Friday, April 18, 2014

உழவாரப் பணி

சைவ சமயக் குரவர் நால்வருள் ஒருவர் திருநாவுக்கரசர், "தாண்டக வேந்தர்' என்று போற்றப்படுபவர். மருணீக்கியராக இருந்த இவருக்கு சிவபெருமான் சூட்டிய பெயர் நாவுக்கரசர். "வாகீசர்' என்ற பெயரும் உண்டு. "அப்பர்' என்று அழைத்து அகமகிழ்ந்தவர் ஞானசம்பந்தர். இவர் ஐந்தெழுத்து ("ஓம் நமசிவாய - மந்திரத்தை) படைக்கலத்தை நாவிலும், "உழவாரம்' என்ற விவசாயக் கருவியைக் கையிலும் கைக்கொண்டவர். அவர் செய்த உழவாரப்பணி எத்தகைய சிறப்பு வாய்ந்தது என்பதைக் காண்போம்:
திருஞானசம்பந்தர் கையில் பொற்றாளமும், அப்பர் கையில் உழவாரமும், சுந்தரர் கையில் செங்கோலும், மாணிக்கவாசகர் கையில் திருவாசகமும் இருக்கும். இப்படி சிவபெருமான் நால்வருக்கும் ஓர் அடையாளத்தைத் தந்து, அந்த அடையாளத்தின் மூலம் அவர்கள் செய்த செயற்கரிய செயல்களை உலகறியச் செய்துள்ளார்.
சைவ சமயத்தைச் சார்ந்த அப்பர் பெருமான், சகோதரி திலகவதியாரின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை நினைத்து, மனம் நொந்து சில காலம் சமணம் சார்ந்து பல இன்னல்களுக்கு ஆளானார்.
சிவபக்தையான திலகவதியாரின் வேண்டுகோளுக்கிணங்கி, சிவபெருமான் திருவருளால்அவர் மீண்டும் சைவ சமயம் சார்ந்தார் என்பது வரலாறு.
சமணர்களின் ஆதிக்கத்தால் பல சிவன் கோயில்கள் பாழடைந்து கிடந்தன. அவற்றைப் புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தையும், இறைவன் குடிகொண்ட ஆலயத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தையும் உலகுக்கு உணர்த்துவதற்காகவே அப்பரடிகள் கோயில்களில் முளைத்திருந்த புல்பூண்டுகளை தம் கரங்களால் களைந்து கோயிலைத் தூய்மையாக்கி திருப்பணியைத் தொடங்கிவைத்தார். அதற்கு அவர் பயன்படுத்திய ஆயுதம் உழவாரம் என்னும் புல் செதுக்கும் கருவி.
வரலாற்று ஆதாரம்
இராசராசர், அப்பர் முதலிய உருவங்களை ஸ்தாபித்ததும் - தானம் செய்ததும்; கி.பி.1017இல் இராஜேந்திரன் மூன்றாம் ஆண்டு, அப்பர் முதலிய 4 உருவங்கள் தானம் செய்துள்ளான் என்ற சான்றுகளும்; அவரின் முட்டிக்கு மேல் வேட்டி, உருத்திராட்ச மாலை, கையில் உழவாரப்படை போன்ற உருவங்கள் வைத்துப் படைத்துள்ளான் என்பதையும் அறிய முடிகிறது.
எனவே, அப்போதிலிருந்தே அப்பர் அவர் கையில் உழவாரப்படை இருந்துள்ளது. இதற்கு சான்றாக சேக்கிழார் பெருமான் பின்வருமாறு பாடியுள்ளார்:
"மார்பாரப் பொழிகண்ணீர் மழைவாரும் திருவடிவம் மதுரவாக்கிற்
சேர்வாகுந் திருவாயிற் தீந்தமிழின் மாலைகளுஞ் செம்பொற்றாளே
சார்வான திருமனமும் உழவாரத் தனிப் படையும் தாமும் ஆகிப்
பார்வாழத் திருவீதிப் பணிசெய்து பணிந்தேத்திப் பரவிச் செல்வார்''எது உழவாரம்?
உழவாரம், உழைவாரம், உழவாரப்படை - இது ஓர் ஆயுதம். புல் செதுக்கும் ஒரு கருவி (புற்செதுக்கி) என்பர். உழவாரத்தினால் செய்யும் பணி உழவாரப்பணி. அப்பர் பெருமான் தோளில் சுமந்திருக்கும் இக்கருவி முழுவதும் இரும்பினால் செய்யப்பட்டதாக அறியப்படுகிறது.
அப்பர் கையில் இருக்கும் இக்கருவி, விவசாயக் கருவிகளுள் ஒன்றாக இருந்துள்ளது. தென்னார்க்காடு மாவட்டமான (தற்போது அரியலூர் மாவட்டம்) திருக்களப்பூர் என்ற ஊரில் விவசாயக் கருவிகளுள் ஒரு கருவியின் பெயர் உழவாரம். இன்றும் அக்கருவிக்கு உழவாரம் என்ற பெயரே இருந்து வருகிறது. இன்று திருக்களப்பூரில் கால்நடைகளுக்கு புல்லை செதுக்க இக்கருவி பயன்பட்டு வருவதாக அறியமுடிகிறது.
சேக்கிழாரின் பெரியபுராணப் பாடல்களின் படி (416,417) திருப்புகலூரில் அப்பர் பெருமான் இறைவனின் திருவடியை அடைவதற்கு முன்பு அவர், "அக்கோயிலின் குளக்கரையில் உழவாரப் பணியை மேற்கொண்டிருந்தபோது பொன்னும், மணியும் உழவாரம் நுழைந்திட்ட இடமெல்லாம் தோன்றின' என்கிறார். இதை, ""வாகீசப் பெருமான் உழவாரத்திலேந்தி வாவியினிற் புக எறிந்தார்'' என்று குறிப்பிட்டுள்ளார். அந்த நீரில் (வாவி) பொன்னும் மணியும் பருக்கைகளும் நீரில் அமிழ்ந்து, மறைந்து போகும்படி உழவாரத்தில் ஏந்தி எறிந்தார் என்கிறார். இன்று உழவாரம் என்றால் திருக்கோயிலை சுத்தம் செய்வதையே குறிக்கிறது. ஆனால் இதன் பழைய பொருள் மாடு, ஆடுகளுக்குப் புல்லைச் செதுக்குவதைக் குறித்ததாம். வட்டார வழக்கில் உழவாரம், ஒழவாரம் (அரியலூர்), உலவாரம், எழவாரம் (புதுக்கோட்டை), புல்லுசெத்தி (கன்னியாகுமரி, கேரளா) முதலிய பெயர்களால் குறிக்கப்படுகிறது.
முக்தி மார்கங்கள்
இறைவனை அடைவதற்குரிய - வழிபடுவதற்குரிய நால்வகை நெறிமுறைகளை சைவ சமயம் வகுத்துக் கொடுத்துள்ளது. அவை:
சரியை (தொண்டு நெறி - அப்பர்), கிரியை(வழிபாட்டு நெறி-ஞானசம்பந்தர்), யோகம்(அகவழிபாடு-சுந்தரர்), ஞானம்(மெய்யுணர்வு-மாணிக்கவாசகர்). இதில் சரியை நெறியைப் பின்பற்றி முத்தி அடைந்தவர் அப்பர் பெருமான். இந்நால்வகை நெறியை முறையே அரும்பு, மலர், காய், கனி என்னும் நான்கு படி நிலைகளாகவும் கூறுவர். இச் சரியைத் தொண்டை மேற்கொள்பவர் மனத்தில் உள்ள மாசுகள் முற்றிலும் அகலும். தூய்மையான இடத்தில் இறைவன் இருப்பது போல, தூய்மையான மனத்திலும் இறைவன் குடிகொள்வான். மனத்தில் மாற்றம் ஏற்பட்டால் வாழ்விலும் மாற்றம் ஏற்படும்.
"வாசித்தும் பூசித்தும் மாமலர் கொய்திட்டும்
பாசி குளத்தில்வீழ் கல்லால்மனம் பார்க்கின்
மாசற்ற சோதி மணிமிடற்று அண்ணலை
நேசித்து இருந்த நினைவு அறியாரே''
என்பார் திருமூலர். கோயில் திருக்குளத்தில் படிந்த பாசியின் மீது கல்லை விட்டெறிந்தால், அந்தக் கல் நீரில் விழும்போது மட்டும் பாசி விலகும். பின் மீண்டும் பாசி தண்ணீரை மூடிக்கொள்ளும். அதுபோல, ஒருவன், தன் மனத்தை மாற்ற வேண்டும் என்ற சிந்தனையே இல்லாமல், எவ்வளவுதான் இறைவன் புகழ் கூறும் நூல்களைக் கற்றாலும், பூஜித்தாலும், மலர் பறித்துக் கொடுத்தல் போன்ற தொண்டுகளைச் செய்தாலும், அப்போதைக்கு வேண்டுமானால் இறைவனிடம் அவனது மனம் குவியும் - ஒருமைப்படும். பின்னர் மீண்டும் மனம் உலகப் பற்றுகளில் - உலக ஆசைகளில் திரும்பிவிடும் என்கிறார் திருமூலர். ஆகவே, உழவாரப் பணியின் முதன்மை நோக்கம் மனமாற்றமே என்பதை விளக்கியுள்ளார் அப்பரடிகள்.
சரியை சரியை என்பது உடலால் வழிபடுவது, அதாவது, திருக்கோயிலை வலம் வருவது, திருக்கோயிலுக்குப் பூ மாலை தொடுத்துக் கொடுப்பது, திருக்கோயிலில் உள்ளும் புறமும் பெருக்கி, துப்புரவுப் பணி செய்வது, திருக்கோயில் தரையைச் சுத்தமான பசுஞ்சாணம் கொண்டு மெழுகுவது, அதிகாலையில் குளித்து, வண்டுகள் மொய்ப்பதற்கு முன், கை நகம் படாமல் மலர்களைக் கொய்து திருக்கோயிலில் கொடுப்பது, பாசி படர்ந்த குளத்தைத் தூய்மை செய்வது, பன்னிரு திருமுறைகளைப் பாடுதல், பசுவின் நெய், எள், எண்ணெய் முதலியவற்றால் தீபம் ஏற்றுதல், நல்ல நறுமணம் மிக்க மலர்களைத் தரும் மரங்களைக் கொண்ட நந்தவனம் அமைத்தல், சிவனடியார்களை சிவமாகவே நினைத்து வணங்குதல் - வழிபடுதல் முதலியன உடலால் வழிபடுவது ஆகும். சரியை நெறியில் நின்று வழிபாடு செய்தவர்கள் சிவலோகத்திற்குச் சென்று அவ்வுலகத்தில் உள்ள போகங்களை அனுபவிப்பர்.
ஒருமுறை திருப்புகலூரில் அப்பரடிகள் உழவாரப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, சிவபெருமான் அவரைச் சோதிப்பதற்காக, குப்பைகளோடு பொன்னையும் ஓட்டையும் அவர் கண்ணில் படும்படியாக இருக்கச் செய்தாராம். ஆனால் அப்பருடைய சொல், சிந்தை, செயல் எல்லாம் சிவமயமாகவே இருந்ததால், பொன்னையும் ஓட்டையும் சமமாகவே பாவித்து, புல்லோடும் கல்லோடும் சேர்த்து அங்கிருந்த பொய்கையிலே எறிந்தாராம். அத்தகைய மனப்பக்குவத்தை அவர் அடைந்திருந்தார். சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்று வழிபாடுகளையும் ஒருவர் தவறாமல் செய்துவந்தால், இறைவன் அவர்களுக்கு ஞானத்தை உணர்த்துவான். அவ்வாறு உணர்த்தும்போது, ஜீவன் முக்தர்களை அதிட்டுத்து வந்தோ, குருநாதராக வந்தோ, மானுடச் சட்டை தாங்கியோ வந்து உணர்த்துவான். எனவே, குருபீடத்தில் அமர்ந்துள்ள ஞானிகளை வழிபடுவது ஞானநெறியில் செய்யும் வழிபாடாகும்.
மனம், வாக்கு, காயங்களால் சிவபெருமானை வழிபட வேண்டும் என்பதற்காகவே இந்த மானுடப் பிறவி நமக்கு வழங்கப்பட்டுள்ளது என்ற உண்மையை, அருணந்தி சிவாச்சாரியார் சிவஞானசித்தியார் என்ற நூலில்(பா.182) விளக்கியுள்ளார். மேலும், இந்நால்வகை நெறிகளில் உள்ள உறவு முறையை "சன்மார்க்கம், சகமார்க்கம், சற்புத்திரமார்க்கம், தாசமார்க்கம்' (280) என்கிறார். சரியை நெறியில் இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவு முறை ஆண்டானுக்கும் அடிமைக்கும் உள்ளது போன்றதாகும். அத்தகைய ஆண்டான்-அடிமை நெறியில் வாழ்ந்தவர் அப்பர் பெருமான்.
சிவ புண்ணியங்கள்
"புண்ணியம் பதி புண்ணியம், பசு புண்ணியம் என இருவகைப்படும். பதி(இறைவன்) புண்ணியம் சிவபுண்ணியம் என்றும் கூறப்படும். சிவ புண்ணியம் என்பது சிவபெருமானை நினைத்துச் செய்யும் நற்செயல்களாகும். சிவபெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் நோக்கித் செய்யும் நற்செயல்கள் பசு(உயிர்) புண்ணியம் எனப்படும். பதி புண்ணியங்கள் ஒருபோதும் அழிவில்லாமல் என்றும் நின்று முக்தியைக் கொடுக்கும். பசு புண்ணியங்களுக்கும் பலன் உண்டு. ஆனால், அப்பயன் அனுபவித்து முடிந்ததும் அழிந்துவிடும். பதி புண்ணியப் பயன் சிவபெருமானால் அனுபவிக்கப் படாததால் அழிவில்லை. அதன் பயன், உயிர்களுக்கு நிலையான இன்பத்தைத் தருவதே ஆகும்' என்கிறது சைவ சித்தாந்தம்.
சைவ சமயக் குரவர்களும் நாயன்மார்களும் காட்டிய, செய்த, நெறிகளே சிவ புண்ணியம். சரியை, கிரியை போன்றவைகளே சிவ புண்ணியங்களாகும். இப்புண்ணியங்களில் ஈடுபடுவதற்கு முதற்கண் நற்குருவை நாடவேண்டும். சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்றையும் உணர்த்துபவர் "கிரியாகுரு' எனப்படுவார். ஞானத்தை உணர்த்துபவர் "ஞானகுரு' எனப்படுவார்.
அப்பரடிகள் சரியை நெறியில் சிவபெருமானை வழிபட்டுப் பேறு பெற்றவர். சிவனை வழிபடுவதைவிட சிவனடியாரை (ஜீவன் முக்தர்கள்) வணங்குவதும், அவர் காட்டிய நெறியில் வாழ்ந்து காட்டுவதும்தான் இறைவனுக்கு மிகவும் உகந்தது. இன்றைக்கு அப்பர் காட்டிய நெறியைப் பின்பற்றி எத்தனையோ உழவாரப்பணி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
இவ் உழவாரப் பணியை - இச் சிவபுண்ணியத்தை மேற்கொண்டால் என்ன பயன் கிட்டும் தெரியுமா? 21 தலைமுறைகள் தாங்களும், தங்கள் வம்சாவளியினரும் பேரின்பம் பெற்று மீண்டும் பிறவா நெறி பெற்று சிவபுண்ணியம் ஈட்டி, சிவானந்தப் பெருவாழ்வில் திளைத்து இன்புறுவார்களாம். அத்தகைய உழவாரப்பணி புரியும் அவ்வடியார்களுக்கு உதவிக்கரம் நீட்டி, அப்பணியில் நம்மை உடலாலும், பிற வகைகளாலும் (பொருள் கொடுத்து உதவி) ஈடுபடுத்திக்கொண்டு கோயில் திருப்பணியை மேற்கொண்டு அப்பரடிகளின் உழவாரத்தை நாமும் கைக்கொண்டு வாழ்வோம்.
சித்திரை சதயம் (24.4.14) அப்பரடிகள் குருபூஜை

No comments:

Post a Comment