Friday, June 14, 2013

திருநீறு பூசுங்க! சொல்கிறார் வாரியார்

சிவசின்னங்களான திருநீறு, ருத்ராட்சத்தை அணிவது மட்டுமின்றி பார்த்தாலே புண்ணியம். இதனை விளக்குவதற்காக வாரியார் கூறும் கதை இது.
சிதம்பரத்தில் நெசவாளி ஒருவன் இருந்தான். சைவனாகப் பிறந்தும், விபூதி அணிய மாட்டான். தானுண்டு தன் வேலையுண்டு என துணி நெய்தபடி இருப்பான். ஒருநாள் மகான் ஒருவர் கோயிலில் பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார்.
நெசவாளியின் மனைவி, தன் கணவரையும் அவரிடம் ஆசி பெற வருமாறு அழைத்தாள்.
அவன் மனைவியிடம், ""ஏழைகளுக்கு பூஜை செய்ய நேரமேது? இருந்தால் எல்லாம் செய்யலாம். நாம் நெய்தால்தான் அடுப்பு
எரியும். எனக்கு விபூதி பூசக் கூட நேரம் கிடையாது,'' என்றான்.
அவளோ, "இந்த உடம்புக்காகப் பாடுபடும் நீங்கள், உயிருக்காகவும் பாடுபடவேண்டாமா?.'' என கேட்டாள்.
நெசவாளிக்கு கோபம் வந்து விட்டது. ""அடியே! வேலையை கெடுக்காதே! நீ போய் சிவபூஜை செய். நீ செய்யும் பூஜையில் எனக்கும் பங்கு கிடைக்கும், போ...போ...'' என விரட்டினான்.
அவள் விடாக்கண்டி.
""நான் சாப்பிட்டால் உங்கள் வயிறு நிரம்புமா?,'' என்று எதிர்க்கேள்வி கேட்டாள்.
நெசவாளி அதை காதில் வாங்கவே இல்லை. அவன் அவளுடன் செல்ல மறுத்துவிட்டான்.
அப்போது, நெசவாளியின் வீட்டு வழியாகவே, அந்த மகான் வந்து கொண்டிருந்தார். நெசவாளியின் மனைவி ஓடிச்சென்று அவரிடம் ஆசி பெற்றாள். நெசவாளியோ தறியை விட்டு இறங்கவில்லை.
மகான் அவனருகே வந்தார்.
""தம்பி! மனிதப்பிறவி மிக அரியது. அதை வழிபாடு செய்து பயனுடையதாக்கிக் கொள். சிவசின்னமான திருநீறு தரித்துக் கொள்,'' என்றார்.
""சுவாமீ! எனக்கு திருநீறு மீது வெறுப்பு கிடையாது. ஏழையான எனக்கு நெய்வதற்கே நேரம் போதவில்லை, இதில் வழிபாட்டுக்கு ஏது நேரம்?'' பதிலளித்தான்.
""மகனே! நீ திருநீறு பூசவேண்டாம். திருநீறு அணிந்த யாராவது ஒருவரை பார்த்தபின் தினமும் சாப்பிடு,'' என்றார்.
நெசவாளி தலையசைத்தான்.
பக்கத்து வீட்டில், தினமும் திருநீறு பூசும் பழக்கமுள்ள மண்பாண்டத் தொழிலாளியை பார்க்க முடிவெடுத்தான்.
அவர், நெசவாளியிடம் மூக்குப்பொடி கேட்பதற்காக வருவார். ஜன்னல் வழியே கையை நீட்டுவார். அப்போது பொடி கொடுத்தபடி அவரது முகத்தைப் பார்ப்பான்.
""கொண்டா சாப்பாடு'' என மனைவியை அழைப்பான். அவள் கூழைக் கொடுத்ததும் "கடகட' என குடித்துவிட்டு நெய்ய ஆரம்பிப்பான்.
ஒருநாள் குயவர் வரவில்லை. நேரமானதால் நெசவாளிக்கு பசித்தது. இருந்தாலும் பொறுத்துக் கொண்டு வேலை செய்தான். பசி தாளவில்லை. தறியை விட்டு இறங்கி, குயவரைத் தேடிப் போனான். அவர் மண்ணெடுக்க ஆற்றுக்குச் சென்றிருந்தார்.
இவனும் அங்கு சென்றான். அங்கு குயவர் மண்வெட்டியால் பள்ளம் தோண்டிக் கொண்டு இருந்தார். அப்போது "டங் டங் ' என சத்தம் கேட்டது. அந்த இடத்தில்செப்புக்குடத்தில் தங்கக்காசுகள் புதையலாக இருந்தது. ஆச்சரியத்துடன் அக்குடத்தை எடுத்த மண்பாண்டத் தொழிலாளி நிமிர்ந்து பார்த்தார். நெசவாளி நின்றார். குயவரின் திருநீறு பூசிய முகத்தைப் பார்த்தவுடனேயே வீட்டுக்கு திரும்பி விட்டார்.
நெசவாளி, தான் புதையல் எடுத்ததைப் பார்த்துவிட்டு ஓடுவதாக நினைத்த, பாண்டத்தொழிலாளி புதைய<லுடன் அவசரமாக வீட்டுக்கு வந்தார். நெசவாளியின் வீட்டுக்குச் சென்று, பாதி தங்கக்காசுகளை நெசவாளி மனைவியிடம் ஒப்படைத்தார். அவள் கணவரிடம் விஷயத்தை தெரிவித்தாள்.
நெசவாளியிடம் அவள்,"" நீறணிந்த நெற்றியைப் பார்த்ததற்கே இவ்வளவு நன்மை என்றால், பூசினால் எவ்வளவு நல்லது! இனிமேலாவது திருநீறு பூசுங்க!,'' என்று வேண்டிக் கொண்டாள்.
அவனும் மகானிடம் தீட்சை பெற்று சிவபூஜை செய்யத் தொடங்கினான்.
சிவராத்திரி முதலாவது திருநீறு பூசும் வழக்கத்தை மேற்கொண்டு, செல்வவளத்தை அடையுங்க!

No comments:

Post a Comment