Thursday, May 29, 2014

ராம நாம மகிமை - விடாத சனி விட்டதெப்படி

ராம நாம மகிமை - விடாத சனி விட்டதெப்படி?
திரேதா யுகத்தில், அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட பகவான் விஷ்ணு இராமராக அவதரித்த போது, அவருக்கு உதவி செய்வதற்காக அனுமனாகச் சிவபெருமான் அவதாரம் எடுத்தார். மீண்டும் ஒருமுறை பீடிக்க முயன்ற சம்பவம் இராமாயணத்தில் காணப்படுகிறது.
இராவணனை அழிக்க வானரப் படைகளுடன் இலங்கை செல்வதற்காகக் கடலில் பாலம் அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்தார் ராமன்.
இந்த சேதுபாலம் அமைக்கும் பணியில் சுக்ரீவன், அங்கதன், அனுமன் மற்றும் அவனது வானரப்படைகள் ஈடுபட்டிருந்தன. வானரம் ஒவ்வொன்றும் தனது சக்திக்கு ஏற்றவாறு மரங்களையும் பாறைகளையும் தூக்கி வந்து கடலில் வீசிக்கொண்டிருந்தன.
இராமர், லட்சுமணர் ஆகியோர் கடலில் பாலம் உருவாவதை நோக்கிய வண்ணம் எல்லோருக்கும் ஆசி கூறிக் கொண்டிருந்தனர். அனுமனும் பாறைகளைப் பெயர்த்தெடுத்து, அவற்றின் மீது 'ஜெய் ஸ்ரீராம்' என்ற அட்சரங்களைச் செதுக்கி கடலில் எறிந்து கொண்டிருந்தார்.
அப்போது, அங்கே சனீஸ்வர பகவான் தோன்றி, இராம லட்சுமணர்களை வணங்கியபடி, "பிரபு! அனுமனுக்கு ஏழரைச் சனி பீடிக்கும் காலம் தொடங்குகிறது. என்னைத் தவறாக எண்ணாதீர்கள். என் கடமையைச் செய்ய அனுமதி தாருங்கள்" என்று வேண்டினார்.
"எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம். அதுபோல உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். முடிந்தால், அனுமனைப் பீடித்துப் பாருங்கள்" என்றார் ராமன்.
உடனே சனீஸ்வரன் அனுமன் முன் தோன்றி, "ஆஞ்சநேயா! நான் சனீஸ்வரன். இப்போது உனக்கு ஏழரைச்சனி ஆரம்பமாகிறது. உன்னைப்பீடித்து ஆட்டிப் படைக்க, உன் உடலில் ஓர் இடம்கொடு" என்றார்.
"சனீஸ்வரா! இராவணனின் சிறையில் இருக்கும் சீதாதேவியை மீட்க நாங்கள் இலங்கை செல்லவே இந்த சேதுபாலப் பணியை ஸ்ரீராமசேவையாக ஏற்றுத் தொண்டாற்றிக் கொண்டிருக்கிறோம்.
இந்தப் பணி முடிந்ததும், நானே தங்களிடம் வருகிறேன். அப்போது என் உடல் முழுவதுமே தாங்கள் வியாபித்துக் கொள்ளலாம்" என்றான் அனுமன்.
"ஆஞ்சநேயா! காலதேவன் நிர்ணயித்த காலஅளவை நான் மீற முடியாது; நீயும் மீறக்கூடாது. உன்னை நான் பீடிக்கும் நேரம் நெருங்கி விட்டது. உடனடியாகச் சொல்;
உன் உடலின் எந்த பாகத்தில் நான் பீடிக்கலாம்?" என்று கேட்டார் சனீஸ்வரன்.
"என் கைகள் இராம வேலையில் ஈடுபட்டுள்ளது. அதனால், அங்கே இடம் தர முடியாது. என் கால்களில் இடம் தந்தால், அது பெரும் அவமதிப்பாகும். "நீங்கள் என் தலை மீது அமர்ந்து தங்கள் கடமையைச் செய்யுங்கள்" என்று கூறினார் அனுமன்.
அனுமன் தலை வணங்கி நிற்க, அவன் தலை மீது ஏறி அமர்ந்தார் சனீஸ்வரன்.
அதுவரை சாதாரண பாறைகளைத் தூக்கி வந்த அனுமன், சனீஸ்வரன் தலை மீது அமர்ந்த பின்பு, மிகப் பெரிய மலைப் பாறைகளைப் பெயர்த்து எடுத்துத் தலைமீது வைத்துக் கொண்டு, கடலைநோக்கி நடந்து, பாறைகளைக் கடலில் வீசினார்.
பெரிய பெரிய பாறைகளின் பாரத்தை அனுமனுக்குப் பதிலாக, அவர் தலை மீது அமர்ந்திருந்த சனீஸ்வரனே சுமக்க வேண்டியதாயிற்று.
அதனால், சனீஸ்வரனுக்கே கொஞ்சம் பயம் வந்துவிட்டது. "ஏழரைச் சனியில் அடுத்தவரை அவதிப்படுத்த வந்து நாமே அவதிப்பட வேண்டியதாகி விட்டதே...?" என்று யோசித்தார்.
அனுமன் ஏற்றிய சுமை தாங்காமல், அவனது தலையிலிருந்து கீழே குதித்தார்.
"சனீஸ்வரா! ஏழரை ஆண்டுகள் என்னைப் பீடிக்கவேண்டிய தாங்கள், ஏன் இவ்வளவு சீக்கிரம் விட்டு விட்டீர்கள்?" என்று கேட்டார் அனுமன்.
அதற்கு சனீஸ்வரன், "ஆஞ்சநேயா! உன்னை ஒருசில விநாடிகள் பீடித்ததால், நானும் பாறைகளைச் சுமந்து சேதுபாலப் பணியில் ஈடுபட்டுப் புண்ணியம் பெற்றேன்.
சிவபெருமானின் அம்சமான தங்களைக் கடந்த யுகத்தில் தங்களை நான் பீடிக்க முயன்று, வெற்றியும் பெற்றேன். இப்போது தோல்வி அடைந்து விட்டேன்" என்றார் சனீஸ்வரன்.
"இல்லை, இல்லை... இப்போதும் தாங்களே வென்றீர்கள்! ஏழரை ஆண்டுகளுக்குப் பதில் ஏழரை நிமிடங்களாவது என்னைப் பீடித்துவிட்டீர்கள் அல்லவா?" என்றார் அனுமான்.
அதைக் கேட்டு மனம் மகிழ்ந்த சனீஸ்வரன், "அனுமான்..! உனக்கு நான் ஏதாவது நன்மைசெய்ய வேண்டும் என விரும்புகிறேன். என்ன வேண்டும் கேள்" என்றார்.
"இராம நாமத்தை பக்தியுடன் பாராயணம் செய்பவர்களை உங்களது ஏழரைச் சனிகாலத்தில் ஏற்படும் துன்பங்களில் இருந்து நீங்கள் காத்தருள வேண்டும்" என வரம் கேட்டார் அனுமன்.
சனியும் வரம் தந்து அருளினார்.
இதனால் சனி பீடித்திருக்கும் காலத்தில் அனுமனை வணங்கி இராம பாராயணம் செய்பவர்களுக்கு சனியால் ஏற்படும் தொல்லை குறையும் என்று நம்பப்படுகிறது.

No comments:

Post a Comment