Saturday, December 29, 2012

ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி வர்ணமாலா--தமிழ் உரை

ஓம் நமோ பகவதே தக்ஷிணாமூர்த்தயே மஹ்யம் மேதாம் ப்ரக்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா ||
இது மேதா தக்ஷிணாமூர்த்தி மந்திரம்.
சுலபமான முறையில் வேதாந்தக் கருத்துகளை, லோக கல்யாணத்தை முன்னிட்டு, ஸ்தோத்ரங்களாக அருளிச் செய்தவர் ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத் பாதர்கள். அப்படிப்பட்ட வேதாந்த ஸ்தோத்ரங்களுள் ‘ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி வர்ணமாலா’ என்ற இதுவும் ஒன்று.
‘ஞானமிச்சேத் மஹேஷ்வராத்’
கயிலாயத்தின் அதிபதியாகிய பரமேஸ்வரன் ஞான குருவாகி, கல்லால வ்ருக்ஷத்தின் கீழ் மோன நிலையில் உரைத்த தத்வத்தை, நான்கு சிறந்த சிஷ்யர்களான சனகர், சனந்தனர், சனத்குமாரர், சனத்சுஜாதர், ஆகியோர் உணர்ந்த விதம் அழகாக வர்ணிக்கப்பட்டுள்ளது.
மௌன-வ்யாக்யா ப்ரகடித பரப்ரஹ்ம தத்வம் யுவானம்
வர்ஷிஷ்டாந்தே வஸத் ருஷிகணை: ஆவ்ருதம் ப்ரஹ்மநிஷ்டை:
ஆசார்யேந்த்ரம் கரகலித சின்முத்ரம் ஆனந்த ரூபம்
ஸ்வாத்மாராமம் முதிதவதநம் தக்ஷிணா மூர்த்திமீடே
இதில் பரப்ரஹ்ம தத்வத்தைச் சொல்வது யுவனாக உள்ள தக்ஷிணாமூர்த்தி. அவர் தத்வம் கூறிய விதம் மௌனமொழி. சிறந்ததான சிஷ்யர்கள் நால்வருக்கும் அது எளிதில் விளங்கிவிட்டது. அற்புதமான ஓர் ஆசிரியரல்லவா?
தென்திசை ரகசியம்
தென் புலத்தவனாம் யமதர்மராஜன் நமக்குக் கொண்டு வரும் பாசக் கயிற்றினைத் தடுத்து, அது இனி நம்மிடம் வரவே முடியாத, ஜனன - மரணமற்ற நிலையை நமக்குண்டாக்கும் வல்லமை பெற்ற தத்வஞானத்தைத், தருவதற்காக தென்திசை நோக்கி அமர்தலே பொருத்தமாகும் என்று சிவபெருமான் உட்கார்ந்திருத்தலால் அவருக்கு தக்ஷிணாமூர்த்தி என்ற திருநாமம் வழங்கப் பெற்று வருகிறது. நம் நாட்டிலுள்ள அனைத்துச் சிவாலயங்களிலும் இந்த மூர்த்தி இவ்வண்ணமே அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்துக்குச் செல்வோர் இம்மூர்த்தியின் முன் அமர்ந்து சிறிதுநேரம் தியானம் செய்வது என்பது இன்று வரை வழக்கிலுள்ளது.
அக்ஷரமாலையின் அழகு
ஞானமூர்த்தியாம் தக்ஷிணாமூர்த்தியைப் பற்றி எழுதப்பட்டுள்ள பல ஸ்தோத்ரங்களுக்கு மத்தியில் இந்த ஸ்தோத்ரத்தின் பெருமை என்ன வென்றால், இதன் முதலெழுத்துகளை மட்டும் சேர்த்து படித்தால், பெரியவர்களால் வகுத்துக் கொடுக்கப்பட்ட தக்ஷிணாமூர்த்தி மந்திரம் கிடைத்து விடும். தக்ஷிணா மூர்த்தியின் அருளை விழைந்து, சிறந்த அறிவைப் பெற உதவும் ஒரு மாயமணிமாலை, இப்பெட்டகத்தில் உள்ளது. அந்த மந்திரத்தில் உள்ள வர்ணங்களின் எண்ணிக்கை இருபத்தி நான்கு. இந்த ஸ்தோத்திரத்தில் உள்ள தக்ஷிணா மூர்த்தி புகழ்பாடும் மணிகளும் இருபத்து நான்கு. இருபத்தி ஐந்தாவதாகிய ஒரு மணி இந்த வர்ணமாலையை, இனிதான் மத்தமயூர வ்ருத்தத்தில் உள்ள இதை, அந்த ஞானமுனியாகிய பரமாத்மா கருணை கூர்ந்து ஏற்குமாறு, விண்ணப்பிக்கிறது. ஆன்மிகக் கவியின் ரத்னங்களில் இது ஒன்று.
மத்தமயூர வ்ருத்தம்.
‘ம’ கணம், ‘த’ கணம், ‘ய’ கணம், ‘ஸ’ கணம், பிறகு இறுதியில் குரு என்ற முறைப்படி அமைக்கப்படும் ஒவ்வொரு பாதத்தைக் கொண்ட விருத்தம் ‘மத்த மயூரம்’ எனப்படும். நான்காம் எழுத்திலும் ஒன்பதாம் எழுத்திலும் யதி இருக்கும்.
‘தம் ப்ரத்யஞ்சம் தக்ஷிண வக்த்ரம் கலயாமி’
‘அந்தர்யாமியாய் அனைத்து ஜீவராசிகளுள்ளும் உறைந்திருக்கும் பரமாத்மா ஸ்வரூபமான, தெற்கு நோக்கிய முகத்துடைய அந்த தக்ஷிணாமூர்த்தியையே நான் எப்போதும் என் மனத்தில் இருத்திக் கொள்கிறேன்’ என்ற பொருள் கொண்ட நான்காம் அடி, இந்த தெய்வத்தின் பெருமையைக் காட்டுகிறது.
உருட்டலாம் மணிகளை பின் கோக்கலாம். ஞான குருவாகிய பரமேஸ்வரனின், மறு அவதாரமாகக் கருதப்படும் ஆதி சங்கர பகவத் பாதர் அருளிய ஸ்தோத்ரத்தை அதன் தமிழ் உரையுடன் காண்போம். என்னுடன் சேர்ந்து நீங்களும் உருட்டுங்கள், மணிகளைக் கோப்பதற்காக.
முதல் மணி - ஓம்
ஓமித்யேதத்யஸ்ய புதைர்நாம க்ருஹீதம்
யத்பாஸேதம் பாதி ஸமஸ்தம் வியதாதி
யஸ்யாக்ஞாத: ஸ்வஸ்வபதஸ்தா விதிமுக்யா:
தம் ப்ரத்யஞ்சம் தக்ஷிணவக்த்ரம் கலயாமி
தமிழ் உரை:
எத்தெய்வத்தின் பெயராக, ‘ஓம்’ என்ற ப்ரணவத்தை பெரியவர்கள் ஏற்றிருக்கின்றனரோ, ஆகாயம் முதலான எல்லாப் பொருள்களும் எவரின் ஒளியினால் ப்ரகாசப் படுத்தப் படுகிறதோ, ப்ரஹ்மா முதலான தேவர்கள் எல்லாரும் எவரின் ஆணைக்குட்பட்டு தம் தம் ஸ்தானத்தில் நிலை கொண்டுள்ளார்களோ, அந்தத் தெய்வமான தென்முகக் கடவுளை, தக்ஷிணாமூர்த்தியை எப்பொழுதும் மனத்தில் இருத்தியிருக்கிறேன்.
ஏதத்வை ஸத்யகாம பரம்சாபரம்ச ப்ரஹ்ம யத் ஓங்கார:
தஸ்ய வாசக: ப்ரணவ: தஸ்ய பாஷா ஸர்வமிதம் விபாதி
ஏதஸ்ய கலு அக்ஷரஸ்ய கார்கி ஸுர்ய சந்த்ரமஸௌ வித்ருதௌ திஷ்டத:
இந்த வாக்கியங்களை இங்கு நினைவு கூர்வது தகுந்ததாகும்.
‘ஓம்’ என்பது, இக்கட்டுரையின் முதல் முதலில் கொடுக்கப்பட்டுள்ள மேதா தக்ஷிணா மூர்த்தி மந்திரத்தின் முதல் அக்ஷரமாகும்.

இரண்டாம் மணி - ந
நம்ராங்காணாம் பக்திமதாம் ய: புருஷார்த்தான் தத்வா க்ஷிப்ரம் ஹந்தி ச தத்ஸர்வவிபத்தீ:
பாதாம்போஜாதஸ்தனிதாபஸ்ம்ருதிமீசம் தம் ப்ரத்யஞ்சம் தக்ஷிணவக்த்ரம் கலயாமி
தமிழ் உரை:
ஆசுதோஷியான எந்த தெய்வம், பக்தியுடன் தன்னை வணங்குபவர்களுக்கு வேண்டிய புருஷார்த்தங்களைக் கொடுத்து, உடனடியாக அவர்களால் எதிர் கொள்ளப்படும் ஆபத்துகளை விலக்குகிறதோ, அரக்க உருவாகிய அபஸ்மாரத்தைத் தன் இடக் காலின் கீழ் அடக்கியவர் எவரோ, அந்த தெய்வமாகிய தென்முகக் கடவுளான தக்ஷிணா மூர்த்தியை எப்போதும் மனத்தில் இருத்தியிருக்கிறேன்.
மூன்றாம் மணி - மோ
மோஹத்வஸ்த்யை வைணிக-வையாஸிகி முக்யா:
ஸம்விந்முத்ர புஸ்தக வீணாக்ஷகுணான்யம்
ஹஸ்தாம்போஜை: பிப்ரதமாராதிதவந்த:
தம் ப்ரத்யஞ்சம் தக்ஷிணவக்த்ரம் கலயாமி (3)
தமிழ் உரை:
‘மஹதி’ என்ற வீணையை மீட்டுபவராகிய நாரதர், வியாஸருடைய புத்ரராகிய சுகர் போன்றவர்கள், எந்த தெய்வத்தை, தங்கள் அறியாமை அகலுவதற்காகப் பிரார்த்திக்கின்றனரோ, சின் முத்திரை, புத்தகம், வீணை, ருத்ராக்ஷ மாலை ஆகியவற்றைக் கையிலேந்திக் கொண்டிருக்கும் அப்பெருமானை, தக்ஷிண திசை நோக்கிய தக்ஷிணாமூர்த்தியை எப்போதும் மனத்திலிருத்தியுள்ளேன்.

நான்காம் மணி - ப
பத்ராரூடம் பத்ரதமாராதயித்ரூணாம்
பக்திச்ரத்தாபூர்வகமீசம் ப்ரணமந்தி
ஆதித்யாயம் வாஞ்சிதஸித்யை கருணாப்திம்
தம் ப்ரத்யஞ்சம் தக்ஷிணவக்த்ரம் கலயாமி (4)
தமிழ் உரை:
பத்ராஸனத்தில் வீற்றிருந்து, பக்தி சிரத்தையுடன் தன்னை ஆராதிப்பவர்களுக்கு எல்லா நலன்களையும் நல்குபவரான ஈசனும், எல்லா அதிதி புத்ரர்களாகிய தேவதைகளும் தங்கள் அபிலாஷைகள் நிறைவேறுவதற்காக வணங்கப் படுபவரும், கருணைக் கடலுமாகிய அந்தத் தென்முகக் கடவுளாகிய தக்ஷிணாமூர்த்தியை மனத்தில் நிறைக்கின்றேன்.
ஐந்தாம் மணி - க
கர்ப்பாந்தஸ்தா: ப்ராணின ஏதே பவபாசச்சேதே
தக்ஷம் நிஷ்சிதவந்த: சரணம் யம்
ஆராத்யாங்க்ரி ப்ரஸ்புரதம்போருஹ யுக்மம்
தம் ப்ரத்யஞ்சம் தக்ஷிணவக்த்ரம் கலயாமி (5)
தமிழ் உரை:
கர்ப்பவாஸம் செய்யும் ஸகலவிதமான ஜீவராசிகளுக்கும் கர்ப்பவாஸ காலத்தில், தங்களது சம்ஸாரம் என்கிற கயிற்றை அறுக்க வல்லவராக எவரை நிச்சயம் செய்து சரணம் அடைகின்றனரோ, தாமரையைப் போன்ற காந்தியுடன் கூடியதான ஆராதனைக்கு உகந்த இருபாதங்களை உடைய தக்ஷிணா மூர்த்தி தெய்வத்தை மனத்தில் நிறைக்கின்றேன்.
ஆறாம் மணி -வ
வக்த்ரம் தன்யா: ஸ்ம்ஸ்ருதி-வார்த்தேரதி-மாத்ராத்பீதா:
ஸந்த்: பூர்ணசசாங்கத்யுதி யஸ்ய
ஸேவந்தே அத்யாஸீநமனந்தம் வடமூலம்
தம் ப்ரத்யஞ்சம் தக்ஷிணவக்த்ரும் காயாமி (6)
தமிழ் உரை:
புண்யசாலிகளான நல்லவர்கள், பிறவிப் பெருங்கடலின் துன்பத்தை நினைவு கூர்ந்து மிகுந்த பயத்தையுடையவர்களால் பூரண சந்திரனைப் போல் ஒளிரும் எவருடைய முகத்தை எதிர்நோக்கிச் சேவிக்கின்றனரோ, ஆலமரத்தினடியில் வீற்று அருள்பாலிக்கும் அத்தென்முகப் பிரானை தக்ஷிணாமூர்த்தியை என் மனத்தில் புகுத்தி விட்டேன்.
ஏழாம் மணி - தே
தேஜ: ஸ்தோமைரங்கத ஸங்கட்டித பாஸ்வன்
மாணிக்யோத்தைர் பாஸித விச்வோ ருசிரைர்ய:
தேஜோமூர்த்திம் கானிலதேஜ: ப்ரமுகாப்திம்
தம் ப்ரத்யஞ்சம் தக்ஷிணவக்த்ரம் கலயாமி (7)
தமிழ் உரை:
தோள்வளையில் பதிக்கப்பட்ட பிரகாசிக்கும் மாணிக்கங்களிலிருந்து உமிழப்படும் ஒளிக்கதிர்களால் எல்லா உலகங்களையும் பிரகாசப் படுத்துபவரும், ஆகாயம், காற்று, அக்னி, நிலம், நீர் என்னும் பஞ்சபூதங்களின் தோற்றத்திற்கு அதிகரணமாக இருப்பவரும், ஸ்வப்ரகாச ரூபமானவரும் ஆகிய தென்முக ஈசனை தக்ஷிணாமூர்த்தியை என் மனம் புகச் செய்துவிட்டேன்.
தஸ்மாத் வா ஏதஸ்யாத் ஆத்மன: ஆகாச: ஸம்பூத: | ஆகாஷாத் வாயு: | வாயோர் அக்னி: |
போன்ற வாக்கியங்களை இங்கு நினைவு கூரலாம்.
எட்டாம் மணி - த
தத்யாஜ்யாதி த்ரவ்யக கர்மாண்யகிலானி
த்யக்த்வா ஆகாங்க்ஷாம் கர்மபலேஷ்வத்ர கரோதி
யஜ்ஜிக்ஞாஸாரூபபலார்த்தீ க்ஷிதிதேவ:
தம் ப்ரத்யஞ்சம் தக்ஷிணவக்த்ரம் கலயாமி (8)
தமிழ் உரை:
உத்தமர்களான பிராஹ்மணர்கள் தயிர், நெய் போன்ற திரவ்யங்களைக் கொண்டு செய்யக் கூடிய ஹோமாதிகளை எல்லாம், அவற்றால் அடையப் பெறும் அல்ப பலன்களை உத்தேசித்துச் செய்யாமல், கர்மயோக முறையில் செய்து, பின்னர் அதன் பயனாக ஆத்மானுபூதி அடைவதற்காக, தங்கள் ஸ்வரூபமாக எந்த தக்ஷிணாமூர்த்தி தெய்வத்தை அறிய விரும்புகிறார்களோ, அப்படிப்பட்ட பரம்பொருளான தக்ஷிணா மூர்த்தியை என் உள்ளத்தின் உள் நிறுத்தினேன்.
மூர்த்தியைக் குறிக்கும் மந்திரத்தின் சொல்லின், முதல் எழுத்தாகிய ‘த’ என்ற மணியை மிகவும் கவனத்துடன் சேருங்கள்!
ஒன்பதாம் மணி - க்ஷி
க்ஷிப்ரம் லோகே யம் பஜமான: ப்ருதுபுண்ய:
ப்ரத்வஸ்தாதி: ப்ரோஜ்ஜித ஸம்ஸ்ருத்யகிலார்த்தி:
ப்ரத்யக்பூதம் ப்ரஹ்ம பரம் ஸம்ரமதே ச தம்
ப்ரத்யஞ்சம் தக்ஷிணவக்த்ரம் கலயாமி (9)
தமிழ் உரை:
இந்த உலகத்தில், புண்யசாலியான எவனொருவன் தக்ஷிணாமூர்த்தியை பூஜித்து, சீக்கிரமாக மனோவியாதிகள், ஏனைய ஸாம்ஸாரிகமான துக்கங்கள் ஆகியவற்றிலிருந்து விடுபட்டவனாய் தான் அடைந்த பிரஹ்ம ஸாக்ஷாத்கார நிலையிலேயே ரமித்துக் கொண்டிருப்பவனாய், தக்ஷிணா மூர்த்தியின் அருளை ரசிக்கின்றானோ, அப்படிப்பட்ட தக்ஷிணாமூர்த்தியை. அந்நிலையை நானும் அடையும் பொருட்டு என் மனக் கோவிலில் அழைக்கின்றேன்.
பத்தாம் மணி - ணா
ணாநேத்யேவம் யன்மனுமத்யஸ்தித வர்ணான்
பக்த: காலே வர்ணக்ருஹீத்யை ப்ரஜபந்த:
மோதந்தே ஸம்ப்ராப்த ஸமஸ்த ச்ருதி தந்த்ரா தம்
ப்ரத்யஞ்சம் தக்ஷிணவக்த்ரம் கலயாமி (10)
தமிழ் உரை:
வேதங்கள், தந்த்ர சாஸ்திரங்கள் ஆகியவற்றை நன்கு கற்றுணர்ந்த பக்தர்கள், மந்த்ர ஜபகாலத்தில், எந்த தக்ஷிணாமூர்த்தி மந்திரத்தின் நடுவிலுள்ள ‘ணா’ என்ற வர்ணத்தை முக்யமாகக் கொண்டு ஜபம் செய்து பெருமகிழ்ச்சி அடைகின்றனரோ, அந்த தக்ஷிணாமூர்த்தியை என் மனத்துள் மனன காலத்தில் பிரகாசிக்கப் பிரார்த்திக்கின்றேன்.
பதினொன்றாம் மணி - மூர்
மூர்த்திச்சாயா நிர்ஜித மந்தாகினி குந்த
ப்ராலேயாம்போராசி ஸுதாபூதி ஸுரேபா
யஸ்யாப்ராபா ஹாஸவிதௌ தக்ஷசிரோதிம்
தம் ப்ரத்யஞ்சம் தக்ஷிணவக்த்ரம் கலயாமி (11)
தமிழ் உரை:
ஞவெண்ணிறமான தனது சரீரமானது, வெண்ணிறமான மந்தாகினீ, குந்தபுஷ்பம், பனி, பாற்கடல், அம்ருதம், விபூதி, ஐராவதம் போன்ற எல்லாவற்றின் வெண்மையையும் வென்று விட்டதாக உள்ளவர் எவரோ, சிரிக்கும் போது, விஷமுண்ட எவருடைய கழுத்தானது மேகத்திற்கொப்பாக, கருநிறமாக விளங்குகிறதோ, அந்த தக்ஷிணநாயகனை என் மனமென்னும் ஆகாயத்திற்குள் அழைக்கிறேன்.
பன்னிரண்டாம் மணி - த
தப்தஸ்வர்ணச் சாய ஜடாஜுடகடாஹ
ப்ரோத்யத் வீசீவல்லி விராஜத் ஸுரஸிந்தும்
நித்யம் ஸுக்ஷ்மம் நித்ய நிரஸ்தாகில தோஷம்
தம் ப்ரத்யஞ்சம் தக்ஷிணவக்த்ரம் கலயாமி (12)
தமிழ் உரை:
புடம் போட்ட தங்கத்தின் வண்ணம் போன்ற வண்ணமுடைய எவருடைய கடாஹம் போன்ற ஜடைமுடியில் ஆகாய கங்கையானது அலைகளுடன் துள்ளிக் கொண்டிருக்கிறதோ, நித்யமானவரும் பரமஸூக்ஷ்மமானவரும், தோஷங்களற்றவருமான அந்த தக்ஷிணா மூர்த்தியை மனத்தில் பிரவாஹிக்கும் படி பிரார்த்திக்கிறேன்.
பதிமூன்றாம் மணி - யே
யேன க்ஞாதேநைவ ஸமஸ்தம் விதிதம் ஸ்யாத்
யஸ்மாதன்ய்யத்வஸ்து ஜகத்யாம் சசச்ருங்கம்
யம் ப்ராப்தானாம் நாஸ்தி பரம் ப்ராப்யமனாதிம்
தம் ப்ரத்யஞ்சம் தக்ஷிணவக்த்ரம் கலயாமி (13)
தமிழ் உரை:
எவருடைய ஸ்வரூப விசேஷத்தை அறிவதால், எல்லாம் அறியப் பட்டவையாக ஆகுமோ, எவருடைய ஸ்வரூபத்தைத் தவிர வேறான வஸ்து உலகில் உண்மையாக இல்லையோ, முயற்கொம்பு போல, எவருடைய ஸ்வரூபத்தை அடைவதே பரம பிராப்தமோ, ஆதியந்தமில்லாத அப் பரம்பொருள் தக்ஷிணமுகக் கடவுளை என் மனத்தின் வாயிலாக புத்தியினுள் நுழைந்தருளக் கோருகிறேன்.
பதினான்காம் மணி - ம
மத்தோ மாரோ யஸ்ய லலாடாக்ஷி பவாக்னி
ஸ்பூர்ஜத்கீல ப்ரோக்ஷித பஸ்மீக்ருத தேஹ:
தத் பஸ்மாஸீத் யஸ்ய ஸுஜாத: படவாஸ: தம்
ப்ரத்யஞ்சம் தக்ஷிணவக்த்ரம் கலயாமி (14)
தமிழ் உரை:
மதம் பிடித்ததால், மன்மதன் எவருடைய நெற்றிக் கண் ஜ்வாலையினால் தகிக்கப் பட்டானோ, அவ்வாறு தகித்ததால் ஏற்பட்ட பஸ்மமே எவருக்கு வெண்ணிற வஸ்திரமாக மாறியதோ அப்படிப்பட்ட தக்ஷிணாமூர்த்தியை, என் மனத்தில் உள்ள காமக்ரோதிகளை பஸ்மீகரித்து, ஸ்வீகரிக்குமாறு விழைகின்றேன்.
பதினைந்தாம் மணி - ஹ்யம்
ஹ்யம்போராசௌ ஸம்ஸ்ருதிரூபே லுடதாம்
தத்பாரம் கந்தும் யத்பத பக்தி: த்ருடநௌகா
ஸர்வாராத்யம் ஸர்வகமானந்த பயோதிம் தம்
ப்ரத்யஞ்சம் தக்ஷிணவக்த்ரம் கலயாமி (15)
தமிழ் உரை:
ஸம்ஸார ஸாகரமாகிய பிறவிப் பெருங்கடலில் விழுந்து உழல்பவர்களுக்கு, அதைக் கடந்து கரையை அடைய, எவருடைய பாதங்களில் அர்ப்பணிக்கப்படும் பக்தி ஒன்றே திடமான ஓடம் போல் உள்ளதோ, எல்லாராலும் ஆராதிக்கும் தகுதி பெற்றவரும், எங்கும் நிறைந்தவரும், ஆனந்த பெருங் கடலும் ஆனவரும் ஆகிய அந்த தக்ஷிணநாயகனை, என் மனத்தில் மிகுந்த பக்தியுணர்வுடன் நிறையச் செய்கிறேன்.
பதினாறாம் மணி - மே
மேதாவீ ஸ்யாதிந்து வதம்ஸம் த்ருதவீணம்
கர்பூராபம் புஸ்தகஹஸ்தம் கமலாக்ஷம்
சித்தே தியாயன் யஸ்ய வபுர்த்ராங் நிவீஷார்த்தம்
தம் ப்ரத்யஞ்சம் தக்ஷிணவக்த்ரம் கலயாமி (16)
தமிழ் உரை:
சந்திரகலையைத் தலையில் ஆபரணமாக அணிந்தவரும், வீணாபாணியாய் இருப்பவரும், கற்பூர நிறத்தவரும், கையில் புத்தகத்தை ஏந்தியவரும், தாமரையை ஒத்த மலர்விழிகளை உடையவருமான, எந்த தக்ஷிணாமூர்த்தியின் ஸ்வரூபத்தை அரை நொடி நேரமேனும் ஒருவன் மனத்தில் நினைப்பதால் சீக்கிரமே மேதா விலாஸத்தை அடைவானோ, அந்த ஞானமூர்த்தியை எப்பொழுதும் என் மனத்தில் நினைக்கிறேன்.
மேதா விலாஸம் மிக மிக முக்கியமல்லவா!
பதினேழாம் மணி - தாம்
தாம்நாம் தாம ப்ரௌடருசீனாம் பரமம்
யத் ஸூர்யாதீநாம் யஸ்ய ந ஹேதுர்ஜகதாதே:
ஏதாவான் யோ யஸ்ய ந ஸர்வேஷ்வரமீட்யம் தம்
ப்ரத்யஞ்சம் தக்ஷிணவக்த்ரம் கலயாமி (17)
தமிழ் உரை:
அதிக ப்ரகாசமுள்ள சூர்யன் முதலானவர்களுக்கும் எவர் ப்ரகாசத்தைக் கொடுக்கின்றாரோ, அகில புவனங்களின் தோற்றத்திற்கும் எவர் உபதான, நிமித்த காரணமோ, எவர் அளவிட முடியாதவரோ, எல்லாவற்றிற்கும் ஈச்வரனோ, எல்லாரும் துதிசெய்யும் அந்தத் தென்முக மூர்த்தியை மனத்தின் கண் பிரகாசிக்க விழைகிறேன்.
பதினெட்டாம் மணி - ப்ர
ப்ரத்யாஹாரப்ராண நிரோதாதி ஸமர்த்தை:
பக்தைர்தாந்தை: ஸம்யதசித்தைர்யதமாநை:
ஸ்வாத்மத்வேன க்ஞாயத ஏவ த்வரயா ய:
தம் ப்ரத்யஞ்சம் தக்ஷிணவக்த்ரம் கலயாமி (18)
தமிழ் உரை:
பிரத்யாஹாரம், ப்ராணாயாமம் முதலியவற்றைச் செய்யும் வல்லமையுள்ளவர்களும், பக்தர்களும், புலன்களை வென்று மனத்தை அடக்கியவர்களும், முமுக்ஷுக்களான ஸாதகர்களால், விரைவிலேயே, தம்முடைய உண்மையான ஆன்ம ஸ்வரூபமாயிருப்பவர் தக்ஷிணா மூர்த்தியே என்று அறியப்படுபவராகிய அச்சிறந்த ஞானமூர்த்தியை, இவ்வல்லமைகள் இல்லாவிடினும், பக்தி என்ற ஒரு விழைவாலேயே என் மனத்தில் நிலைகொள்ளச் செய்கிறேன்.
பத்தொன்பதாம் மணி - க்ஞாம்
க்ஞாம்சீபூதான் ப்ராணின ஏதான்பலதாதா
சித்தாந்தஸ்த: ப்ரேரயதி ஸ்வே ஸகலேபி
க்ருத்யே தேவ: ப்ராக்தந கர்மானுஸர: ஸம்
ஸ: தம் ப்ரத்யஞ்சம் தக்ஷிணவக்த்ரம் கலயாமி (19)
தமிழ் உரை:
பகவதம்சங்கள் என்று வேதங்கள் கூறும், எல்லாப் பிராணிகளினுள்ளும் அந்தர்யாமியாய் அவர்கள் மனத்திலுறைந்து கொண்டு, அவரவர்களின் கர்மவினைக்கு ஏற்ப அவரவர்களை உரிய காரியங்களில் ஏவி, அந்தந்தக் காரியங்களின் பலன்களைக் கொடுப்பவராகிய அந்த தக்ஷிணாமூர்த்தியை மனத்திலுறையும் அந்தர்யாமியைக் காண விழைகிறேன்.
இருபதாம் மணி - ப்ர
ப்ரக்ஞாமாத்ரம் ப்ராபித ஸம்வின்னிஜபக்தம்
ப்ராணாக்ஷாதே: ப்ரேரயிதாரம் ப்ரணவார்தம்
ப்ராஹு: ப்ராக்ஞா யம் வியீதானுச்ரவதத்வா:
தம் ப்ரத்யஞ்சம் தக்ஷிணவக்த்ரம் கலயாமி (20)
தமிழ் உரை:
வேதப் பொருளை நன்குணர்ந்த ஞானிகள், எவரை, அறிவுமயமானவர்: தன் பக்தர்களை தன் எண்ணத்தினாலேயே உருவாக்குபவர்: ப்ராணன் முதலான இந்திரியங்களை பிரோரணை செய்பவர்: ப்ரணவத்தின் பொருள் ஆனவர்: என்றெல்லாம் சொல்கின்றனரோ, அந்த தக்ஷிணாமூர்த்தியை பிரணவமாய் என் மனத்தினுள் காண முயல்கிறேன்.
இருபத்தி ஒன்றாம் மணி:
யஸ்யாக்ஞானாதேவ ந்ரூணாம் ஸ்ம்ஸ்ருதிபந்தோ
யஸ்ய க்ஞானாதேவ விமோக்ஷோ பவதீதி
ஸ்பஷ்டம் ப்ரூதே வேதசிரோ தேசிகமாத்யம்
தம் ப்ரத்யஞ்சம் தக்ஷிணவக்த்ரம் கலயாமி (21)
தமிழ் உரை:
இந்த ஸம்ஸாரமாகிய பந்தம், எவருடைய உண்மை ஸ்வரூப அறியாமையாலேயே ஏற்படுகிறதோ, எவருடைய ஸ்வரூப ஸாக்ஷாத்காரமே இந்த பந்தத்திலிருந்து விடுதலை அளிக்க வல்லது என்று உபநிடதங்கள் தெளிவாக எடுத்து உரைக்கின்றதோ, ஆதி தேசிகரான அந்த தக்ஷிணாமூர்த்தியை என் மனதாரப் போற்றுகின்றேன்.
இருபத்தி இரண்டாம் மணி - ச
சன்னேவித்யாரூப படேநைவ ச விச்வம்
யத்ராத்யஸ்தம் ஜீவபரேசத்வமபீதம்
பானோர் பானுஷ்வம்பு வதஸ்தாகில பேதம்
தம் ப்ரத்யஞ்சம் தக்ஷிணவக்த்ரம் கலயாமி (22)
தமிழ் உரை:
ஜகத், ஜீவன், ஜகதீச்வரன், என்ற பலவிதமான பேதங்களாக பல ஜலபாத்ரங்களில் பிரதிபலிக்கும் பல சூர்யர்கள் போன்று, அவித்யா என்னும் வஸ்திரத்தினால் மறைக்கப் பட்டுள்ள எவருடைய ஸ்வரூபத்தில் ஆரோபிக்கப் பட்டுள்ளனவோ, உண்மையில் அவ்வேதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவரான அந்த தக்ஷிணாமூர்த்தி தெய்வத்தை ஜகமாயையைக் களைய என் மனத்தில் இருத்தி இருக்கின்றேன்.
இருபத்து மூன்றாம் மணி - ஸ்வா
ஸ்வாபஸ்வப்னௌ ஜாகரத்வஸ்தாபி ந யத்ர
ப்ராணச்சேத: ஸர்வகதோ ய: ஸகலாத்மா
கூடஸ்தோ ய: கேவல ஸச்சித் ஸுகரூப:
தம் பிரத்யஞ்சம் தக்ஷிணவக்த்ரம் கலயாமி (23)
தமிழ் உரை:
ஜாக்ரத், ஸ்வப்னம், ஸுக்ஷூப்தியாதி மூன்று அவஸ்தைகள் உண்மையில் எவரிடம் இல்லையோ, எல்லாமாய் எங்கும் நிறைந்தவராய் இருக்கின்றாரோ, அந்த தக்ஷிணாமூர்த்தியை, என்னுள்ளே கூடஸ்தனாக இருக்கக் காண்கின்றேன்.
இருபத்தி நான்காம் மணி - ஹா
ஹாஹேத்யேவம் விஸ்மயமீயுர்முனி முக்யா
க்ஞாதே யஸ்மின் ஸ்வாத்மதயானாத்ம விமோஹ:
ப்ரத்யக்பூதே ப்ரஹ்மணி யாத: கதமித்தம்
தம் ப்ரத்யஞ்சம் தக்ஷிணவக்த்ரம் கலயாமி (24)
தமிழ் உரை:
இவரே என்னுடைய ஆத்மஸ்வரூபம் என்று எவரை அறிந்தபின் மாமுனிவர்களும், இந்த ப்ரத்யக்பூதமான ப்ரஹ்ம ஸ்வரூபத்தில் அநாத்ம மயக்கம் எப்படித்தான் வந்ததோ! எப்படித்தான் போயிற்றோ! என்று ‘ஹா ஹா’ என்று ஆச்சரியத்தை அடைகின்றனரோ அந்த தக்ஷிணாமூர்த்தியை, நானும் அவ்விதம் ஆச்சரியப் படும் வகையை அருளுமாறு வேண்டி என் மனத்துக் கண் தியானம் செய்கின்றேன்.
இருபத்தி ஐந்தாம் மணி
யைஷா ரம்யை: மத்தமயூராபிவ்ருத்தை:
ஆதௌ க்லுப்தா யன்மனு வர்ணைர்முனிபங்கீ
தாம் ஏவைதாம் தக்ஷிணவக்த்ர: க்ருபயாஸௌ
ஊரீகுர்யாத் தேசிக ஸம்ராட் பரமாத்மா (25)
தமிழ் உரை:
எவருடைய மந்திரத்தின் அக்ஷரங்களை முதலெழுத்தாகக் கொண்டு, இனிய மத்த மயூரம் என்ற விருத்தத்தில், மயிலின் விரித்த தோகையில் உள்ள அழகான வண்ணங்களையும் வடிவையும் ஒத்ததான இந்த வர்ணமாலையானது அமைக்கப் பெற்றுள்ளதோ, முனிபுங்கவரான, தேசிக ராஜாவாகிய, தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபமான அந்தப் பரமாத்மா, இந்த வர்ணமாலையை கிருபையுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மனமாகிய புஷ்பத்துடன் அந்த மாலையை தக்ஷிணாமூர்த்தி தெய்வத்திடம் சேர்த்திடுங்கள். பிறவிப் பெரும் பிணியைத் தீர்த்திடுங்கள்.
ஆதிசங்கரர் கோத்து அருளிய இந்த ஸம்ஸ்கிருத பாஷையில் உள்ள வர்ணமாலை, தமிழில் வரகூர் பிரம்மஸ்ரீ கல்யாண சுந்தர சாஸ்திரிகளால் தமிழாக்கம் பெற்று அந்த ஞானகுருவிற்குப் பாமாலையாகச் சூட்டப் பட்டது.
சூட்டுவோமா மனமாலையை: இரு சரமுள்ள மாலையைக் கண்டெடுத்த இவள், மணிகளைக் கூட்டிக் கூட்டி, மந்திரத்தின் மகிமையை உணர்ந்தாள். ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என வரைந்தெடுத்து ஸமர்ப்பித்தாள் கட்டுரையை.
இங்கு மந்திர அக்ஷரங்கள் 24 என்பது ப்ரக்ருதியாதி பூமி பர்யந்தம் உள்ள 24 தத்வங்களின் விளக்கமாகக் கொள்ளப்படலாமோ! ஞானகுருவின் பரிபூர்ண கடாக்ஷத்தை விழைந்து என் அறிவுக்கு எட்டியபடி எழுதியவற்றை, "தக்ஷிணாமூர்த்தியே நம: ஸ்வாஹா" என்று அர்ப்பணம் செய்கிறேன்

No comments:

Post a Comment