Monday, March 31, 2014

தேங்காய் உடைப்பது ஏன்?

தேங்காய் உடைப்பது ஏன்?
கோயில்களிலும், வீடுகளிலும் இறைவனுக்குப் பூஜை செய்யும் போது தேங்காய் உடைப்பதை நாம் வழக்கமாக வைத்திருக்கிறோம். திருமணம், பண்டிகைகள் போன்ற சமயங்களிலும், புதியதாக வாகனம், வீடு வாங்கும் சமயங்களிலும் கூட முதலில் தேங்காய் உடைக்கப்படுகிறது. ஏன் தேங்காய் உடைக்கிறோம், இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது. தொன்றுதொட்டு செய்து வரும் ஒரு வழக்கத்தை நாமும் அப்படியே கடைபிடிக்கிறோம் என்பதே நம் நிலைப்பாடாக இருக்கிறது. அறிந்து செய்யும் போதே எதுவும் அர்த்தமுள்ளதாகிறது என்பதால் தேங்காய் உடைப்பதன் பல்வேறு காரணங்களைப் பார்ப்போம்.
ஒரு காலத்தில் தன்னிடம் உள்ள விலங்கியல்புகளை இறைவனுக்கு அர்ப்பணித்துப் புனிதமாவதன் நோக்கத்தைக் காட்டும் வகையில் விலங்குகளை பலியிடும் வழக்கம் இருந்தது. ஜீவகாருண்யத்தை மகான்கள் அறிவுறுத்த ஆரம்பித்த பின் காலப்போக்கில் மிருகபலி வழக்கம் மறைய ஆரம்பித்தது. அதற்குப் பதிலாக தேங்காய் உடைக்கப்படுகிறது. ஹோமம் செய்யும் போது ஹோமத்தீயில் தேங்காய் அர்ப்பணிக்கப்படுகிறது.
தேங்காய் ஒரு மனிதனின் தலை போன்று காணப்படுகிறது. மனிதனின் ஆணவத்தை, கர்வத்தைத் தலைக்கனம் என்று சொல்கிறோம். அன்பு இதயத்தில் இருப்பதாகக் குறிப்பிடுவது போலவே கர்வம் தலையில் இருப்பதாகக் குறிப்பிடுகிறோம். நம் ஆணவத்தை அழித்துக் கொள்வதற்கு அடையாளமாக நாம் தேங்காய் உடைக்கிறோம். அந்த ஆணவம் அழியாத வரை மனிதன் என்றுமே இறை அருளுக்குப் பாத்திரமாக ஆவதில்லை.
தேங்காயின் அமைப்பில் வேறுசில தத்துவங்களும் சொல்லப்படுகின்றன. தேங்காயின் மேல் உள்ள கடுமையான ஓடு மனிதனின் அறியாமை மற்றும் கர்வம். அது மாயையாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. அதனுள் இருக்கும் வெண்மையான பருப்பு தூய்மையான ஞான நிலை அல்லது ஆத்மஞானம். உள்ளே இருக்கும் நீர் ஆத்மஞானத்தால் விளையும் பரமானந்தம். அறியாமை, கர்வம், மாயை என்ற கெட்டியான ஓடு உடைந்தால் மட்டுமே ஆத்மஞானம் கிடைக்கும், அதனுடனேயே இருக்கும் பரமானந்த நிலையை மனிதன் பருக முடியும் என்கிற தத்துவம் தேங்காய் உடைப்பதன் மூலம் நினைவுபடுத்தப்படுகிறது. உள்ளே இருக்கும் ஆத்மஞானத்தையும், பரமானந்த நிலையையும் ஒருவன் அறிய முடியாமல் என்றுமே மாயை மிகவும் உறுதியாக இருந்து தடுத்துக் கொண்டிருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுவதாக தேங்காய் இருக்கிறது.
சிவபெருமானுக்கு மூன்று கண்கள் இருப்பதைப் போலத் தேங்காய்க்கும் மூன்று கண்கள் இருப்பது, அதற்குரிய மிக முக்கியமான சிறப்பு. இரண்டு கண்களுடன் பிறந்த மனிதன் நன்றாகப் பக்குவப்பட்ட பின்னர் அகக்கண் அல்லது ஞானக் கண்ணைப் பெறுகின்றான். அதனால் பண்பட்டு பக்குவப்பட்டு அடையும் ஞான மனநிலைக்கும் கூட தேங்காய் ஒரு குறியீடாக உள்ளது. அதனால் தான் மூன்று கண்களுடன் இருக்கும் தேங்காய் இறைவழிபாட்டுக்கு உகந்ததாக கருதப்படுகிறது.
முக்கிய நிகழ்ச்சிகளின் போது மா இலைகளுடன் கூடிய நீர் நிரம்பிய கலசத்தின் மேல் தேங்காய் வைக்கப்பட்டு அந்தக் கலசம் பூஜிக்கப்படுவதை பலரும் பார்த்திருப்போம். மகான்களைப் போன்ற பெரியோர்களை வரவேற்கவும் கூட இது போன்ற கலசம் பயன்படுத்தப்படுகிறது. இவ்வளவு உயர்ந்த நிலையில் தேங்காயை நம் முன்னோர் வைத்திருக்கக் காரணம் தேங்காயை ஆன்ம ஞானத்திற்கு சம்பந்தப்பட்ட பொருளாய் அவர்கள் நினைத்திருந்தது தான்.
தேங்காய் முற்றுவதற்கு முன் இளநீராய் இருக்கும் போது இறைவனின் அபிஷேகத்திற்கு மிக உகந்ததாய் கருதப்படுகிறது. உப்பு நீரை பூமியிலிருந்து உறிஞ்சிக் கொண்டாலும் தென்னை மரம் அதனை, சுவையான இனிப்பான இளநீராக மாற்றித் தருவதும் கூட பக்குவப்பட்ட ஞான மனநிலை பெற்றவரின் தன்மையாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது. உலகத்தில் தான் பெறுவது எத்தனை மோசமானவைகளாய் இருந்தாலும் அவற்றை அப்படியே உலகிற்குத் திருப்பித் தந்து விடாமல் தன் ஞானத் தன்மையினால் அதனை நன்மை தருவனவாக மாற்றி உலகிற்கு அளிக்கும் ஞானியின் செயலாய் இளநீரைச் சொல்லலாம். அதனாலேயே இளநீர் இறை அபிஷேகத்திற்கு விசேஷமான பொருளாக எண்ணப்படுகிறது. அதனாலேயே இறைவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்பவருக்கு ஆன்மிகம் அல்லது ஞானப் பாதையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று பல அறிஞர்கள் கருதுகிறார்கள்.
இளநீர் நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக இருக்கிறது. பல ஆயுர்வேத மருந்துக்கள் தயாரிக்கவும் இளநீர் பயன்படுகிறது. வேறுசில மருத்துவ முறைகளிலும் இளநீர் பயன்படுத்தப்படுகிறது. இளநீரின் இந்த மருத்துவப் பயன்பாட்டினாலும், குளிர்ச்சியான தன்மையாலும், அம்மை வந்தவர்கள் மாரியம்மனுக்கு இளநீர் அபிஷேகம் செய்விப்பது தங்கள் அம்மை நோய் விரைவில் குணமடைய உகந்த வழிபாடு என்று நம்புகிறார்கள்.
இளநீராக இருக்கையில் இப்படி என்றால் அறவே நீரற்ற முற்றிய கொப்பரைத் தேங்காயோ பற்றற்ற நிலைக்கு அடையாளமாய் மாறுகிறது. கொப்பரைத் தேங்காயாக மாறும் போது மூன்று மேலான நிலைகளைத் தேங்காய் அடைவதாக அறிஞர்கள் சிலாகிக்கிறார்கள்.
முதலாவதாக, தேங்காய் தன் அகப்பற்றான நீரை அகற்றி விடுகிறது.
இரண்டாவதாக, அந்த நீரின் உண்மையான சுவையையும், சத்தையும் தன்னுள் இணைத்துக் கொண்டு விடுகிறது.
மூன்றாவதாக, புறப்பற்றான ஓட்டை விட்டு விலகி விடுகிறது.
அதனால் தான் அறிஞர்கள் கோப்பரைத் தேங்காயை ஞானத்தோடு உவமைப்படுத்திக் கூறுவார்கள். உலகத்தில் இருந்து பற்றுத் தொடர்பினை முறித்துக் கொள்ளும் மனநிலைக்கு அறிகுறியாகவே கொப்பரையும் அதன் ஓடும் கருதப்படுகின்றன. இந்தக் கொப்பரைத் தேங்காயை வேள்விகளின் போது “பூரண ஆகுதி"யாகப் பயன்படுத்துகின்றனர். வேள்வி யாகத்தில் பழங்கள், தானியங்கள், உணவுப் பொருள்கள், ஆடைகள் முதலிய பல பொருள்கள் முதலில் சமர்ப்பிக்கப்படுகின்றன. நிறைவாக ஒரு பட்டுத்துணியில் கொப்பரைத் தேங்காயைக் கட்டி அக்னியில் இடுகின்றனர். இவ்வாறு அதன் பற்றற்ற நிலையின் காரணமாக கொப்பரைத் தேங்காயே “பூரண ஆகுதி" ஆகிற முழுத்தகுதியை பெறுகிறது.
இறைவனிடம் பிரார்த்தனை செய்து தேங்காய் நைவேத்தியம் ஆக செய்யப்படுகிறது. தேங்காய் பிரசாதமாகவும் பக்தர்களுக்கு அளிக்கப்படுகிறது. பிள்ளையாரிடம் ஏதாவது பிரார்த்தனை செய்து அது நிறைவேற தேங்காயை நாலாபக்கமும் சிதறுமாறு தெருவில் உடைப்பதும் உண்டு. தேங்காயை உடைப்பது ஆணவத்தை உடைப்பதற்கொப்பானது என்பதைப் பார்த்தோம். சிதறு தேங்காய் உடைப்பதில் மனிதனின் அகங்காரத்தின் முடிவையும் தியாகத்தின் தொடக்கத்தின் நிலையையும் காண முடியும். எப்படி என்றால் சிதறு தேங்காய் துண்டுகளை எத்தனையோ ஏழைகள் எடுத்துச் செல்வது மறைமுகமாக செய்யும் தர்மமாகிறது. (இந்த சிதறு தேங்காய் வழிபாட்டு முறை தமிழகத்திலேயே அதிகம் காண முடிகிறது).
இப்படி தேங்காய் இறைவடிவமாகவும், ஞான நிலைக்கான சின்னமாகவும் கருதப்படுவதால் தான் இறை வழிபாட்டில் தேங்காய்க்கு முதலிடமும், முக்கிய இடமும் அளிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment