Monday, March 31, 2014

கருவறையில் உறையும் இறைவனின் சிலையை 'வெறும் கல்' என்று எழும் விமரிசனம் பற்றி?

(தெய்வத் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் 'ஆலயம் ஏன்?' என்ற நூலில் இருந்து)
1. கருவறையில் உறையும் இறைவனின் சிலையை 'வெறும் கல்' என்று எழும் விமரிசனம் பற்றி?
நேர்க்கோடு ஒன்றும் குறுக்குக் கொடு ஒன்றும் போட்டால் படிக்காத சிறுவன் அதைக் கோடு என்பான். படிக்கத் தெரிந்த சிறுவன் அதை 'ட' என்பான். கோடு என்பதும் அது தான். 'ட' என்பதும் அது தான். படிக்காதவனுக்கு கோடாகத் தெரிகிறது. படித்தவனுக்கு 'ட' ஆகத் தெரிகிறது. அது போல கடவுளைக் கல்லாகக் காண்பார்கள் அஞ்ஞானிகள். சிலைக்குள் இறைவனைக் ...காண்பார்கள் ஞானிகள்.
2. கும்பாபிஷேகம் என்பது என்ன?
இறைவன் ஜோதி வடிவானவன். "ஜோதியே, சுடரே, சூழொளி விளக்கே" என்பார் மணிவாசகர். அப்படி, ஜோதி வடிவான இறைவனைக் கல்லிலே அமைப்பர். பிரதிஷ்டை செய்யுமுன் மூர்த்தியை தானியத்திலும் (தான்யவாசம்), நீரிலும் (ஜலவாசம்) வாசம் செய்ய வைத்து, மந்திர யந்திரத்தை எழுதி, ஆகம முறைப் படி, மூர்த்தியின் அடியிலே வைப்பர்.
பின்னர், யாகங்களால் ஜோதியை வளர்த்து, அந்த இறை ஜோதியை கும்பத்திற்குக் கொண்டு போய், கும்பத்தில் இருந்து பிம்பத்துக்குக் கொண்டு போவது தான் கும்பாபிஷேகம். கும்பாபிஷேகத்துக்கு முன் அது கல். கும்பாபிஷேகத்திற்குப் பிறகு கடவுள். எப்படி காகிதம் கரன்சி நோட்டாக மாறுகிறதோ அது போல என்று உணர்க.
காகிதம் பற்பொடி மடிக்க உதவும். ஆனால், கரன்சி நோட்டினால் இரயில்வேயில் டிக்கெட் வாங்கலாம். அது போல, இறைவன் கல் வடிவில் கருவறையில் இருந்து நமக்குக் காட்சி அளித்து ஆட்கொள்கிறான்.
3. கடவுளுக்குக் கற்பூரத்தை ஏற்றுவது ஏன் ?
கோயிலுக்குப் போன பொருள் எல்லாம் திரும்பி விடும். கற்பூரம் ஒன்று தான் திரும்பி வராது. கற்பூரம் நெருப்பில் எரிந்து கரியோ சாம்பலோ இல்லாமல் மறைந்து விடுகிறது. அதுபோல், ஆன்மாவானது இறைவனுடைய அருட் ஜோதியில் கரைந்து ஒன்று பட வேண்டும் என்ற முக்கியக் குறிப்பைக் கற்பூரம் உணர்த்துகிறது.
"தீதணையா கற்பூர தீபமென நான்கண்ட
ஜோதியுடன் ஒன்றித் துரிசறுப்பது எந்நாளோ?"
என்பார் தாயுமானார்.

No comments:

Post a Comment