Monday, June 16, 2014

நிதானமான ஆசை!

குருகுலம் ஒன்றில் சீடர்கள் பலர் இருந்தனர்.
ஒரு சீடன் மட்டும் குருவிடம், ஆர்வமுடன் சந்தேகம் கேட்டபடி இருந்தான்.
குருவும் சளைக்காமல் விளக்கம் அளிப்பார்.
ஒருமுறை சீடன் குருவிடம், மனதில் எப்போதும் ஆசை எழுவதைப் பற்றிக் கேட்டான்.
"" ஆசை விஷயத்தில் நிதானத்தைக் கடைபிடி '' என்றார் குரு.
சீடன் அமைதியானான்.
ஒருநாள் குருவைப் பார்க்க பெரியவர் ஒருவர் வந்தார். அவரிடம் நிம்மதிக்கு வழிகாட்டுமாறு வேண்டினார்.
குருவும், ""மனதில் எழும் ஆசையைக் குறையுங்கள். அதுவே நிம்மதிக்கான வழி!'' என்று உபதேசித்தார்.
இதைக் கேட்ட சீடனுக்கு மனம் தாங்கவில்லை.
""குருவே! இடையில் குறுக்கிடும் என்னை மன்னித்து விடுங்கள். இருபது வயதுள்ள என்னையும் ஆசைப்படாதே என அறிவுரை
சொன்னீர்கள். ஆனால், இவரையோ ஆசையைக் குறைக்கச் சொல்கிறீர்கள். எப்போது தான் மனிதன் ஆசைப்படுவது?'' என்று கேட்டான்.
குரு சிரித்தபடி, ""நல்ல கேள்வி கேட்டாய். இளம் வயதில் ஆசையை வெறுக்கத் தேவையில்லை. ஆனால், நிதானம் அவசியம். முதுமையில் ஆசைப்படுவது கிடைத்தாலும், அதை உதறித் தள்ளி விடும் விவேகம் வேண்டும். பெருமாள் கோயில் பொங்கல் என்றாலும், சர்க்கரை வியாதியுள்ளவன் அதை மறுப்பது போல'' என்று விளக்கம் அளித்தார்.
சீடனுக்குப் புரிந்தது. யோசித்தால் நமக்கும் இந்த உண்மை புரியும்.

No comments:

Post a Comment