத்தற்கரிய மானிடப் பிறவியில் “தாய்மை” எனும் அருங்குணத்தை உடைய பெண்டிர் அனைவரும் தர்மத்தின் வழியே வாழ்ந்து வாழ்வின் உண்மை நிலையறிந்து இறைவனின் திருவருளைப் பெறுவார்களாக!

No comments:

Post a Comment