Tuesday, September 24, 2013

கடவுளிடம் பயம் வேண்டும்-கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்

 
 
கடவுளிடம் பயம் வேண்டும்-கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்
----------------------
கடவுளிடம் பயம் வேண்டும்

* ஒரே பரம்பொருளை ‘முருகா!’ என்றாலும், ‘சிவனே!’ என்று...
துதித்தாலும் ‘திருமாலே’ என்று வணங்கினாலும், ‘கணபதியே’
என்று அழைத்தாலும் ஏன் என்கிறார்கள் மானிடர்கள். ஒவ்வொரு
சுவாமிக்கும் தேங்காய் உடைக்கச் சொல்கிறீர்களே என
வருத்தப்படுகின்றனர். இது அவரவர் மனநிலையைப் பொறுத்தது.
குழந்தை பிறந்தவுடன் பெயர் வைக்கப்படாமல் இருக்கும். அதை
தந்தை ‘கண்ணே’ என்பார். தாய் ‘மணியே’ என்பாள். தாத்தா
‘முத்தே’ என்பார். பக்கத்து வீட்டுக்காரர் ‘ராஜா’ என்பார்.
இப்படி அவரவர் வசதிப்படி குழந்தையைக் கொஞ்சுவதில்லையா? அது
போல பாசத்திற்குரிய இறைவன் ஒருவன் தான். பெயர்கள் தான்
பல.

* இறைவனின் பரதநாட்டிய தத்துவம் கேளுங்கள். ஆண்டவன்,
மாயையை எடுத்து உடுக்கையினால் உதறுகிறார். ஆன்மாக்களின்
வல்வினைகள் என்னும் சஞ்சிதத்தைத் தமது திருக்கரத்தில் உள்ள
நெருப்பினால் சுட்டுச் சாம்பலாக்குகிறார். ஆணவமாகிய
முயலகனை மேலெழாவண்ணம் கிரியா சக்தியாகிய வலப்பாதத்தினால்
மிதித்திருக்கிறார். ஆனந்த அனுபவத்தை தமது தூக்கிய
திருவடியின் மூலம் தருகிறார். ஆன்மாக்களுக்கு நாம் நன்மையே
செய்ய வேண்டும். உயிர்களுக்குச் செய்யும் நன்மையே உண்மையான
கடவுள் வழிபாடாகும்.

* ஆண்டவன் அகிலாண்ட நாயகன். சர்வ வல்லமையும் உடையவன்.
நம்முடைய தலைவன். மனம் வாக்கு காயம் ஆகியவற்றால் நாம்
செய்யும் குற்றங்கள் அனைத்தையும் அறிகிறான். ஆகவே,
கடவுளிடத்தில் ஒவ்வொருவருக்கும் அச்சம் இருக்க
வேண்டும்.

* கடவுளை நம்மால் காண முடியவில்லை. பாலுக்குள்
இருக்கும் நெய் நம் கண்ணுக்கு தெரிவதில்லை. தயிராக்கி
கடைந்தால் தான் புலப்படுகிறது. அதுபோல, பக்தி செய்தால்
தான் இறைவனைக் காண முடியும்.

No comments:

Post a Comment