Tuesday, June 17, 2014

சனி ஊனமான கதை

சனி ஊனமான கதை

சூரிய குடும்பத்தில், சனி சூரியனிலிருந்து ஆறாவது கிரகமாகவும் இரண்டாவது பெரிய கிரகமாகவும் உள்ளார்.அவருக்கு அறுபத்திரண்டு உபகோள்கள் உள்ளன.சூரிய குடும்பத்தில் சூரியனைச்சுற்றி வரும் கிரகங்களில் மிகவும் மெதுவாகச் சுற்றி வரும் கிரகம் சனி ஆகும்.

சனி ,சூரியனை ஒரு முறை சுற்றி வலம் வர முப்பது வருடங்கள் ஆகும். ஒவ்வொரு இராசியிலும் இரண்டரை வருடங்கள் தங்கி பன்னிரண்டு இராசிகளை முப்பது வருடங்களில் கடக்கிறார்.வடமொழியில் சனி என்றால் மெதுவாகச் செல்பவன் என்று பொருள்.சனியின் நட்புக்கிரகம் சுக்கிரன் ஆகும்.சனிபகவானின் மற்ற பெயர்கள்.

சௌரா —-சூர்ய புத்திரன்
குரூர லோச்சனா —குரூர கண்களை உடையவன்
பான்கு —அங்கஹீனமனாவன்
அசிட்டா —கருத்தவன்
சப்த்ராட்சி —ஏழு கண்களை உடையவன்
காகவாஹன் —காகத்தை வாகனமாகக் கொண்டவன்
மண்டு —மந்தமாக இருப்பவன்

மார்க்கண்டேய புராணத்தில் உள்ளபடி சனிபகவான் சூரியனுக்கும் அவரது மனைவி சாயாவுக்கும் பிறந்தவர்.அவருடன் உடன் பிறந்த சகோதரி தபதி. சூரியனின் முதல் மனைவி சம்ஜ்ஞாவுக்கும் சூரியனுக்கும் பிறந்த குழந்தைகள் மூவர்.அவர்கள் மனு, யமன் மற்றும் யமுனை ஆவார்கள். சனியின் மனைவி பரம்தேஜஸ்வி.சூரிய புத்திரர்களில் மிகவும் முக்கியமானவர்கள் சனியும் யமனும் ஆவார்கள். அவர்கள் இருவரும் நீதிமான்களாக கருதப்படுகிறார்கள்.

முன்வினையில் அவரவர் செய்த கருமகாரியங்களுக்கேற்ப சனிபகவான் அவரவர் வாழும் காலத்தில் இப்பூவுலகில் பலாபலன்களைஅளிக்கிறார். இப்பூவுலகில் அவரவர் வாழும் காலத்தில் செய்யும் கருமகாரியங்களுக்கேற்ப யமன் அவர்கள் இறந்தபிறகு அவர்களுக்குண்டான பலாபலன்களை அளிக்கிறார்.

இருவருமே நீதி நேர்மை தவறாமல் தீர்ப்பு எழுதும் சிறந்த நீதிமான்கள்.சனிபகவான் ஒரு சிறந்த சிவபக்தன்.அவன் நிறம் கருப்பு. அவன் அணியும் ஆடை கருப்பு.அவருக்குண்டான ரத்தினம் நீலக்கல் மற்றும் கருப்புக்கல்.மலர்களில் நீல நிற மலர்கள். எண்களில் எட்டு.திசை மேற்கு.

சனி மிகவும் கடுமையானவர்.நேர்மையானவர்.அவருக்கு பொய், பித்தலாட்டம் ,மது ,சூது ,அசுத்தம், மிருகவதை,நம்பிக்கைத் துரோகம் மற்றும் பெற்றோர்களுக்கும் பெரியவர்களுக்கும் அவமரியாதை செய்வதுபிடிக்காது. அவரைப்போலவே அவரது பார்வையும் மிகவும் கடுமையானது.

சனி பிறந்தவுடன் கண் விழித்து சூரியனைப் பார்த்தவுடன் சூரியனுக்கு கிரகணம் பிடித்தது.அவர் விலங்குகளையும் மனிதர்களையும் தேவர்களையும் கடவுளர்களையும் சரிசமமாகப் பாவித்து அவரவர் ஊழ்வினைப்படி பலாபலன்களை அளிக்கிறார்.இதில் சிவனும் மகாவிஷ்ணுவும் பிரம்மாவும் அடக்கம்.

பிரம்ம வைவர்த்த புராணத்தின்படி ஒரு முறை சனிபகவான்,பகவான் கிருஷ்ணனை நோக்கி தியானம் செய்து கொண்டு இருந்தார்.நீண்ட நாட்களாக சனிபகவானின் மனைவிக்கு குழந்தை இல்லாததால் அன்று அங்கு வந்து தனக்கு குழந்தை பாக்கியம் அளிக்குமாறு கேட்டுக்கொண்டாள்.

நீண்ட நேரம் காத்திருந்தும் சனிபகவான் தியானத்தில் இருந்து கண் விழிக்கவில்லை.பொறுமையை இழந்த தேஜஸ்வி மிக்ககோபம் கொண்டு சனிபகவானைப்பார்த்து, எங்கேயும் எப்போதும்
உன்நேர்ப் பார்வையில் யாரைப்பார்க்கிறாயோ அவர்கள் அழியக்கடவார்கள்,என்று கடுமையான சாபம் இட்டு சென்று விட்டாள்.

இந்த சாபத்தின் விளைவாக சனிபகவான் யாரையும் நேரடியாகப் பார்க்காமல் பூமியைப் பார்த்து கீழ்ப்பார்வையுடன் தலை குனிந்தவண்ணம் இருப்பார்.

சிவனின் மனைவி பார்வதி புண்யக விரதம் காத்து பகவான் கிருஷ்ணனையே குழந்தையாகப் பெற்றாள். குழந்தை கணேசன் கிருஷ்ணனின் அம்சம்.இந்த நிகழ்ச்சியை மிகவும் கோலாகலமாக விழா எடுத்துக் கொண்டாடினார்கள்.கைலாயமே மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தது.

விழாவிற்கு எல்லோரும் வந்திருந்து குழந்தை கணேசனை வாழ்த்தினார்கள். பகவான் சனியும் விழாவிற்கு வந்திருந்தார்.ஆனால் குழந்தை கணேசனைப் பார்க்கவில்லை. இதனைக் கண்ணுற்ற பார்வதி இது குறித்து சனியிடம் வினவினாள்.

சனியும் தனக்கு தன் மனைவி இட்ட சாபத்தைக் கூறிஅதனால் தான் குழந்தை கணேசனைப் பார்க்கவில்லை என்று கூறினார்.இதைக் கேட்டு பார்வதியும் அவளது தோழிமார்களும் சிரித்து சனியைப் பார்த்து எள்ளிநகையாடினர்.

பார்வதி சனி கூறியதை விளையாட்டாக எண்ணி சனியைப் பார்த்து அதெல்லாம் ஒன்றுமில்லை,நீ தாராளமாக குழந்தை கணேசனைப் பார்த்து அவனை ஆசிர்வதிக்கலாம் என்று கூறினாள்.

இவ்வாறு பார்வதி கூறியதைக் கேட்டு சனியும் வேறு வழியின்றி குழந்தை கணேசன் மீது தன் பார்வையை நேரடியாக செலுத்தாமல் ஓரக்கண்ணால் மட்டுமே கணேசனைப் பார்த்தார்.

சனிபகவான் பார்வை குழந்தை கணேசன் மீது பட்ட அடுத்த கணம் பார்வதியின் கைகளில் இருந்த குழந்தை கணேசனின் தலை காணமல் போய் விட்டது.அது நேரடியாகப் போய் கோலோகத்தில்(சிவனுக்கு கைலாயம், விஷ்ணுவுக்கு வைகுந்தம் ,கிருஷ்ணனுக்கு கோலோகம்) கிருஷ்ணனின் தலையுடன் சேர்ந்து விட்டது.இதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றனர்.

தன் ஆசை மகன் தலையில்லாமல் முண்டமாக தன் கைகளில் இருப்பதைப் பார்த்த பார்வதி அதிர்ச்சியடைந்து மூர்ச்சையானாள்.விரதம் அனுஷ்டித்து பெற்ற குழந்தை கணேசன் ஒரு நொடியில் தலை இல்லாமல் முண்டமாகிப் போனதைப் பார்த்து இதெற்க்கெல்லாம் காரணம் சனி தான் என்று நினைத்து அவன் மீது மிகுந்த கோபம் கொண்டாள்.

இதையெல்லாம் பார்த்தக் கொண்டிருந்த பகவான் கிருஷ்ணன் உடனே கருடன் மீதேறிப் போகையில் இந்திரனின் ஐராவதம் யானை ஒரு ஆற்றங்கரையில் படுத்து நித்திரையில் இருந்ததைக் கண்டு தன் சுதர்சன சக்கரத்தால் அதன் தலையை வெட்டி கைலாயம் அடைந்து தலையின்றிக் கிடந்த கணேசனின் முண்டத்தில் பொருத்தினார்.குழந்தை கணேசன் யானைத் தலையுடன் உயிர் பெற்று எழுந்தார்.எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி.மீண்டும் விழா களை கட்டியது.

நிறைய தான தருமம் செய்யப்பட்டது.கைலாயமே மகிழ்ச்சி வெள்ளத்தில்குதூகளித்தது. குழந்தை கணேசனுக்கு பிரம்மா கமண்டலத்தை பரிசாக அளித்தார்.ப்ரித்வி எலி வாகனத்தைக் கொடுத்தாள்.எல்லோரும் நிம்மதி அடைந்தனர்.ஆனாலும் சனியின் மீதான பார்வதியின் கோபம் குறையவில்லை.

எனவே பார்வதி சனியை முடமாகும்படிச் சபித்தாள்.ஆனால் வந்திருந்த தேவர்களும், முனிவர்களும் மற்ற விருந்தாளிகளும் நடந்த சம்பவங்களுக்கு சனி காரணமில்லை என்றும்,பார்வதிதேவி கேட்டுக்கொண்டதின் பேரிலேயே சனி குழந்தை கணேசனைப் பார்த்தான் என்றும் பார்வதியை சமாதானப்படுத்தினார்கள்.

பார்வதிக்கு சனியின் மீதான கோபம் சற்று குறைந்தது.ஆனாலும் பார்வதி இட்ட சாபத்தினால் சனி முழுவதும் முடமாகாமல் சிறிது ஊனம் ஏற்பட்டு அதுவே நிரந்தரமாக நிலைத்து விட்டது. இப்படியாக சனி நிரந்தர ஊனமானார் .

பொதுவாக மக்கள் எண்ணுவது போல் சனிபகவான் கொடூரமானவரோ மோசமானவரோ அல்லர்.அவரவர் செய்த கர்மங்களுக்கு ஏற்ப இந்தப் பிறவியில் பலன்களையும் தண்டனைகளையும் அவர் அளிக்கிறார்.

சனியைப்போல் கொடுப்பாருமில்லை சனியைப்போல் கெடுப்பாருமில்லை என்பர் 

குற்றங்களுக்கும் நற்காரியங்களுக்கும் ஏற்ப தரும நியாயத்தின்படி அவர் நீதி வழங்குகிறார்.தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதிற்க்கினங்க அவரவர்களே அவர்களுடைய வாழ்க்கையை நிர்மாணித்துக் கொள்கிறார்கள்.

சனிபகவானை அச்சத்தினாலும் பீதியினாலும் வணங்குவதைவிட பக்தியுடனும் சிரத்தையுடனும் வணங்குவது நல்லது.

 

1 comment:

  1. வணக்கம் புதிய கதை இது செவி வழி கதை உண்மை இல்லை
    இது என் கருத்து

    ReplyDelete