Wednesday, April 9, 2014

** உத்தமமான யோசனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்

=================================================
** உத்தமமான யோசனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்
பீஷ்மர், “தருமா...! காலகவிருஷியர் என்னும் முனிவர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு கூண்டில் காகம் ஒன்றை அடைத்து கொண்டு, ஆங்காங்குச் சென்று குற்றம் புரிபவரை கண்டுபிடித்துவிடுவார். காகத்தின் மொழி எனக்கு தெரியும்.ஆகவே காகம் சொல்வதை நான் புரிந்து கொள்வேன் என்பார். அவர் ஒரு சமயம் கோசல நாட்டு மன்னனான க்ஷேமதரிசியை காண சென்றார். மன்னனை சார்ந்த அதிகாரிகளின் குற்றத்தை காக மொழியின் மூலம் தெரிந்து கொண்டார். நாட்டு நலனில் அக்கறை கொண்ட முனிவர் அமைச்சர்களுடன் மன்னன் இருக்கையில் அங்கு சென்றார். அமைச்சருள் ஒருவரை நோக்கி, “நீ செய்த அரச குற்றங்களை நான் அறிவேன். அரசாங்க உடமைகளை திருடியதையும், செல்வத்தை கொள்ளை அடித்ததையும் நான் என் காகம் மூலம் அறிந்து கொண்டேன். நீ செய்தது சரிதானா? என உன் மனசாட்சியை கேட்டுப் பார்” என்றார். முனிவரின் அப்பேச்சை கேட்ட அவையோர் அதிர்ச்சி அடைந்தனர்.
பின் கோசல நாட்டில் எங்கும் காகம் மொழி பற்றியே பேசப்பட்டது. அதிகாரிகளின் ஒழுக்க கேட்டை மக்கள் கடுமையாக விமரிசனம் செய்ய தொடங்கினர். அமைச்சர்கள் பற்றிய புகார்கள் எங்கும் எழுந்தது. இந்நிலையில் குற்றம் புரிந்தவர்கள் அனைவரும் முனிவருக்கு எதிராக சதி செய்ய தொடங்கினர். முனிவரின் காகத்தைத் தீர்த்து கட்டுவது என முடிவெடுத்தனர். முனிவர் உறங்கி கொண்டிருந்த போது கூண்டிலேயே காகத்தை கொன்றனர். காலையில் எழுந்த முனிவர் காகத்தின் கதி கண்டு வருந்தினார். மன்னனை காண சென்றார். மன்னனை நோக்கி, “மன்னா..!!! உன்னை நான் அடைக்கலம் அடைந்தேன். என்னை காப்பாற்ற வேண்டுகிறேன். உனக்கு சிலவற்றை கூற விரும்புகிறேன். உன்னை சார்ந்த சிலர் உனக்கு கேடு செய்கின்றனர். அரசாங்க பொக்கிஷத்தை சிறிது சிறிதாக திருடுகின்றனர். நான் இதை என் காகத்தின் மூலம் அறிந்தேன். உன்னை சார்ந்தவர்களின் கோபம் காகத்திடம் சென்று அதனை கொன்று விட்டது.
உயிர்களிடம் கருணை அற்ற அவர்கள் வேறொரு திட்டத்தையும் வைத்துள்ளனர். உன் சமையல்காரர் மூலம் உன் அழிவை விரும்புகின்றனர். ஆகவே நீ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர்களிடம் நான் கொண்ட அச்சத்தால் நான் வேறு ஆசிரமம் செல்ல விழைகிறேன். அவர்கள் கோபத்தால் என் மீது வீசிய அம்பு என் காகத்தைக் கொன்று விட்டது. பயங்கரமான விலங்குகளால் சூழப்பட்ட குகையில் நுழைவது போல துன்பம் தருவது, கொடியவர்களால் சூழப்பட்ட அரச நீதியில் நுழைவது. ஆயினும் அரச நீதி என்னும் நதியை காகம் என்னும் படகை கொண்டு கடந்து வந்தேன்.
உன் அரசு வஞ்சகர்களால் சூழப்பட்டுள்ளது. இந்நிலையில் நீ யாரிடமும் நம்பிக்கை வைக்க முடியாது. நிலைமை இப்படியிருக்கையில், நான் எப்படி இங்கு தங்குவது? தீமையின் கை இங்கு ஓங்கி உள்ளது. நன்மை செய்பவன் கொல்லப்படுகிறான். தீமை செய்பவனை யாரும் கண்டு கொள்வதில்லை. நல்ல ஆட்சியில் நல்லவர் துன்பம் இல்லாது இருப்பர். தீயவர் தண்டிக்க படுவர். உனது ஆட்சி சுழல்கள் நிறைந்த அபாயகரமான நதியாக இருக்கிறது. நீயோ நஞ்சு கலந்த உணவாக இருக்கிறாய். அதாவது தீயோரின் ஆலோசனைதான் உன் நெஞ்சில் நிறைந்துள்ளது.
உன் அதிகாரத்திற்குட்பட்டவர்கள் மிக்க கொடியவர்களாக உள்ளனர். நீயோ பாம்புகள் நிறைந்த கிணறு போல் இருக்கிறாய். முட்புதர்கள் பின்னிப்படர்ந்து தண்ணீர் வெளியே தெரியா நதியாய் இருக்கிறாய். உடன் இருப்போரால் உனக்கு அழிவு நிச்சயம். உனது ஆட்சியின் மாட்சியையும் மக்களின் வாழ்க்கை முறையையும் அறிந்து கொள்ளவே இங்கு வந்தேன். நாடாளும் ஆசைகளையும் ஐம்புலன்களையும் அடக்கி மக்களிடம் அன்புள்ளவனாக ஆட்சி செய்கிறாயா என்பதை அறிய முற்பட்ட போது உன்னிடம் பெரிய குற்றம் ஏதும் தெரியவில்லை. ஆனால் அமைச்சர்கள் அப்படியில்லையே. அவர்கள் தாகத்திற்கு உதவாத தண்ணீர் போல உள்ளனர். உனது நன்மையை நாடுபவன் நான் என்பதை உணர்ந்த அமைச்சர்கள் என்னிடம் வெறுப்பு கொண்டுள்ளனர். அவர்கள் செய்த தவறுகளை நான் சுட்டிக்காட்டியதை நான் செய்த பெரிய குற்றமாக கருதுகின்றனர். நீயும் அவர்களிடம் சற்று விழிப்பாக இருக்க வேண்டும்” என்று கூறினார் முனிவர்.
மன்னன் முனிவரை நோக்கி, “உமது துன்பத்தை நான் போக்குகிறேன். நீர் இங்கேயே தங்கி இருக்கலாம். உம்மை வெறுப்பவரை நான் வெறுக்கிறேன். அவர்களுக்கு எத்தகைய தண்டனை தரப் போகிறேன் என்பதை பாருங்கள். நான் நீதியை நிலைநாட்டி மக்களுக்கு நன்மை செய்ய தாங்கள் உதவி செய்ய வேண்டும்” என்றான். முனிவர் மன்னனிடம், “நீ காகம் கொல்லப்பட்ட செய்தியை வெளியே சொல்ல வேண்டாம். ஆனால் உனது அமைச்சர்களின் அதிகாரத்தைப் பறித்து விடு. பின் ஏதோ ஒரு காரணத்தை கூறி அவர்களைக் கொலை செய். ஒரு குற்றத்தைப் பல பேர் சேர்ந்து செய்வாராயின் அவர்கள் தப்பித்து விடுவார்கள். பொருளின் தன்மையால் தான் ஒருவரிடம் செருக்கு தோன்றுகிறது. அந்த பொருளை அப்புறப்படுத்தி விட்டால் அகங்காரம் குறையும். அறிவுடை அரசன் கருத்தை வெளியே சொல்லமாட்டான். மனதிலேயே வைத்திருப்பான். தீயவரை தீயவரை கொண்டே அழிக்க வேண்டும். இந்த ரகசியம் எங்கே வெளியே தெரிந்துவிடுமோ என்றுதான் உனக்கு இவ்வளவு தூரம் சொல்ல வேண்டியதாயிற்று. மக்கள் நலனை நான் பெரிதும் விரும்புகிறேன். வேந்தே! இப்போது என்னைப்பற்றி உரைக்கின்றேன். என் பெயர் காலகவிருக்ஷயன் என்பதாம். உன் தந்தையும் என் தந்தையும் உற்ற நண்பர்கள். அந்த பிணைப்பு வழி வழியாய் தொடர வேண்டும் என விழைகிறேன். இப்போது நீ அரசன். உன் பகைவரை நீ நண்பன் என கருத வேண்டாம் என மீண்டும் உரைக்கின்றேன். அரசாட்சியை அமைச்சரிடம் கொடுத்து விட்டு ஏன் துன்பம் அடைகிறாய்? அவர்களுக்கு அதிக அதிகாரம் கொடுப்பது தவறாகும்” என்றார்.
நல்லது கெட்டது உணர்ந்த கோசல நாட்டு மன்னனும் முனிவரின் நல் யோசனைகளை ஏற்று நாட்டை நன்கு ஆண்டான்." தருமா! உத்தமமான யோசனைகளை ஏற்றுக்கொள்ள யாரும் தயங்க கூடாது என்பதனையும், அதே நேரத்தில் தீயவர்களின் யோசனையை ஏற்க கூடாது என்பதனையும் இதன் மூலம் அறிவாயாக" என்றார் பீஷ்மர்.
** நல்ல அறிவுதான் இன்பத்திற்கு காரணம்
மனிதனுக்கு செல்வம் என்று போற்ற தக்கது அறிவுதான். அறிவு உடையவன் செல்வம் உடையவன் ஆவான் சுவர்க்கம் கூட அறிவினால் கிடைக்கும் என்பது மேலோர் கருத்து. பிரகலாதன், மங்கி போன்றவர்கள் செல்வத்திற்கு அழிவு நேர்ந்த போது அதனை அறிவாலேயே திரும்ப பெற்றுள்ளனர். அத்தகைய அறிவைவிட சிறந்தது ஏதுமில்லை. இது தொடர்பாக காஸ்யபருக்கும் இந்திரனுக்கும் நடைபெற்ற உரையாடலைச் சொல்கிறேன், என பீஷ்மர் தருமருக்கு கூறலானார்.
கர்வமும், மிகுந்த செல்வமும் உடைய வணிகன் ஒருவன் இருந்தான். ஒருநாள் காஸ்யபர் என்னும் இளம் துறவி நடந்து சென்று கொண்டிருந்தார். செருக்கு மிக்க அந்த வணிகனின் தேர் காஸ்யபரின் மீது மோத அவர் கீழே விழுந்தார். கடும் சினம் கொண்டார். ஆயின் என் செய்வது, பொருள் அற்றோர் நிலை இதுதான். இதைவிட செத்து தொலையலாம் என மனம் கலங்கி செயலற்று கிடந்தார். அந்த நேரத்தில் இந்திரன் நரி உருவம் தாங்கி அங்கு வந்து இளம் துறவியை நோக்கி கூறினான். “பிறவிகளில் உயர் பிறவி மனித பிறவியே. மேலான இப்பிறவியை அடைந்தும் ஏன் இதனை பாழாக்குகிறாய்? ஏன் சாக எண்ணுகிறாய்? இவ்வுலகில் கை உள்ளவர்களை பேறு பெற்றவர்களாக கருதுகிறேன். உன்னை போன்ற மனிதருக்கு பொருளில் ஆசை உள்ளதை போல என்னை போன்ற விலங்குகளுக்கு கைகளை பெற ஆசை உள்ளது.
உடற்குறையுள்ள மனிதர் பலர் உள்ளனர். கை இல்லாதவர்களும், கால் இல்லாதவர்களும், ஒரு பக்கம் செயல் இழந்தவர்களும் உள்ளனர். ஆக இப்படி ஊனத்துடன் விளங்குவோர் பலர். நீயோ உடற் குறை ஏதுமின்றி நோயும் இன்றி இருக்கிறாய். உனக்கு கெட்ட பெயரும் இல்லை. இந்நிலையில் கிடைத்தற்கு அரிய உயிரை விடுதல் நல்லதன்று. எனவே உற்சாகத்துடன் எழுந்திரு. தருமம் செய். தானம் செய். மனத்தை அடக்கு. சக்திக்கு ஏற்றாற் போல தியாகம் செய். நற்கதி அடைவாய். இப்பிறவியில் நல்லது செய்தால் அதன் பயனை அடுத்த பிறவியில் நன்கு அனுபவிப்பாய். நான் சென்ற பிறவியில் நல்லது செய்யவில்லை. ஆகமங்களை பழித்தேன். விதண்டாவாதம் பேசினேன். அறவோரை பழித்தேன். ஒன்றும் அறியா நான் மேதாவி போல நடந்து கொண்டேன். அதனால் நரியாக பிறவியெடுக்க நேர்ந்தது. இந்த இழி பிறவியிலிருந்து விடுபட்டு எனக்கு மனிதப்பிறவி கிடைக்குமா? அப்படிக் கிடைத்தால் அதிலாவது மன நிம்மதியுடன் இருப்பேனா?” என தனது விலங்கு பிறவி குறித்து கூறி முடித்தது.
அது கேட்டு இளந்துறவி வியப்புற்று எழுந்தான். அறிவு மிக்க நரியின் சொல்லை கேட்டு மகிழ்ச்சி அடைந்தான். அது நரியன்று என தன் அக கண்ணால் உணர்ந்தான். நரி வடிவில் வந்து நன்னெறி காட்டியவன் இந்திரன் என்பதை உணர்ந்தான். பின் அறநெறியில் வாழ்ந்தான்” என பீஷ்மர் தருமருக்கு நல் அறிவுதான் இன்பத்திற்குக் காரணம் என்பதை இக்கதை மூலம் தெரிவித்தார். இதை கேட்ட தருமர் தெளிவுற்றார். பீஷ்மரை வணங்கி இறுதி ஆசி பெற்றார்.
பிதாமகரின் முடிவு
==================
பிதாமகரின் உபதேசங்களை கேட்ட அணைத்து உயிரினங்களும் பெரும் இன்பம் அடைந்தன. தன் பாவங்கள் அனைத்தையும் தொலைத்தன. தர்மத்தின் பொக்கிஷமான பீஷ்மரை வணங்கி, நன்றி செலுத்தின. பிதாமகர் நீதிகளை உபதேசிக்க உபதேசிக்க சூரியன் வடக்கு நோக்கி தன் பயணத்தை ஆரம்பித்தார். உத்தராயண காலம் தொடங்கியது. பிதா மகரின் முடிவை பாண்டவர்கள் எதிர் பார்த்தது தான் என்றாலும், அவர்களின் மனம் பெரும் துயரில் மூழ்கியது. ஐவரும் தங்களின் செல்ல பாட்டனாரை சூழ்ந்து நின்றனர். சிறு வயதில் அவர்கள் ஏறி விளையாடிய பரந்த வலிமை வாய்ந்த தோளினை இறுதியாக தொட்டு உணர்ந்தனர். நடை பழகிய போது தங்களை தாங்கி பிடித்த அவரின் கைகளை இருக்க பிடித்து முத்தமிட்டனர். கம்பீரமான நடை போட்டு உலகத்தை வென்ற மாபெரும் வில் வீரனின் உச்சி முகர்ந்து கண்ணீருடன் முத்த மழை பொழிந்தனர்.
அர்ஜுனனுக்கு துயரம் தாங்க முடியவில்லை. தனக்கு முதன் முதலில் வில்லில் நானேற்ற கற்றுக்கொடுத்த விரல்களை பிடித்தவாறு அசையாமல் நின்றான். தெளிவும் சாந்தமும் கலந்து ஒளி வீசிய பீஷ்மரின் கண்களை இமைக்காமல் பார்த்து ரசித்தான். கண்களில் திடீரென கண்ணீர் ஊற்றெடுத்தது. அர்ஜுனன் மனம் கலங்கினான்... தன் பாட்டனார் முடிவு நெருங்கிவிட்டதை விஜயனால் ஏற்க முடியவில்லை. கண்களில் ஏக்கத்துடனும், பார்வையில் யாசிப்புடனும், கிருஷ்ணரை நோக்கினான். பரந்தாமன் தன் சாந்த பார்வையில் அர்ஜுனுக்கு கனத்த நெஞ்சுடன் விடையளித்தார். அர்ஜுனனை தன் அருகில் அழைத்து அவனை ஆரத்தழுவி, அர்ஜுனனின் உணர்சிகளை அடக்கினார். பின்பு அர்ஜுனன் பீஷ்மரின் பாதங்களை தன் கண்ணீரால் நனைத்து, தர்மத்தின் திருமேனி தொட்டு வணங்கினான். அவரின் ஆசிகளை பெற்றான்.
தர்மங்களையும், நீதிகளையும், தன் உபதேசங்கள் மூலம் சொல்லி வந்த கங்கை மைந்தன் களைப்புற்றார். குரல் கம்பீரத்தை இழந்தது. வார்த்தைகள் மெல்ல மெல்ல தெளிவை இழந்தது. அசைவுகள் குறைந்தன. அவரின் கண்கள் இறுகி, சோர்வின் காரணமாக நீண்ட ஆழ்ந்த சுவாசங்களை வெளிப்படுத்தினார். பேச்சை நிறுத்தினார். யோகத்தில் ஆழ்ந்தார். தன் சிறு வயது நினைவுகளில் மூழ்கினார். தந்தை சாந்தனு மற்றும் தாய் கங்கா தேவியை மனதார வணங்கினார். தனக்கு உயிரையும் உடலையும் அளித்த அந்த இருவருக்கும் இறுதி வணக்கங்கள் மற்றும் நன்றிகளை செலுத்தினார். மெல்ல மெல்ல தியானத்தில் மூழ்கினார். தியானத்தில் இருக்கையிலேயே அவரின் உடலில் இருந்த அம்புகள் உதிர்ந்தன. பரந்தாமன் கிருஷ்ணரின் முகத்தை கடைசி முறையாக உள்ளதால் கண்டு மகிழ்ந்தார். உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்ய தொடங்கினார். ஆனந்தமாக கண்களை மூடினார். மூடிய அவரது கண்கள் அதற்க்கு பின் திறக்கவில்லை.
மூவுலகத்திலும் ஈடற்ற மாபெரும் வீரர் மறைந்தார். விரதங்களின் வேந்தன் மறைந்தார். பரசுராமர், வஷிஸ்டர், பிரகஸ்பதி ஆகியோரின் தலை சிறந்த சீடர் மண்ணுலகத்தை விட்டு மறைந்தார். தர்மங்களின் அடையாளமாக திகழ்ந்த கங்கை மைந்தர் மறைந்தார். நீதிகளின் பிம்பமாக விளங்கிய புனிதன் மறைந்தார். ஒழுக்கத்தில் ஓங்கி நின்ற ஒழுக்க சீலன் விண்ணுலகை அடைந்தார். எட்டு திக்கும் ஒலித்த அவரின் வெற்றி கர்ஜனை அன்றுடன் அடங்கியது. சரித்திர நாயகன், சத்தியபுருஷன் தன் பிறவி காரியங்களை முடித்துக்கொண்டு தேவலோகத்தை மீண்டும் அடைந்தார்.
அவரது உயிர் சுவர்க்கத்தை நோக்கிச் செல்லலாயிற்று. அது கண்ட கண்ணனும், வியாசரும் வியப்புற்றனர். தேவ துந்துபிகள் முழங்கின. வானம் மலர் மாரி பொழிந்தது. சித்தர்களும், பிரம்மரிஷிகளும் மகிழ்ச்சி கடலில் மூழ்கினர். “பிதாமகரே! வருக, என விண்ணுலகத்தார் வரவேற்றனர். பெரிய அக்கினி ஜ்வாலை போன்றதோர் ஒளிப்பிழம்பு கங்கை மைந்தரின் தலையிலிருந்து புறப்பட்டு விண்ணுலகை சென்று அடைந்தது. பீஷ்மர் இவ்வாறு வசுலோகத்திற்கு போய் சேர்ந்தார்.
பாண்டவர்களும், விதுரரும், யுயுத்சுவும் சந்தனக்கட்டைகளாலும் மேலும் பல வாசனை பொருள்களாலும் சிதை அமைத்தனர். திருதிராட்டிரனும், தருமரும் பிதாமகனின் உடலை பட்டுக்களாலும், மாலைகளாலும் போர்த்தி மூடினர். யுயுத்சு குடை பிடித்தான். பீமனும், அர்ச்சுனனும் சாமரங்கள் ஏந்தினர். நகுல, சகாதேவர்கள் மகுடம் வைத்தனர். திருதிராட்டினனும், தருமரும் காலருகே நின்றனர். குருவம்சத்து மாதர்கள் நாற்புறமும் விசிறி கொண்டு வீசினர். ஈமச்சடங்குகள் சாத்திரப்படி நிறைவேறின. புண்ணியமூர்த்தியின் சிதைக்கு தீயிடப்பட்டது. அனைவரும் வலம் வந்து தொழுதனர். முப்பத்தி முக்கோடி தேவர்களும் மலர் தூவி வாழ்த்தினார்கள். எங்கும் சாந்தி நிலவியது.
பின்னர் கண்ணனும், நாரதரும், வியாசரும், பாண்டவரும், பரதவம்சத்து பெண்டிரும், நகர மாந்தரும் புண்ணிய நதியான கங்கை கரையை அடைந்தனர். ஜலதர்ப்பணம் செய்யப்பட்டது. அப்போது கங்காதேவி நீரிலிருந்து எழுந்து வந்து அழுது புலம்பியபடியே, “நான் சொலவதை கேளுங்கள். என் மகன் குலப்பெருமை மிக்கவன். ஒழுக்கத்தில் சிறந்தவன். பரத வம்சத்து பெரியோர்களிடம் பெருமதிப்புடையவன். உலகோர் வியக்கத்தக்க விரதத்தை மேற்கொண்டவன். பரசுராமராலும் வெல்ல முடியா பராக்கிரம் உடையவன். காசி மாநகரில் நடைபெற்ற சுயம்வரத்தில் தனியொரு தேராளியாக இருந்து, மன்னர்களை வென்று மூன்று கன்னிகைகளை கொண்டு வந்தவன். வீரத்தில் இவனுக்கு நிகராக உலகில் வேறு யாருமில்லை. அத்தகைய மாவீரன் சிகண்டியினால் கொல்லப்பட்டதை எண்ணுகையில் என் நெஞ்சம் வெடித்துவிடும் போலிருக்கிறது” என்றாள்.
அப்போது கண்ணன், “தேவி துயரப்படாதே. தைரியத்தை இழக்காதே. உன் மைந்தன் மேலுலகம் சென்றடைந்தார். இனி அவர் வசுவாக இருப்பார். ஒரு சாபத்தினால் மானிட வடிவம் தாங்கி மண்ணுலகில் உனக்கு மகனாக பிறந்தார் என்பதை நீ அறிவாய். இப்போது சாப விமோசனம் கிடைத்துவிட்டது. இனி நீ அவரை பற்றி கவலை கொள்ள தேவையில்லை. தேவி, ஒன்றை மட்டும் நன்றாகப் புரிந்து கொள். அந்த க்ஷத்திரிய வீரன் சிகண்டியினால் கொல்லப்படவில்லை. தனஞ்செயனால் கொல்லப்பட்டார். தேவர்கள் அனைவரும் திரண்டு வந்தாலும் அவரை வெற்றி கொள்ள முடியாது என்பதை நீ அறிவாய். வசுக்கள் உலகை அடைந்த உன் மைந்தனை எண்ணி நீ பெருமைப்பட வேண்டுமே தவிர, துயரம் கொள்ளக்கூடாது” என்று ஆறுதல் கூறினார். கண்ணனின் ஆறுதல் கேட்டு சாந்தம் அடைந்த தெய்வமகள் நீரில் இறங்கினாள். பின் அனைவரும் கங்காதேவியை வணங்கினர். அத்திருமகள் விடை தர அனைவரும் அஸ்தினாபுரம் திரும்பி சென்றனர்.
இத்துடன் சாந்தி பர்வம் முடிவடைகிறது

No comments:

Post a Comment