Thursday, April 17, 2014

குழந்தை விரல் சூப்புவது ஏன்?

குழந்தை விரல் சூப்புவது ஏன்?
மன்னன் யுவனாச்வன் எடுத்திருக்கும் முடிவை அறிந்த மந்திரிகள் திகைத்தார்கள். அவர்களுக்கு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. கூடிக் கூடி விவாதித்தார்கள். இஷ்வாகு மன்னனான யுவனாச்வனுக்கு வாரிசு இல்லை என்று நாடே கவலைப்படுகிறது. அரசியும் அளவற்ற வேதனையில்
ஆழ்ந்திருக்கிறாள். இதனிடையில் மன்னன் கானகம் சென்று தவமியற்ற முடிவெடுத்து விட்டானே? மன்னன் முடிவை எப்படி மாற்றுவது? ‘‘மன்னா! இன்னும் சிறிதுகாலம் பொறுங்கள். நாங்கள் சில முனிவர்களை அணுகி வருகிறோம். தங்கள் ஜாதகத்தைக் காட்டி, யாகத்தாலோ மந்திரங்க ளாலோ தங்களுக்கு புத்திர பாக்கியம் கிட்ட வழியுண்டா என்று விசாரித்து வருகிறோம்.
அதற்குள் கானகம் சென்று தவமியற்ற அவசரப்பட வேண் டாம்!’’ வயதில் மூத்த தலைமை மந்திரி யுவனாச்வனிடம் வேண்டினார். ஆனால், மன்னன் தன் முடிவில் உறுதியாக இருந்தான். எத்தனை காலம் இப்படி வேதனையைச் சுமந்து வாழ்வது? மந்திரிகளிடம் அவர்கள் சிறந்த புத்திசாலிகள் என்றும் மன்னன் இல்லாவிட்டாலும் அவர்களே நாட்டைச் சிறப் பாக நிர்வகித்து ஆள முடியும் என்றும் சொல்லிவிட்டான். நிலைமை இவ்வளவு நெருக்கடியாக, இத்தனை சீக்கிரம் உருவாகும் என்று மந்திரிகள் எண்ணியிருக்கவில்லை. மன்னன் இல்லாவிட்டால் பகை நாட்டி னர் தைரியமாகப் போரிடத் துணிவார்களே! தாங்கள் நாட்டை ஆள்வதாவது?
நாட்டுக்கு ஆசைப்பட்டு மந்திரிகள் மன்னனைக் காட்டுக்குத் துரத்திவிட் டார்கள் என்றல்லவோ மக்கள் பேசுவார்கள்? நமக்கெதற்கு அந்தப் பழி? மேலும் இந்த
மன்னனுக்குப் புத்திரனில்லை என்ற ஒரு குறையைத் தவிர வேறு என்ன குறை இருக்கிறது? இவனைப் போன்ற சிறந்த மனிதனை எங்கு தேடினாலும் காணக் கிடைக்காது. மந்திரிகள் ஒரு முடிவு செய்தார்கள். காட்டில் கடும் தவம் இயற்றிவரும் பார்க்கவ முனிவரை அணுகுவதென்றும் இந்தப் பிரச்னைக்கு அவர் காட்டும் வழியைப் பின்பற்றுவதென்றும் தீர்மானித்தார்கள். அன்றே அவசரமாகக் கானகத்திற்குப் புறப்பட்டார்கள். தவம் செய்ய முடிவு செய்திருக்கும் மன்னன் தங்கள் முயற்சியைத் தடுத்துவிடக் கூடும் என்றெண்ணி மந்திரிகள் மன்னனிடம் தாங்கள் பார்க்கவ முனி வரைப் பார்க்கப் போவதைத் தெரிவிக்கவில்லை.
அப்படித் தெரிவிக்காதது எத்தனை பெரிய சிக்கலை உருவாக்கப் போகிறது என்பதையும் அவர்கள் அப்போது அறியவில்லை. ஏற்கெனவே அரசிக்கு மன்னன் கானகம் செல்ல முடிவெடுத்திருப்பது உள்பட அனைத்தும் தெரியும். தன் விதியை நொந்துகொண்டு அவள் அன்றிரவு ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.
நள்ளிரவில் எழுந்த மன்னன் சாளரத்தின் வழியே நிலவொளியில் தெரிந்த மனைவியின் முகத்தைச் சற்றுநேரம் பார்த்துக்கொண்டே இருந்தான். அவள் முகத்தில் படர்ந்திருந்த கூந்தலை மெல்லக் காதோரமாக ஒதுக்கிவிட்டான். போர்வையை எடுத்துப் பரிவோடு போர்த்தி விட்டான். உத்தமமான மனைவி.
அழகில் மட்டுமல்ல, பண்பிலும் சிறந்தவள். தன்னால் இவளுக்குப் புத்திர பாக்கியம் தர இயலவில்லையே! தன்னையே குழந்தைபோல் எண்ணித் தன்மேல் தாளாத பாசம் செலுத்துபவள். தன்னைப் பிரிய நிச்சயம் உடன்பட மாட்டாள். இவளிடம் சொல்லாமலே தான் கானகம் செல்ல வேண்டும். பூனைபோல் மெல்லப் பதுங்கி எழுந்த மன்னன், அரண்மனையை விட்டு வெளியேறி யாருமறியாமல் நாட்டை அடுத்திருந்த ஒரு கானகத்தை நோக்கி நடந்தான்.
அவன் தவம் செய்ய எண்ணிச் சென்ற கானகமும் பார்க்கவ முனிவரைத் தேடி மந்திரிகள் சென்ற கானகமும் ஒன்று என்பதை இரு தரப்பி னரும் அறியவில்லை. அதனால் ஒரு விபரீதம் நேரப் போவதையும் அவர்கள் யாரும் அப்போது உணரவில்லை. மன்னன் தவம் செய்ய இடம்தேடிக் கானகத்தில் ஒருபுறம் அலைந்து கொண்டிருந்த வேளையில், மந்திரிகள் அதே கானகத்தில் இன்னொரு புறம் இ ருந்த பார்க்கவ முனிவரின் ஆசிரமத்தில் அமர்ந்திருந்தார்கள். முனிவர் அவர்கள் சொல்வதனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தார்.
ஒரு மன்னன் மேல் இத்தனை மந்திரிகள் இப்படியொரு பாசம் செலுத்துகிறார்கள் என்றால் அவன் மிக உயர்ந்தவனாகத்தான் இருக்க வேண்டும் என்று அவர்
புரிந்து கொண்டார். மாபெரும் தவசீலரான அவர் அந்த மன்னனின் பிரச்னையைத் தீர்க்கத் திருவுளம் கொண்டார். அந்தக் கானகத்தில் நீர்நிலைகள் அபூர்வம் என்றும் வடக்குப் பக்கமாக உள்ள ஒரே ஒரு குளம்தான் குடிக்கும் வகையில் தண்ணீர் தரக் கூடியது என்றும் சொல்லி, அங்குபோய் இறைவனைப் பிரார்த்தித்து, ஒரு சிறு செம்பில் தண்ணீர் எடுத்து வருமாறு மந்திரிகளைப் பணித்தார். மந்திரிகள் மிகுந்த நம்பிக்கையோடு செம்பில் நீர் கொணர்ந்தார்கள். நீர்ச்செம்பைக் கையில் வாங்கிக் கொண்ட பார்க்கவர் இறைவனைத் தியானம் செய்தார்.
பின் மந்திரிகளிடம் சொல்லலானார்: ‘‘அன்பர்களே! நான் இந் தக் கலச நீருக்கு வலிமையேற்றும் வகையில் முழு மன ஒருமைப்பாட்டோடு, புத்திர பாக்கியத்தைத் தரும் மந்திரத்தை ஜபம் செய்யப் போகிறேன். ஒரு லட்சத்து எட்டு முறை அந்த மந்திரம் ஜபிக்கப்பட வேண்டும். என் ஒருமைப்பாடு சிதறும் வகையில் நீங்கள் யாரும் எந்த சப்தமும் செய்யக் கூடாது. எந்தப் பேச்சும் பேசாமல் அமைதியாக இருங்கள். என் ஜப எண்ணிக்கை முடியும்வரை நான் இந்த இடத்தை விட்டு எழுந்திருக்க மாட்டேன். என் ஜபம் முடியும்வரை நீங்களும் இறைவனை மனத்தில் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்.’’
மந்திரிகளில் ஒருவர் தயக்கத்தோடு கேட்டார்: ‘‘சுவாமி! அப்படி நீங்கள் ஜபித்த தண்ணீரை எங்கள் அரசி குடித்தால் அவள் கர்ப்பமடைவது உறுதி தானே?’’பார்க்கவ முனிவர் நகைத்தார். ‘‘நான் ஜபித்த தண்ணீரை ஒரு விலங்கு அருந்துமானால் அது கர்ப்பமடைந்து ஒரு மனிதக் குழந்தையைப் பிரசவிக் கும். ஏன் ஒரு பாறையில் இந்தத் தண்ணீரைக் கொட்டினால் பாறை கர்ப்பமடையும்; பத்து மாதங்களில் பாறையைப் பிளந்துகொண்டு ஒரு மனிதக் குழந்தை பிறக்கும்!
அவ்வளவு அபூர்வமான மந்திரத்தை ஜபிக்கப் போகிறேன். உங்கள் நாட்டுக்கு ஒரு வாரிசு தோன்றப் போவது உறுதி.’’மலர்ச்சியோடு சொன்ன முனிவர், விழிகளை மூடி ஜபம் செய்யலானார். மந்திர உரு ஏற ஏற செம்பில் இருந்த நீரின் வலிமையும் ஏறிக் கொண்டே இருந்தது. ஆனால், லட்சத்து எட்டு முறை ஜபிப்பதற்கு எத்தனை நேரம் ஆகும் என்று மந்திரிகளால் ஊகிக்க இயலவில்லை. நேரம் கடந்துகொண்டே இருந்தது. முனிவரோ கண்ணைத் திறக்கவில்லை. ஜபத்தை நிறுத்தவும் இல்லை. அவர் தம் ஆழ்மனத்தில் லட்சத்து எட்டு என்ற எண்ணிக்கை முடியும் வரை ஜபிப்பது என்று சங்கல்பம் செய்திருந்தார். லட்சத்து எட்டு என்ற எண்ணிக்கை வந்ததும் தம் ஆழ்மனமே தமக்கு அறிவுறுத்தும் என அவர் அறிவார். மந்திரிகளின் கண்களைத் தூக்கம் தழுவியது. சூரியாஸ்தமனம் ஆகிவிட்டதால் ஆசிரமத்தின் உள்ளே இருள் படர்ந்தது. மந்திரிகள் ஒவ்வொருவராகத் தாங்கள் இருந்த இடத்திலேயே அப்படியே படுத்து உறங்கலானார்கள்.
மறுநாள் சூரியோதயம் ஆகும் தருணம். இருள் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை. முனிவர் தன் ஜபம் முடித்து கண் திறந்தார். கலசத்தில் இ ருந்த புனித நீரை நிறைவோடு பார்த்தார். இனி அது தன் வேலையைச் செய்யும் என்பதை அவர் அறிவார். கலசத்தைச் சற்றுத் தள்ளி ஓர் ஓரமாக வைத்து, கலசத்தைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு மெல்ல எழுந்தார். மந்திரிகள் அனைவரும் களைப்பில் உறங்குவதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டார். குழந்தை மனம் படைத்த நல்லவர்கள் இவர்கள். அந்த மன்ன னுக்கு இத்தகைய மந்திரிகள் கிடைத்தது அதிர்ஷ்டம்தான். காலைக் கடன் முடித்து குளித்து நித்ய கர்மானுஷ்டானங்களைச் செய்வதன் பொருட்டு ஆசி ரம வாயில் கதவைத் திறந்துகொண்டு கமண்டலத்தோடு நீர்நிலை நோக்கி நடந்தார்.
மன்னன் யுவனாச்வன், தவமியற்றத் தகுந்த இடம் தேடி அன்று முழுவதும் கானகமெங்கும் திரிந்தான். அடர்த்தி மிகுந்த அந்தக் கானகத்தில் அத்த கைய இடம் வாய்ப்பது அபூர்வமாக இருந்தது. நடந்து நடந்து அவன் கால்கள் கெஞ்சின. தாகத்தால் உயிரே போய்விடும்போல் இருந்தது. மழைநீரால் வளம் பெற்று மரங்கள் அடர்ந்துள்ள இந்தக் கானகத்தில் குடிக்கத் தண்ணீர் தரும் நீர்நிலையையே காணோமே? ஒரு பகல் முழுதும் சுற்றி இரவும் சுற்றிக் கொண்டிருக்கிறோம்.
ஆனால், ஒரு குளத்தையோ குட்டையையோ கண்டுபிடிக்க முடியவில்லையே? மன்னன் கால்வலியோடும், தாகத்தோடும், சலிப்போடு நடந்துவந்தபோதுதான் அதிகாலைக் கருக்கலின் மெல்லிய இருளில் அந்த ஆசிரமம் அவன் கண்ணில் பட்டது. வாயில் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான். பசியாலும் தாகத்தாலும் அவன் விழிகள் மங்கியிருந்தன. ஆசிரமத்தினுள் யார் யாரோ படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் யார் என இருள் காரணமாக அவனால் அடையாளம் காண இயலவில்லை. ஓர் ஓரத்தில் ஒரு செம்பில் தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது. தாகம் பொறுக்காத மன்னன் அந்தச் செம்பு நீரை எடுத்துக் கடகடவெனக் குடித்தான். பின் அப்படியே கீழே சாய்ந்து அவனும் உறக்கத்தில் ஆழ்ந்தான். வெளியே சென்ற பார்க்கவ முனிவர் திரும்புவதற்குள் சூரியன் நன்கு உதயமாகி விட்டான். ஆசிரமத்தின் உள்ளே வந்தவர் அனைவரும் இன்னும் உறங்குவதைப் பார்த்து நகைத்துக் கொண்டார்.
மிகுந்த நம்பிக்கையோடு செம்பைப் பார்த்தார். இதென்ன, செம்பில் ஒரு சொட்டுத் தண்ணீரைக் கூடக் காணோமே? நாம் செய்த மந்திர ஜபம் எல்லாம் வீணாகி விட்டதே? அவர் மனம் திடுக்கிட்டுப் பதறியது. கூச்சலிட்டு அனைவரையும் எழுப்பினார். மன்னன் எழுந்து தன் மந்திரிகளெல்லாம் அங்கிருப்பதைப் பார்த்துத் திகைத்தான். பின் விசாரித்து விஷயங்களை அறிந்துகொண்டான். ‘‘நான் மந்திர ஜபம் செய்த இந்தச் செம்பு நீர் எங்கே போயிற்று?’’ என வினவினார் முனிவர். ‘‘கடும் தாகம் காரணமாக நான்தான் தெரியாமல் அருந்தி விட்டேன்! என்னை மன்னிக்க வேண்டும்!’’ என முனிவரைப் பணிந்தான் மன்னன். ‘‘மன்னனே! நீ தெரியாமல் செய்த செயலாலும் நன்மையே உண்டாயிற்று. உன் மனைவி கர்ப்பமடைவதற்கு பதிலாக இந்த நீரை அருந்திய நீ கர்ப்ப மடைவாய். இன்னும் பத்து மாதத்தில் உன் வயிற்றைக் கிழித்துக் கொண்டு உன் வாரிசு பிறக்கும். இது உறுதி!’’
இதைக் கேட்டு மந்திரிகள் பதறினார்கள். ‘‘சுவாமி! வயிற்றைக் கிழித்துக் கொண்டு வாரிசு பிறந்தால் எங்கள் மன்னர் இறப்பாரே? எங்களுக்கு மன்னரும் வேண்டுமே? வாரிசு வளர்ந்து வாலிபனாகும்வரை நாட்டை யார் ஆள்வது?’’ மன்னன் மேல் மந்திரிகள் செலுத்திய பேரன்பைப் பார்த்து முனிவர் நெகிழ்ந்தார். ‘‘கவலைவேண்டாம். இந்த மந்திர ஜபத்தின்போதே சுகப்பிரசவம் நடக்கவேண்டும் என்ற உப மந்திரத்தையும் சேர்த்துத்தான் ஜபித்திருக்கிறேன். எனவே சுகப் பிரசவம்தான் நடக்கும். மன்னன் வயிற்றைக் கிழித்துக் கொண்டு குழந்தை பிறந்தாலும் உடனே வயிறு கூடிக் கொள்ளும். விரைவில் புண் ஆறி மன்னன் சரியாகி விடுவான்!’’
முனிவரின் பதிலால் நிறைவடைந்த மந்திரிகளும் மன்னனும் அவரை நமஸ்கரித்து விடைபெற்று அரண்மனை சென்றார்கள். ராணி அடைந்த மகிழ்ச்சிக்கு
அளவே இல்லை. ஆனால், குழந்தை பிறந்தால் அது தாய்ப்பாலுக்கு என்ன செய்யும் என்பதை மட்டும் யாரும் எண்ணிப் பார்க்கவில்லை! பத்து மாதம் கழித்துக் குழந்தை பிறந்தது. மன்னனும் அரசியும் மந்திரிகளும் மக்களும் மனம் மகிழ்ந்தார்கள். ஓர் ஆண், பிள்ளை பெற்ற அதிசயத் தைப் பார்க்க வானில் தேவர்கள் குழுமினார்கள். இந்திரன் மற்ற தேவர்களிடம் சொன்னான்: ‘‘உலகில் எல்லோரும் பெண் பெற்ற பிள்ளைகள் என்ற வகையில் பெண் பிள்ளைகள் தான். இதோ இவன் ஒருவன்தான் உண்மையான ஆண் பிள்ளை!’’
மற்ற தேவர்கள் கலகலவென நகைத்தார்கள். இப்போது குழந்தை அழத் தொடங்கியது. தாய்ப்பாலுக்கு என்ன செய்வது? ‘‘தேவேந்திரா! இந்தப் பிரச்னையைத் தாங்கள் எவ்விதமாவது தீர்த்து வைக்கலாகாதா?’’ குழந்தை மேல் கொண்ட பாசத்தோடு மற்ற தேவர்கள் வேண்டினார்கள். ‘‘இந்தக் குழந்தை உயிர்வாழ எதைக் குடிக்கும்?’’ என்று கேட்டார்கள். ‘‘குழந்தையின் விரலை அதுவே தன் வாயில் வைத்துக் கொண்டு அதைக் குடிக்கும். குழந்தை உயிர்வாழத் தேவையான சக்தியை அதன் விரலே அதற்குக் கொடுக்கும். இந்த அபூர்வக் குழந்தையின் ஞாபகமாக இனி உலகில் பிறக்கும் எல்லாக் குழந்தைகளுமே பசி தோன்றும்போது, தன் விர லைத் தானே தன் வாயில் வைத்து உறிஞ்சி சமாதானம் அடையும்!’’ என வாழ்த்தினான் இந்திரன். அந்தக் குழந்தை இந்திரன் ஆசீர்வாதத்தோடு மாந்தாதா என்ற பெயர்பெற்று வளர்ந்தது. வாலிப வயதடைந்து அவன் அரசனானான். அதன்பின் மன்னன் யுவனாச்வன் தன் நெடுநாள் ஆசைப்படிக் கானகம் சென்று தவம் நிகழ்த்தி முக்தி அடைந்தான். (மகாபாரதம் ஆரண்ய பர்வம் பகுதியில் இடம்பெற்றுள்ள இக்கதை, சின்னஞ்சிறு குழந்தைகள் ஏன் விரலை உறிஞ்சுகிறார்கள் என்பதற்கான காரண த்தை சுவாரஸ்யமாக இவ்விதம் விளக்குகிறது.

No comments:

Post a Comment