Tuesday, December 25, 2012

மாதங்களில் நான் மார்கழி என்று கிருஷ்ணர் சொன்னது ஏன்?

பாரதப் போரில், பீஷ்மர், கவுரவர்களுடைய சேனைகளுக்கு தலைமை தாங்கி பத்து நாட்களாகப் போர் செய்தார். எவராலும் அவரை எளிதில் வீழ்த்த முடியவில்லை. உடனே அர்ச்சுனன் ஒரு தந்திரம் செய்தான். பாண்டவர்கள் படையில் ஆண்மையிழந்த சிகண்டி என்ற வீரன் இருந்தான். அவனைப் பிடித்து, பீஷ்மரின் முன் போர்க்களத்தில் நிறுத்தினான். ஒரு ஆண்மையற்றவனோடு சண்டை போடுவது இழிவு என என்னிய பீஷ்மர் தம்முடைய ஆயுதங்களைக் கீழே போட்டார்.

தக்க சமயத்திற்காக காத்திருந்த அர்ச்சுனன் சிகண்டியின் பின்புறம் நின்று, அம்புகளைப் பொழிந்து, பீஷ்மரைச் சாய்த்தான். உடலெங்கும் அம்புகள் தைத்த நிலையில் கீழே சாய்ந்த பீஷ்மர், கவுரவர்கள் படையிலும், பாண்டவர்கள் படையிலுமாக நின்ற தன் பேரன்களை அழைத்தார். "நான் என் கடமையைச் செய்து முடித்து விட்டேன்.


இனி உயிர் பிழைக்க மாட்டேன் என் உடம்பில் தைத்துள்ள அம்புகளை நீக்கி விட்டால் உடனே நான் இறந்து விடுவேன். இப்போது, தட்சிணாயனம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேவர்களின் இரவு காலமான இதில் இறப்வர்களுக்கு நற்கதி கிட்டாது. இன்னும் சில நாட்களில் தேவர்களின் உதயகாலமான (பகல் காலம்) உத்தராயணம் வந்து விடும்.


அதுவரையிலும் நான் இறக்கக் கூடாது. அதனால், இந்த அம்புகளோடு அமைதியான ஓரிடத்திற்கு என்னை எடுத்துச் செல்லுங்கள். அங்கு கடவுளை நான் தியானம் செய்து கொண்டிருக்கிறேன்'' எனக் கூற அவர்களும் அவ்வாறேச் செய்தனர். அம்புப் படுக்கையிலேயே இருந்த பீஷ்மர், அந்த நாட்களில் பாண்டவர்களுக்கு, நல் உபதேசங்களைச் செய்து, பின் உத்தராயணம் வந்த நாளில் உயிர் நீத்தார்.


அதனால், தேவர்களின் இரவு நேரமான ஆடி மாதம் தோடங்கி மார்கழி மாதம் முடிய உள்ள தட்சிணாயன காலத்தை மக்கள் அவ்வளவாக விரும்பவில்லை. நல்ல காரியங்கள் எதையும் தொடங்காமல், அம்மாதங்களை ஒதுக்கி வைத்தனர். பீடைகள் மிகுந்த தட்சிணாயனத்தின் கடைசி மாதமான மார்கழியில் புதுமனை புகுதல், வீடு மாறுதல், திருமணம் போன்ற விசேஷங்களைச் செய்யாமல் தவிர்த்தனர்.


மார்கழி மாதத்தின் மீது மக்களுக்கு இருக்கும் இந்த அச்சத்தைப் போக்க வேண்டும் என்பதற்காகத்தான், கண்ணபிரான் கீதையில் "மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்'' என்றார். அம் மாதத்தில் அதிக வெப்பமோ, குளிரோ இருக்காது. உடம்பிற்கு இதமாகவும், உள்ளத்திற்கு ஈடுபாடாகவும் இருக்கும். உழுது பயிரிடுபவர்களுக்குக் கூட இம் மாதம் முதிர்ந்த அறுவடைக்காலம் என்பதால், ஆண்கள் பஜனை செய்வதும், பெண்கள் பாவை நோன்புமாக மார்கழியில் இருப்பார்கள்.

No comments:

Post a Comment