Thursday, October 31, 2013

இறைவனைப் பாடி, கிடைக்கும் இன்பமே பேரின்பம். மற்றவையெல்லாம் ஏமாற்று வித்தைகளே!

ஒரு அரசனை நாடி புலவர் ஒருவர் வந்தார். அன்றைய புலவர்கள், அரசனின் பெருமைகளைப் புகழ்ந்து பாடுவதும், அதற்கு அவர்கள் பரிசு கொடுப்பதும் வழக்கம்.
இந்தப் புலவர் கடவுளை மட்டுமே அதுவரை பாடியவர். ஆனால், கோயிலில் குடும்பத்தைக் காப்பாற்றுமளவு போதுமான சம்பளம் கிடைக்காததால், அரசனைப் புகழ்ந்து பாட வந்துவிட்டார். அவனைப் புகழ்ந்து பாடினார். அவனும் மகிழ்ச்சியுடன் தலையை ஆட்டி ஆட்டி ரசித்தான்.
பாடி முடித்ததும், அமைச்சரை அழைத்து, ""இந்த புலவர் என்னை மகிழ்ச்சிப்படுத்தியதற்காக இவருக்கு பத்தாயிரம் பொற்காசுகள் கொடுங்கள்,'' என்று உத்தரவிட்டான்.
புலவர் அமைச்சருடன் சென்றார். அமைச்சரோ,""சரி...போய் வருகிறீர்களா?'' என்றார்.
""அமைச்சரே! அரசன் தரச்சொன்ன பணம் எங்கே? அதைக் கொடுங்கள், புறப்படுகிறேன்,'' என்றார்.
""அதெல்லாம் தர முடியாது, கிளம்பலாம்,'' என்றார்.
அதிர்ந்து போன புலவர், அரசனிடமே திரும்பச்சென்று, அவரது உத்தரவை அமைச்சர் நிறைவேற்ற மறுப்பது பற்றி புகார் செய்தார்.
""புலவரே! நான் பரிசு தருவதாக அறிவித்ததும், உம் மனநிலை எப்படி இருந்தது?'' என்று கேட்டான் அரசன்.
""மிக மகிழ்ச்சியாக இருந்தது,'' என்றார் புலவர்.
""நீர் பாடிய போது நான் மகிழ்ந்தேன். பரிசு அறிவித்த போது, நீர் மகிழ்ந்தீர். ஆக, மகிழ்ச்சிக்கு மகிழ்ச்சி சரியாய் போயிற்று. கிளம்புகிறீரா?'' என்றானே பார்க்கலாம்.
இந்த விசித்திர விளக்கம் கேட்ட புலவர் வெளியேறி விட்டார். இறைவனைப் பாடி, கிடைக்கும் இன்பமே பேரின்பம். மற்றவையெல்லாம் ஏமாற்று வித்தைகளே!

No comments:

Post a Comment