Friday, June 14, 2013

வற்றாத கிணறு

பத்ரிகாசிரமம் என்னும் திருத்தலத்தில் வசித்த அந்தணர், பிச்சை ஏற்று சாப்பிட்டு வந்தார். எல்லா உயிர்களையும் நேசிப்பார்.
"நாளைக்குப் பாடு நாராயணன் பாடு' என்ற அளவில் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.
தனது குடிசை வாசலில் இருபுறமும் பெரிய தொட்டி வைத்து அதில் தண்ணீர் நிரப்பி வைப்பது அவரது வழக்கம். பறவை, விலங்குகள் தாகம் தணிய நீர் அருந்திச் செல்லும். வழிப்போக்கர்களும் அவர் வீட்டில் தண்ணீர் அருந்தி இளைப்பாறிச் செல்வர்.
தண்ணீர் தானத்தால், அந்தணரின் புண்ணியக்கணக்கு அதிகரித்தது. இவ்வாறு புண்ணியம் செய்பவர்களுக்கு இந்திர பதவி கிடைக்கும் என்பது ஐதீகம். இதை அறிந்த இந்திரன், தன் பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சினான். அக்னிதேவனை அழைத்தான். இருவரும் வயதானவர்கள் போல உருமாறி அந்தணர் வீட்டுக்கு வந்தனர்.
""அந்தணரே! வெயிலில் நடந்து வந்ததால் களைப்பாக இருக்கிறது. தண்ணீர் கொடுங்கள்!,'' என்றான் இந்திரன்.
செம்பு நிறைய தண்ணீர் கொடுத்தார் அந்தணர்.
அதைக் குடித்துவிட்டு, "" எங்களுக்கு தாகம் அடங்கவில்லையே!'' என்றான். தண்ணீர் எடுக்கச் சென்ற அந்தணருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அக்னிதேவன் அங்கிருந்த தண்ணீரை வற்றச் செய்து விட்டான்.
இதை அறியாத அந்தணர், ""இதென்ன மாயாஜாலம்! துளியளவு தண்ணீர் கூட இல்லாமல் எங்கே மறைந்தது?''என்று ஆச்சரியப்பட்டார். வந்தவர்களுக்கு தண்ணீர் கொடுக்க முடியாத பாவம் தன்னைப் பற்றுமோ என பயந்தார்.
""திரவுபதியின் மானம் காக்க வந்த கிருஷ்ணா! எனக்கும் உதவி செய்ய ஓடி வா! இந்த முதியவர்களின் தாகம் தணிக்க ஏதாவது வழிகாட்டு!'' என்று வேண்டியபடி கைகளைக் குவித்தார்.
காலி பாத்திரத்தில் தண்ணீர் நிரம்பி வழிந்தது. அக்னிதேவனால் அந்த நீரை உறிஞ்ச முடியவில்லை. தனக்கு தோல்வி ஏற்பட்டதை உணர்ந்த இந்திரன் அக்னிதேவனுடன் தேவலோகத்திற்கு சென்று விட்டான்.
பின், அந்தணர் திருமாலை வேண்டிக் கொண்டு, வீட்டிலேயே ஒரு கிணறு தோண்டினார்.
அதில் சுவையான தண்ணீர் கிடைத்தது. பலரும் வந்து கிணற்றில் நீர் இறைத்து குடித்தனர். இந்திரனுக்குப் பொறாமை அதிகமானது.
தொடர்ந்து மழையே இல்லாமல் பத்ரிகாசிரமத்தில் வறட்சியை உண்டாக்கினான். குடிநீரின்றி மக்கள் திண்டாடினர். ஆனால்,
அந்தணர் வீட்டு கிணறு மட்டும் வற்றவில்லை. மக்கள் அங்கு தண்ணீர் எடுத்து ஆனந்தமாகக் குடித்தனர்.
இந்திரன் இப்போதும், தான் தோற்று விட்டதை உணர்ந்தான். பூலோகம் வந்த இந்திரன், அந்தணரின் தர்மசிந்தனையைப் பாராட்டினான். அந்தணர் வீட்டுக் கிணற்றில் எப்போதும் நீர் வற்றாமல் இருக்கவும், அந்த நீரைக் குடிப்பவர்கள் சொர்க்கத்தில் வாழும் பாக்கியம் பெறவும் வரம் கொடுத்தான். அந்தணரை தன்னோடு அழைத்துக் கொண்டு தேவலோகம் புறப்பட்டான்.

No comments:

Post a Comment