Monday, December 30, 2013

புனித சின்னங்களை தரையில் கோலமாக போடுவது அவமரியாதை இல்லையா?

சில வீடுகளில், “ஓம்” என்ற எழுத்தை வாசலில் கோலமாக போடுகிறார்கள். அதை பார்க்கும் போது மனதிற்கு சங்கடமாக இருக்கிறது. புனித சின்னங்களை தரையில் போடுவது அவமரியாதை இல்லையா? விளக்கம் தரவும்.

சிலருக்கு எது புனிதம், எது புனிதமில்லை என்ற அறிவு இருப்பதே இல்லை. தனக்கு பிடித்தமான சினிமா நடிகரின் படத்தை யாராவது தப்பி தவறி கீழே போட்டு விட்டால் வானத்திற்கும், பூமிக்கும் குதிப்பார்கள். ஆனால் அவர்களோ தனது பெற்றோர் படத்தையோ, இறைவனின் திருவுருவ படத்தையோ குப்பை மேட்டில் எறிந்தால் கூட கண்டுகொள்ள ம...ாட்டார்கள் இது கலியுக கொடுமை.

“ஓம்” என்பது ஹிந்து மதத்தின் தனிப்பட்ட சொத்து அல்ல, அது உலகம் முழுமைக்கும் சொந்தமானது. ஜைனர்களும், பெளத்தர்களும் அதை அப்படியே பயன்படுத்துகிறார்கள். கிறிஸ்தவர்கள் பயன்படுத்தும் ஆமென் என்ற வார்த்தையில் ஓம் நடு மையமாக மறைந்துள்ளது. இஸ்லாமியர்களின் ஆமீன் என்பதில் ஓம் இருக்கிறது.

பூமியில் மூன்று பங்கு உயிரினம் தண்ணீரில் வாழ்கிறது. ஒரு பங்கு உயிரினம் காற்றில் வாழ்கிறது. ஆனால் அகில புவனமும் “ஓம்” என்ற பிரணவ மந்திரத்தில் வாழ்கிறது. அதனால் தான் அதை உலகுக்கே பொதுமையானது என்று துணிந்து கூறுகிறேன். அப்படிப்பட்ட பிரணவ மந்திரத்திற்கு மதிப்பளிக்க வேண்டியது மனிதனின் முதல் கடமை.

“ஓம்” என்ற அட்சரத்தை மனித காலடிகள் படாத ஆலய வளாகங்களில், பூஜை அறையில் கோலமாக போடுவது தொன்று தொட்டு இருந்து வருகிற மரபு. எனவே அதை நாமும் கடைபிடிக்கலாம். அதில் தவறில்லை இவைகள் தவிர வேறு எந்த இடத்திலும் புனித சின்னங்களை தரையில் வரையக்கூடாது. அது சரி இப்போது நமது தமிழ்நாட்டில் பெண்கள் தினசரி கோலம் போடுகிறார்களா? ஆச்சரியமாக இருக்கிறதே கோலம் போடுவதை பெண்ணடிமை தனத்தில் சேர்க்கவில்லையா?

No comments:

Post a Comment