Monday, January 21, 2013

எளிய வாழ்வு வாழ்வோமே!

மறை ஞானசம்பந்தர் என்ற மகான், ஒரு வீட்டு திண்ணையில் அமர்ந்து, சிவபூஜையில் ஈடுபட்டார். அப்போது, ஒரு பல்லக்கில் உமாபதிசிவ தீட்சிதர் என்பவர் சென்று கொண்டிருந்தார். அவருடன் சென்றவர்கள் மரியாதை பொங்க கைகட்டி, வாய்பொத்தி சென்றனர்.
இதைக்கண்டு மறை ஞானசம்பந்தர் சிரித்தார். அத்துடன், ""பட்ட மரத்தில் பகல்குருடு ஏகுதல் பாரீர்,'' என்றார். அதாவது, காய்ந்து போன கட்டையில் செய்த பல்லக்கில், பகலில் கூட பார்வை தெரியாத ஒருவன் செல்கிறான்,'' என்று பொருள்.
தெருவில், ஒரு வி.ஐ.பி., சகல மரியாதைகளுடன் செல்லும்போது, அவரை அவமரியாதையாக பேசினால், அவர் சும்மா இருப்பாரா! காவல்துறையைக் கொண்டு கேலி செய்தவரைக் கவனித்து விடமாட்டாரா என்ன!
உமாபதி சிவம் இதைக்கேட்டதும்,""இறக்குங்கள் பல்லக்கை!'' என்று ஆணையிட்டார். பல்லக்கு இறக்கப்பட்டது. உமாபதி சிவம் தன்னை விமர்சித்த சம்பந்தரை நோக்கி வேகமாகச் சென்றார்.
""ஆகா! பெரிய பிரளயமே நடக்கப்போகிறது, திண்ணையில் இருக்கிறவர் தீட்சிதரிடம் அடிவாங்கப் போகிறார்!'' என்று எல்லாரும் எண்ணியிருந்த சமயத்தில், தீட்சிதர் படீரென அவர் காலில் விழுந்தார். நினைத்தது நடப்பதில்லை, எதிர்பாராதது நடந்து விடுகிறது எல்லார் வாழ்விலும்! அப்படித்தான் இந்த சம்பவமும் எல்லாரது புருவத்தையும் உயர்த்தியது.
""சுவாமி! தாங்கள் தான் இனி என் குரு!'' என்று வேறு சொல்லி எல்லார் வயிற்றையும் கலக்கிவிட்டார் உமாபதி சிவம்.
மறை ஞானசம்பந்தர், அவரிடம் ஏதும் பேசவில்லை. அங்கிருந்து புறப்பட்டார். உமாபதிசிவம் அவரை விடவில்லை. பின்னாலேயே சென்று, ""சுவாமி! என்னைத் தங்கள் சீடனாக ஏற்க மாட்டீர்களா!'' எனக்கெஞ்சினார்.
ஓரிடத்தில் நெசவாளர்கள் தறியில் துணி நெய்து கொண்டிருந்தனர். துணி அழுத்தமாக இருப்பதற்கான கஞ்சி அவர்கள் அருகே
இருந்தது. அதில், சிறிது தனக்கு தரும்படி சம்பந்தர் கைநீட்டினார். கஞ்சி சூடாக இருந்தது. எனவே, நெசவாளர்கள் அவரது கை சுட்டுவிடக்கூடாதே என்பதற்காக, கொஞ்சம் கொஞ்சமாக கையில் ஊற்றினர்.
மறை ஞானசம்பந்தர், அவர்களிடம், ""பயப்படாதீர்கள்! எனக்கு சுடாது. தாராளமாக ஊற்றுங்கள்,'' என்றார். அவர்களும் ஊற்றவே, விரல் இடுக்கு வழியே கஞ்சி கசிந்து கீழே வழிந்தது. அப்போது, மறை ஞானசம்பந்தர் உமாபதியை அழைத்தார்.
""கீழே சிந்தும் கஞ்சியைக் குடி,'' என்றார். உமாபதியும் அவ்வாறே செய்தார். அதுவே அவருக்கு குரு பிரசாதம் ஆயிற்று. நேற்று வரை ராஜா போல பவனி வந்தவர், இன்று எளிமையின் வடிவமாகி விட்டார்.
இந்த உலகவாழ்வில் கிடைக்கும் பல்லக்கு, கார் போன்ற தற்காலிக சுகங்கள் நிரந்தரமானது மக்கள் நினைக்கின்றனர். இதையே "பகல் குருடு' என்ற வார்த்தையால் குறித்தார் மறை ஞானசம்பந்தர்.
"இதையெல்லாம் விட்டுவிட்டு, கஞ்சி போன்ற எளிய உணவருந்தி , இறைசிந்தனையுடன் இருந்தால் இறைவனுடன் கலக்கலாம்' என்பது மறை ஞானசம்பந்தரின் கருத்து. அலையில் மிதக்கும் துரும்பு போன்ற இந்த வாழ்வை எளிமையாக்கிக் கொள்வோமா!

No comments:

Post a Comment