Thursday, November 28, 2013

சொர்க்கம் போக மறுத்தவர் !

சொர்க்கம் போக மறுத்தவர் !

அடர்ந்த காட்டில் சலசலக்கும் அழகிய நீரோடையை ஒட்டி அமைந்திருந்த அந்த அழகான குடிலில் கணவன் மனைவி மற்றும் ஒரு குழந்தை என்று அளவான குடும்பம் ஒன்று வாழ்ந்து வந்தது.

அந்தக் குடும்பத்தில் வறுமையின் அடையாளம் சற்று தெரிந்தாலும், எளிமையான வாழ்க்கையால் அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவில்லை.

குடும்பத் தலைவரான முத்கலனை சிறந்த ஞானி என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு ஒழுக்கமும், அறிவாற்றலும் மிக்கவராகத் திகழ்ந்தார்.

ஒருநாள்

“சுவாமி...” வாசலில் நின்று கொண்டு யாரோ ஒருவர் குரல் கொடுக்க, சத்தம் வந்த திசையை நோக்கி எட்டிப் பார்த்தார் முத்கலர். குடிசைக்கு வெளியே மாமுனிவர் துர்வாசர் நின்று கொண்டிருந்தார்.

“வாருங்கள் துர்வாசரே... தாங்கள் இங்கு வருகை தந்தது நான் செய்த பாக்கியம்” என்று கூறி அவரை மனமார வரவேற்றார் முத்கலர்.

“எனக்கு உன்னால் விருந்து படைக்க முடியுமா?” துர்வாசரின் வார்த்தைகளில் அதிகாரம் தெரிந்தது.

“என்ன சொல்லி விட்டீர்கள் சுவாமி? உங்களுக்கு நான் விருந்து படைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அது என் கடமை. ஆனால்...”

“என்ன ஆனால்...?”

“என்னிடம் இருப்பதைக் கொண்டுதான் உங்களை உபசரிக்க முடியும். தாங்கள்தான் அதை பெருந்தன்மையுடன் ஏற்று எனக்கு அருள்புரிய வேண்டும்...”

“அப்படியே ஆகட்டும்!” என்றார் துர்வாசர்.

தொடர்ந்து, முத்கலர் தனது மனைவியிடம் பத்து நாட்களுக்குப் போதுமான தானியங்களைக் கொடுத்தார். சிறிது நேரத்தில் நறுமணம் கமழ சமையல் தயாரானது. சுவையான அந்த உணவை ஒட்டு மொத்தமாக சாப்பிட்டு விட்டு, அந்த ஏழைத் தம்பதியருக்கு ஆசி கூட வழங்காமல் சென்றார், துர்வாசர்.

பத்து நாட்களுக்கு தேவையான உணவை அவர் மொத்தமாக சாப்பிட்டு விட்டதால், அவர்களுக்கு அடுத்த பத்து நாட்களுக்கு அரையும் குறையுமாக தான் வயிறு நிறைந்தது.

11வது நாள் சமைக்கத் தேவையான தானியங்களைச் சேர்த்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார் முத்கலர்.

“இன்று நாம் முழுவேளை உணவு சாப்பிடப் போகிறோம்...” என்கிற திருப்தியுடன் வீட்டிற்கு வந்தவர், மனைவியிடம் அந்தத் தானியங்களைக் கொடுத்தார்.

சிறிது நேரத்தில் சுடச்சுட உணவு தயாரானது. சமையலில் இருந்து தவழ்ந்து வந்த மணம் வாசல் வரை வந்து, சற்றே கண்ணயர்ந்த முத்கலரை எழுப்பியது. அதேவேளையில், அங்கு வந்த துர்வாசரின் குரலும் அவரை திடுக்கிட வைத்தது.

“வாருங்கள் சுவாமி...” என்று அன்புடன் அழைத்து, தயாரான உணவை அவருக்கு விருந்து படைத்தார் முத்கலர்.

இந்த முறை விருந்தில் பங்கேற்ற துர்வாசருக்கு ஒரே ஆச்சரியம். முத்கலரை பார்த்தார். அவரது முகத்தில் எந்தவித வருத்தமும் இல்லை. அவரது மனைவி மற்றும் மகனின் முகத்திலும் எந்தவித சலனமும் தென்படாதது அவருக்கு மேலும் ஆச்சரியமாக இருந்தது. இருந்தாலும், அந்த ஆச்சரியத்தை வெளிக்காட்டாமல், விருந்து உண்டபின் அவசரமாக கிளம்பிச் சென்றார். இந்த முறையும் அந்த ஏழைக் குடும்பத்திற்கு அவர் ஆசி வழங்கவில்லை.

இரண்டாவது முறையாக துர்வாசருக்கு விருந்து படைத்ததால் அடுத்த பத்து நாட்களுக்கு முத்கலருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் வழக்கம்போல் அரைகுறை சாப்பாடுதான். அடுத்த பதினோறாவது நாள் அவர் தானியங்கள் சேகரித்தவுடன், மூன்றாவது முறையாக வந்து நின்றார் துர்வாசர்.

இப்போதும் மனம் கோணாமல் அவருக்கு விருந்து அளித்தார் முத்கலர். வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு எதுவும் சொல்லாமல் கிளம்பினார் துர்வாசர்.

இப்படியாக முத்கலர் தானியங்களை சேகரிக்கும் பதினோறாவது நாள் தவறாமல் வந்து கொண்டிருந்தார் துர்வாசர். அவரும் எந்தவித மனஸ்தாபமும் இல்லாமல் நிறைவான மனதுடன் அவருக்கு குறையில்லாமல் விருந்து உபசரித்து வந்தார். அவரும், அவருடைய குடும்பத்தாரும் வயிறார சாப்பிட்டு மாதக்கணக்கானது.

அன்றையதினமும் தானியங்கள் சேகரித்த பதினோறாவது நாள் வந்து சேர்ந்தார் துர்வாசர். அவருக்கு விருந்து பரிமாறப்பட்டது. மனைவி, மகனுடன் புன்னகை மாறாமல் உபசரித்துக் கொண்டிருந்தார் முத்கலர். ஆனால் இந்த முறை வழக்கத்திற்கு மாறாக, ஆச்சரியத்தை வெளிப்படுத்திய துர்வாசர், அதை வார்த்தைகளாக காட்டினார்.

“முத்கலரே..! உனது விருந்தோம்பலில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். முதல்நாள் போன்று என்றும் மாறாமல் உபசரித்த உன் உள்ளத்தை மெச்சுகிறேன். அதற்கு கைமாறாக உனக்கு ஒரு பரிசு தர இருக்கிறேன். இப்போதே வாசலில் நிற்கும் தங்கத் தேரில் சொர்க்கத்துக்குச் செல். அங்கு உன்னை வரவேற்கத் தேவதைகள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்...” என்றார்.

ஆனால், முத்கலர் முகத்தில் எந்தவித பரபரப்பும், ஆச்சரியமும் இல்லை. வழக்கம்போல் அமைதியாகவே பேசினார்.

“சுவாமி... உங்கள் கருணைக்கு மிக்க நன்றி. ஆனால், ஒரு சிறிய வேண்டுகோள். எனக்குத் தாங்கள் சொன்ன சொர்க்கம் என்ன என்பதுதான் புரியவில்லை. தாங்கள் தயவு செய்து அதை எனக்கு உபதேசிக்க வேண்டுகிறேன்...”

“முத்கலரே! நீ வாழ்ந்து கொண்டு இருப்பது கர்மபூமி. சொர்க்கம் என்பது போக பூமி. நீ இங்கு செய்த புண்ணியங்களுக்கான பலன்கள் எல்லாம் அங்குதான் உனக்கு கிடைக்கப் போகிறது. அங்கு நீ இதுவரை காணாத இன்பத்தை அள்ளி அள்ளிப் பருகலாம். இந்த பூமியில் நல்ல செயல்களைச் செய்து வருபவர் மட்டுமே அங்கு செல்ல முடியும்”

“சரி சுவாமி.. அங்கு குறைகள் என்று ஏதாவது உள்ளதா?”

“குறைகள் என்றால், ஒன்று மட்டுமே உள்ளது. நீ அங்கு சென்றால் தரும செயல்கள் எதுவும் செய்ய முடியாது. ஏற்கனவே நீ செய்த புண்ணியங்களுக்கான பலன்கள் மட்டுமே கொடுக்கப்படும் இடம்தான் சொர்க்கம்.”

“சுவாமி... தரும காரியங்கள் செய்யும்போது கிடைக்கும் இன்பம் தான் எனக்கு வேண்டும். வெறும் போகம் தரும் இடம் எனக்கு தேவையில்லை. நான் இங்கேயே வாழ்ந்து கொள்கிறேன்” என்று சொர்க்கம் செல்ல மறுத்த முத்கலரை வியப்போடு பார்த்தார் துர்வாச முனிவர்.

“பணம்... பணம்...” என்று அலையும் இன்றைய மனிதர்களில் தரும காரியங்கள் செய்யும்போது கிடைக்கும் இன்பம் தான் எனக்கு வேண்டும் என்று சொல்லும் முத்கலர் போன்ற ஒருவரை அடையாளம் காண்பது அரிது.

நாம் சிந்தனை செய்ய வேண்டிய விஷயம் நாமும் முடிந்த அளவு தான தர்மம் செய்தல் வேண்டும் என்பதே.

No comments:

Post a Comment