Monday, April 21, 2014

என்ன கிழமையில் என்ன மூச்சு?

என்ன கிழமையில் என்ன மூச்சு?
எல்லோருக்கும் எல்லாவற்றையும் அடைய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. மோட்டார் பைக்கா, சி.டி.பிளேயரா, கேமராவுடன் இணைந்த செல்போனா எதுவானாலும் நம்மிடம் இருக்க வேண்டும். இதையே இன்னும் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லப் போனால் உயர்ந்ததான பொருள் நம்மிடம் இருக்க வேண்டும். நம்மிடம் ‘மட்டும்’தான் இருக்க வேண்டும் என்ற எண்ணமும் உண்டு. இந்த எண்ணம் தவறா என்ற கேள்வி எழுந்தால், ‘தவறில்லை’ என்பதுதான் பதிலாக இருக்கும். அது நியாயமான பதிலும் கூட! ஆனால், பிரச்னை எங்கு வருகிறது என்றால், அவ்வாறு ஆசைப்படுவர்களில் 99.9 சதவீதத்தினர் அஸ்திவாரமே இல்லாமல் கட்டிடம் கட்டிக் கொண்டிருக்கிறோம். பிரச்னையே இங்குதான் வருகிறது. இதை, முன்னோர்கள் நகைச்சுவையாக, ஒரு சிறிய கதையின் மூலம் அறிவுறுத்துவார்கள்:
ஒரு பெரிய கோடீஸ்வரர், நாலு மாடிக் கட்டிடம் கட்டத் தீர்மானித்தார். கட்டிடம் வேலையை ஐந்து ஒப்பந்தக்காரர்களிடம் பொறுப்பாக ஒப்படைத்தார். பூமி பூஜை போட்டார். ஒப்பந்தக்காரர்களில் நால்வர் மட்டும் வந்திருந்தனர். ஒருவர் வரவில்லை. அதற்காகப் பணக்காரர் கவலைப்படவில்லை. அவர் பூமி பூஜையை முடித்தார். அது முடிந்ததும், வந்திருந்த ஒப்பந்தக்காரர்களிடம், ‘‘ம், பூமி பூஜை போட்டாச்சு. வேலையை ஆரம்பியுங்கள்’’ என்றார்.
ஒப்பந்தக்காரர்களோ, ‘‘அது எப்படிங்க முடியும்? அஸ்திவாரத்துக்குப் பொறுப்பு ஏத்துக்கிட்டவர் வர்லீங்களே! அவர் இல்லாம, நாங்க என்னத்தச் செய்ய முடியும்?’’ என்றார்கள்.
பணக்காரர் அசரவில்லை. ‘‘அட! அதனால் என்ன? அஸ்திவாரம் வெளியில் தெரியவா போகிறது? அது பாட்டுக்கு அடியில் கிடக்கப்போகிறது. அதனால், அஸ்திவாரத்தைப் பிறகு கட்டிக் கொள்ளலாம். முதலில் நீங்கள் நான்கு பேர்களும் உங்கள் வேலையை முடியுங்கள்!’’ என்றார். அதைக் கேட்டதும் ஒப்பந்தக்காரர்கள் சிரித்து விட்டார்கள். பிறகு? சிரிக்காமல் என்ன செய்வதாம்? அந்தப் பணக்காரரைப் போல்தான் நாமும் இருக்கிறோம். அஸ்திவாரத்தை பற்றிக் கவலையே படாமல், மேன்மேலும் கட்டிடங்களைக் கட்டிக் கொண்டிருக்கிறோம். அதாவது, உடம்பைப் பற்றிக் கவலைப்படாமல், அதே சமயம் உடல்பினால் அடையக் கூடிய அனைத்தையும் அடைய விரும்புகிறோம். வேட்டையாடுகிறோம். விளைவு?
உடம்பு கெட்டுப் போகிறது. அதன் பிறகு, எது கிடைத்து, எது இருந்துதான் என்ன பலன்? ஆரோக்கியம் இல்லாவிட்டால் அகில உலகமுமே நமக்குக் கிடைத்தும் பலனில்லை. அதை அடைய வழி? ‘காலைப் பிடி! காயம் நன்றாக இருக்கும்‘’என்றார்கள் நமது முன்னோர்கள். இதில், ‘கால்’ என்பது, நாம் நடந்து செல்ல உதவுகிறதே, அந்தக் கால்களைக் குறிக்காது; காற்றைக் குறிக்கும். தமிழில் ‘கால்’ என்றால் ‘காற்று’ என்று பொருள். ‘மூலாதாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே’ என இப்பொருளில்தான். ஔவையார் விநாயகர் அகவலில் கூறி இருக்கிறார். ராமாயணத்தில், ஆஞ்சநேயர் கடலைத் தாண்டி இலங்கைக்குச் சென்றார். அங்கே அவர் சீதையைச் சந்தித்தார். அப்போது சீதை, ‘‘ஆஞ்சநேயா! நீ எப்படி கடலைத் தாண்டி வந்தாய்’’ எனக் கேட்டார்.
அதற்கு ஆஞ்சநேயர் ‘‘இக் கருங் கடல் கடந்தது என் காலினால்’’ என்று பதில் கூறினார்(கம்ப ராமாயணம்-சுந்தரகாண்டம்.) ஆஞ்சநேயர் என்ன காலால் நடந்தா கடலைத் தாண்டினார்? ஆகாய வீதி வழியாகப் பறந்தல்லவா வந்தார்? மூச்சுக் காற்றை முறையாக அடக்கிப் பிராணாயாமப் பயிற்சியில் ஈடுபட்டவர்களுக்கு, அதில் சித்தி பெற்றவர்களுக்கு, ஆகாயத்தில் பறக்கும் சக்தி உண்டாகும். இதைத்தான் ஆஞ்சநேயர், காலால் கடலைக் கடந்ததாகக் குறிப்பிட்டார். இவ்வாறு கம்ப ராமாயணத்திலும் ‘கால்’ என்பது காற்றையே குறிக்கிறது. இதையே நமது முன்னோர்கள் ‘காலைப்பிடி, காயம் நன்றாக இருக்கும்’ என்று கூறினார்கள். காற்றைப் பிடித்தால், உடம்பு (காயம்) நன்றாக இருக்கும். என்பதே அதன் பொருள்.
அந்தக் காற்றைப் பிடித்து, உடம்பை நன்றாக வைத்துக் கொள்ளும் வழி வகைகளைப் பற்றித் திருமூலர் சொல்வதைச் சிந்திக்கலாம், வாருங்கள்!
ஒரு நாளைக்கு நாம் 21600 தடவை மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த மூச்சுக் காற்று, பிராணவாயு எனப்படும். அந்தப் பிராணவாயுவை இடகலை-பிங்கலை என்னும் இரண்டு நாடிகளில் மாறி மாறி இழுத்து வாங்கி இருத்தி விட்டால், நாடிகள் தூய்மையாகும். இடகலை-பிங்கலை என்பவை, இடது நாசித்துவாரம் வலது நாசித்துவாரம் ஆகியவற்றைக் குறிக்கும். இவற்றின் வழியாக நாம் சுவாசிக்கும் காற்றையும் வெளியே விடும் காற்றையும் அதன் போக்கிலே தான் செயல்பட வைத்திருக்கிறோம்.
அவ்வாறு விடாமல், இடகலையில் மூச்சை இழுத்து, பிங்கலையில் விட வேண்டும். பிங்கலையில் மூச்சை இழுத்து, இடகலையில் விட வேண்டும். இப்படிச் செய்வது சுழற்றிக் கொடுத்தல் எனப்படும். இவ்வாறு மாற்றி மாற்றி சுழற்றிக் கொடுக்கும்போது மூச்சுக் காற்றை உள்ளமெனும் தாமரையில் நிறுத்தி, அந்தத் தூய காற்றை நம் உடம்பில் உள்ள எல்லா நாடிகளிலும் பரவச் செய்ய வேண்டும். இப்படிச் செய்வது ‘பூரித்தல்’ எனப்படும். இவ்வாறு செய்தால் நாடிகள் தூய்மையாகும். உள்ளே உள்ள அசுத்தம் எல்லாம் நீங்கி விடும். தூயகாற்று உள்ளத்தில் நிறைந்தால், நாடி-நரம்புகளில் பரவினால், உடம்பு தானே உறுதியாகும். உறுதியான அந்த உடம்பிற்குத் திருமூலர் ஓர் அற்புதமான உவமை சொல்கிறார். உடம்பு மை போல ஆகி விடுமாம்!
மாந்திரீக மையை, வசியம் முதலான விருப்பங்கள் நிறைவேறுவதற்காக உபயோகிப்பார்கள். அந்த மையை ஹோம அக்கினி மூலம் தயாரிப்பார்கள். அவ்வாறு தயாரிக்கப்பட்ட மையைக் கொண்டு பலப் பல காரியங்களைச் சாதிப்பார்கள். அதுபோல, நம் உடம்பு, ஹோம அக்கினியால் தயாரிக்கப்படாமலேயே, மை போல ஆகிவிடும். அதாவது, ஹோமத் தீயில் தயாரிக்கப்பட்ட மையைக் கொண்டு பலப்பல காரியங்களைச் சாதித்துக் கொள்வதைப்போல, ஹோமத் தீயில் தயாரிக்கப்படாத மை போன்ற இந்த உடம்பைக் கொண்டு நாமும் பலப்பலக் காரியங்களைச் சாதித்துக் கொள்ளலாம் என்பது கருத்து.
சூழற்றிக் கொடுக்கவே சுத்தி கழியுங்
கழற்றி மலத்தைக் கமலத்தைப் பூரித்து
வழற்றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க்கு
அழற்றித் தவிர்ந்துடல் அஞ்சனமாமே
(திருமந்திரம்)
இவ்வாறு இடகலை, பிங்கலை, மூச்சுக் காற்றை இதயத்தில் நிறுத்துவது என்றெல்லாம் சொல்லிக் கொண்டு வந்த திருமூலர், அடுத்ததாக ஓர் அற்புதமான தகவலைச் சொல்கிறார். நமக்குத் தெரியாத, தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் அது. எந்த சீரியல் எத்தனை மணிக்கு, எந்தக் கடையில் எது கிடைக்கும், என்றைக்குப் போனால், தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்பதெல்லாம் நமக்கு நன்றாகவே அத்துபடியாக இருக்கிறது. இப்படி வெளி விவகாரங்களில் திறமைசாலிகளாக இருக்கும் நம்மை உள் விவகாரங்களில், அதாவது மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடும் செயல்களில், திறமைசாலிகளாக இருக்கச் சொல்கிறார் திருமூலவர். மூச்சுக்காற்றின் இயக்கத்தை நாம் சாதாரணமாக நினைத்திருந்தாலும் எந்தெந்த நாட்களில் எப்படியெப்படி மூச்சுக்காற்று இயங்குகிறது என்பதை திருமூலர் தெளிவாகவே சொல்கிறார்.
வெள்ளி வெண் திங்கள் விளங்கும்புதன்இடம்
ஒள்ளிய மந்தன் இரவி செவ்வாய் வலம்
வள்ளிய பொன்னே வளரும் பிறையிடம்
எள்ளிய தேய்பிறைதான் வலம் ஆமே
(திருமந்திரம்)
வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை, புதன்கிழமை ஆகிய நாட்களில் இடகலை(இடது மூக்கின்) வழியாகவும், சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை ஆகிய நாட்களில், பிங்கலை(வலது மூக்கின்) வழியாகவும் மூச்சுக் காற்றின் இயக்கம் இருக்கும். வியாழக்கிழமையில், வளர்பிறை நாளாக இருந்தால், இடகலை வழியாகவும் தேய்பிறை நாளாக இருந்தால் பிங்கலை வழியாகவும் மூச்சுக் காற்றின் இயக்கம் இருக்கும். இவ்வாறுதான் இயங்க வேண்டும்.
எந்தெந்தக் கிழமைகளில் எப்படியெப்படி மூச்சுக்காற்று இயங்கும், இயங்க வேண்டும் என்று கூறிய திருமூலர், அவ்வாறு இயங்குவதால் உண்டாகும் பலன்களையும் கூறுகிறார்.
வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை, புதன்கிழமை ஆகிய நாட்களில் இடகலை (இடது மூக்கு) வழியாக சுவாசம் இயங்கினால் உயர்ந்ததான இந்த உடம்புக்கு ஒரு குறையும் இல்லை எனப் பரம்பொருளின் அருட்கருணை, மகிழ்வோடு எனக்குக் கூறியது என்கிறார். மற்ற நாட்களில் மூச்சுக் காற்றை ஏற்கனவே சொன்ன முறைப்படி இயக்கத் தெரிந்தவன் யோகியாவான். இறைவனாவான், ஆனந்தப் பரவச நிலையை அடைவான்.
செவ்வாய் வியாழன் சனி ஞாயிறு என்னும்
இவ்வாறு அறிகின்ற யோகி இறைவனே
ஒவ்வாத வாயு வலத்தே புரியவிட்டு
அவ்வாறு அறிவார்க்கு ஆனந்தம் ஆமே
(திருமந்திரம்)
நாம் ஆனந்தமாக வாழ்வதற்காக, இவ்வாறு வழிவகைகளைச் சொல்லி வந்த திருமூலர். அந்த வழிவகைகளைச் செயல்படுத்தும் காலத்தையும் கூறுகிறார். ‘சுழற்றிக் கொடுக்கவே’ என்ற பாடலின்படி, உடம்பு உறுதி பெற்றாலும் அனைத்து நோய்களுக்கும் மூல காரணங்களான கபம், வாதம், பித்தம் என்னும் மூன்றும் வந்து தாக்குமே; அவை நீங்க வேண்டாமா? இதுவரை சொன்ன முறைப்படி மூச்சு இயக்கப் பயிற்சிகளை, மாலை நேரத்தில் செய்தால், கப நோய் நீங்கும்; நடுப் பகலில் செய்தால், வஞ்சகமான வாதநோய் நீங்கும்; விடியற்காலையில் செய்தால், பித்த நோய் நீங்கும் என நேரத்தையும் அறிவுறுத்தினார், திருமூலர்.
அதுமட்டுமல்ல ‘‘இவ்வாறெல்லாம் செய்தால் கப, வாத, பித்தங்கள் மட்டும்தான் நீங்கும் என எண்ண வேண்டாம். நரை, திரை (பார்வைக்குறைவு) கூட நீங்கும். இவ்வளவும் உங்கள் உடம்பில் உள்ள விஷத்தன்மை நீங்குவதற்காகத்தான் சொன்னோம்’’ என்கிறார், திருமூலர்.
அஞ்சனம் போன்றுடல் ஐ அறும் அந்தியில்
வஞ்சக வாதம் அறும் மத்தியானத்தில்
செஞ்சிறு காலையில் செய்திடில் பித்தனும்
நஞ்சறச் சொன்னோம் நரை திரை நாசமே
(திருமந்திரம்)
அனைத்திற்கும் காரணமானது அடிப்படையானது உடம்பு. அது நன்றாக இருக்க வேண்டுமானால் இடகலை-பிங்கலை என்னும் மூச்சுக் காற்றின் வழிவகைகளை அறிய வேண்டும். மூச்சுக்காற்று எந்தெந்தக் கிழமைகளில் எவ்வாறெல்லாம் இயங்குகிறது, இயங்க வேண்டிய அந்த முறைப்படி இயங்கினால், என்னென்ன நோய்கள் விலகும் என்றெல்லாம் நமது நன்மைக்காகவே திருமூலர் சொல்லியிருக்கிறார். திருமூலர் சொன்ன இந்த யோகப் பயிற்சி முறைகளை, நல்ல குருநாதரிடம் கற்றுக் கொள்ள வேண்டும். நூல்களில் கூறியிருப்பதை நாம் தனியாகப் பயிற்சி மேற்கொள்ளக் கூடாது. ஏதேனும் தவறு நேர்ந்தால், அதை அறிவுறுத்தி, திருத்த நூல்களால் இயலாது. ஆகையால் தகுந்த குருநாதர் ஒருவர் மூலம் மூச்சுக்கலை பயிற்சியை மேற்கொள்வோம்! முழுமையான ஆரோக்கியத்தை அடைய முயல்வோம்!

No comments:

Post a Comment