Tuesday, January 21, 2014

கிருபானந்த வாரியார் சொன்ன ஞானம்!

கிருபானந்த வாரியார் சொன்ன ஞானம்!

இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா?

என்ன ஐயா! என்னைச் சுத்த மடையன் என்றா கருதுகிறீர்? எனக்கென்ன கண் இல்லையா? இந்த உடம்பை எத்தனையோ காலமாகப் பார்த்து வருகிறேன்.

தம்பீ! நான் உன்னை மூடன் என்று ஒரு போதும் கருதமாட்டேன். நீ அறிஞன் தான். ஆனால் அறிவில் விளக்கந்தான் இல்லை. கண் இருந்தால் மட்டும் போதாது. கண்ணில் ஒளியிருக்க வேண்டும். காது இருந்தால் மட்டும் போதுமா? காது ஒலி கேட்பதாக அமைய வேண்டும். அறிவு இருந்தால் மட்டும் போதாது. அதில் நுட்பமும் திட்பமும் அமைந்திருத்தல் வேண்டும்!

பச்சையப்பா!
பச்சையப்பா! இந்த உடம்பை நீ பார்க்கின்றாய். இந்த உடம்பு முழுவதும் உனக்குத் தெரிகின்றதா?

ஆம் நன்றாகத் தெரிகின்றது.

அப்பா! அவசரப்படாதே. எல்லாம் தெரிகின்றதா?

என்ன ஐயா! தெரிகின்றது தெரிகின்றது என்று எத்தனை முறை கூறுவது? எல்லாந்தான் தெரிகின்றது.

அப்பா எல்லா அங்கங்களும் தெரிகின்றதா?
ஆம் தெரிகின்றது.

முழுவதும் தெரிகின்றதா?

அவன் சற்று எரிச்சலுடன் உரத்த குரலில், முழுவதும் தெரிகின்றது என்றான்.

தம்பீ! உடம்பின் பின்புறம் தெரிகின்றதா?

பச்சையப்பன் மிரள மிரள விழித்தான்.

ஐயா! பின்புறம் தெரியவில்லை.

என்ன தம்பீ முதலில், தெரிகின்றது தெரிகின்றது என்று பன்முறை பகர்ந்தாய். பின்னே பின்புறந் தெரியவில்லை என்கின்றாய். நல்லது, முன்புறம் முழுவதுமாவது தெரிகின்றதா?

அவசரம் கூடாது!

பச்சையப்பன் சிரித்த வண்ணம் ஆம் முன்புறம் முழுவதும் தெரிகின்றது என்றான்.

அப்பா! அவசரப்படக்கூடாது. முன்புறம் எல்லாப் பகுதிகளையுங் காண்கின்றனையா? நிதானித்துக் கூறு...

எல்லாப் பகுதிகளையும் காண்கின்றேன். எல்லாம் தெரிகின்றது.

தம்பீ இன்னும் ஒருமுறை சொல். எல்லாம் தெரிகின்றதா? நன்கு சிந்தனை செய்து சொல்.

ஆம் நன்றாகச் சிந்தித்தே சொல்கின்றேன். முன்புறம் எல்லாம் தெரிகின்றது.

தம்பீ! முன்புறத்தில் முக்கியமான முகந் தெரிகின்றதா?
மாணவன் துணுக்குற்றான். நெருப்பை மிதித்தவன் போல் துள்ளினான். தன் அறியாமையை எண்ணி எண்ணி வருந்தலானான்.

தணிந்த குரலில் பணிந்த உடம்புடன், ஐயனே முகந்தெரியவில்லை என்றான்.

குழந்தாய்! இந்த ஊன உடம்பில் பின்புறம் முழுவதும் தெரியவில்லை. முன்புறத்தில் முக்கியமான முகந்தெரியவில்லை. நீ இந்த உடம்பில் சிறிதுதான் கண்டனை; கண்டேன் கண்டேன் என்று பிதற்றுகின்றாய். அன்பனே! இந்த உடம்பு முழுவதும் தெரியவேணுமானால் என்ன செய்ய வேண்டும்? சொல்.

ஐயனே! இரு நிலை கண்ணாடிகளின் இடையே நின்றால் உடம்பு இருபுறங்களுந் தெரியும்.

தம்பீ! இந்த ஊன உடம்பை முழுவதுங் காண்பதற்கு இரு நிலைக் கண்ணாடிகள் தேவைப்படுவது போல், ஞானமே வடிவாய் உள்ள கடவுளைக் காண்பதற்கும் இரு கண்ணாடிகள் வேண்டும்.

ஐயனே! அந்தக் கண்ணாடிகள் எந்தக் கடையில் விற்கின்றன? சொல்லுங்கள். இப்போதே வாங்கி வருகின்றேன். பெல்ஜியத்தில் செய்த கண்ணாடியா?

அப்பனே! அவை பெல்ஜியத்தில் செய்ததன்று. வேதாகமத்தில் விளைந்தவை. ஞான மூர்த்தியைக் காண இரு நிலைக் கண்ணாடிகள் வேண்டும் என்றேன் அல்லவா? ஒரு கண்ணாடி திருவருள். மற்றொன்று குருவருள். இந்தத் திருவருள், குருவருள் என்ற இரு கண்ணாடிகளின் துணையால் ஞானமே வடிவாய் இறைவனைக் காண வேண்டும்.

அன்புள்ள தம்பீ! திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும் அதனை குருவருள் மூலமே பெறவேண்டும். கடும் வெயிலில் பஞ்சை வைத்தால் வெதும்புமேயன்றி வெந்து சாம்பலாகாது. சூரியகாந்தக் கண்ணாடியை வெயிலில் வைத்து. அதன்கீழே வரும் ஒளியில் பஞ்சை வைத்தால் அந்தக் கணமே வெந்து சாம்பலாகும். சூரியகாந்தக் கண்ணாடி பரந்து விரிந்துள்ள வெயிலின் ஆற்றலை ஒன்றுபடுத்திப் பஞ்சை எரிக்கின்றது. அதுபோல் யாண்டும் விரிந்து பரந்துள்ள திருவருளை ஒன்றுபடுத்தி மாணவனுடைய வினைகளாகிய பஞ்சை குருவருள் சாம்பலாக்குகின்றது. கதிரவனது வெயிலும் சூரியகாந்தக் கண்ணாடியும் தேவைப்படுவது போல் திருவருளும் குருவருளும் இறைவனைக் காண இன்றியமையாதவை.

இறை என்ற சொல் இறு என்ற பகுதியடியாகப் பிறந்தது. எங்கும் நீக்கமற நிறைந்த பரம்பொருள் இறைவன் என்று பேர் பெற்றது. எங்கும் நிறைந்த பொருளைக் காணும் வழி வகைகளையறிவதுதான் அறிவுடைமை. முரட்டுத்தனமாகப் பேசுவது அறிவுடைமையாகாது.

எதை எதனால் அறிவது?

எந்தப் பொருளை எந்தக் கருவியினால் அறிய வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். மனத்தை நாசியினால்தான் அறிதல் வேண்டும். ஓசையைச் செவியால்தான் அறிய வேண்டும். ஓசையை மூக்காலும் மணத்தைச் செவியாலும் அறிய முயல்வது மூடத்தனமன்றோ?

நன்கு படித்த ஒருவர், இருபத்தைந்து ஆண்டுகளாக, மல்லி, முல்லை, ரோஜா முதலிய மலர்களில் மணம் இருக்கின்றது என்கிறார்களே, அதனை நான் கண்ணால் கண்ட பிறகே ஒப்புக்கொள்வேன் என்று பூதக்கண்ணாடியை வைத்து நறுமணத்தைக் கண்ணால் காண முயன்று கொண்டிருந்தார். ஏன்? அவருக்கு நாசியில் சதை வளர்ந்திருந்தது. சுவாசக் காற்று வாய் வழியே சென்று கொண்டிருந்தது. எனவே அவர் இந்தப் பிறப்பிலே நறுமணத்தைக் காண முயன்றால் முடியுமா? நெடிது ஆராய்ந்து மல்லிகையில் முல்லையில் ரோஜாவில் நறுமணம் உண்டு என்று கூறுகின்றவன் முட்டாள். மலரில் மணம் இல்லை; இல்லவேயில்லை. இது சுத்தப் பொய் என்று கூறினால் இதை யார் ஒப்புக் கொள்ளுவார்கள்? மூக்கில் சதை வளர்ந்தவர்கள் ஒவ்வொரு ஊர்களில் சிலர் இருப்பார்கள்தானே? அவர்கள், ஆம் ஐயா கூறுவது உண்மை மலர்களில் மணம் இல்லைஎன்று கூறி ஆமோதித்தார்கள். இவர்களைக் கண்டு நாம் இரங்க வேண்டுமேயன்றி, சீற்றமடையக்கூடாதுதானே?

நறுமணத்தை நாவினால் அறிய முடியாது. சுவையை நாவினால் அறிதல் வேண்டும். சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று ஐந்தையும் நாக்கு, கண், உடம்பு, செவி, நாசி என்ற கருவிகளால் அறியவேண்டும்.

- திருமுருக கிருபானந்த வாரியார்

No comments:

Post a Comment