Sunday, July 20, 2014

கலியுகத்தில் நடந்த கந்தனின் அருளாடல் இது..!

கலியுகத்தில் நடந்த கந்தனின் அருளாடல் இது..!
இதிகாசம் மற்றும் புராணங்களில், தெய்வமே மனிதர்களுக்கு உதவி செய்து, துயரத்தில் இருந்து காப்பாற்றியதாக படித்திருப்போம் அல்லது கேட்டிருப்போம். அதெல்லாம் அந்தக் காலம்; இப்ப அதெல்லாம் நடக்காது; இது கலிகாலம் என்ற எதிர்மறையான புலம்பலும் உண்டு. தெய்வத்திற்கு, காலக் கணக்கோ எல்லையோ கிடையாது. தெய்வம் என்றும் நின்று அருள் புரியும். கலியுகத்தில், அதுவும், இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான் ஒருவருக்காக, முருகப் பெருமான் நடத்திய அருளாடல் இது. இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் பாம்பன் ஸ்வாமிகள். இவர், கனவிலும், நனவிலும் முருகனைத் தரிசித்தவர். ஒரு நாள் அவர், தென்னந்தோப்பிற்குள் நடந்து கொண்டிருந்தார். கடும் வெயில், தலைக்கு மேலே சூரியன் சுட்டது. தரையோ, கீழிருந்து கால்களைத் தாக்கியது.
கடும் வெயிலில் நடந்து கொண்டிருந்த பாம்பன் சுவாமிகளின் காலில், முள் தைத்து விட்டது. சுவாமிகள் அப்படியே தரையில் உட்கார்ந்து விட்டார். உடனே, தரையில் இருந்த கொதிப்பும் அவரைத் துன்புறுத்தியது. முள் குத்திய காலைத் தூக்கி, தொடையின் மீது மல்லாத்தி வைத்து, முள்ளைப் பிடுங்க முயற்சித்தார். ஆழமாகவும், முழுமையாகவும் பதிந்திருந்த முள்ளை, பிடுங்க முடியவில்லை. கையால் அசைக்க அசைக்க, ரத்தம் வந்து, வலி தான் அதிகமாயிற்றே தவிர, முள்ளை எடுக்க முடியவில்லை. முருகா இந்த முள்ளைப் பிடுங்கும் போதே, இவ்வளவு வலிக்கிறதே... உடம்பில் இருந்து, உயிரைப் பிடுங்கும் போது, எவ்வளவு வலி இருக்கும்... என்று, கண்ணீர் சிந்தினார் பாம்பன் சுவாமிகள். கண்ணீர் முள்ளின் மீது விழுந்தது. அதன் காரணமாக, முள், சற்று நெகிழ்ந்து கொடுத்தது. முள்ளைப் பிடுங்கி எறிந்து விட்டு, சுவாமிகள் திரும்பி விட்டார்.
இந்த விஷயத்தை சுவாமிகள், யாரிடமும் சொல்லவில்லை. ஆனால், அடியார் மனம் வருந்த, ஆறுமுகன் பொறுப்பாரா! அன்றிரவே, தச்சு வேலை செய்யும் ஒருவர் கனவில், கந்தக் கடவுள் தோன்றி, என் அடிமையான அந்த இளைஞனுக்கு, நீ ஒரு பாதக்குறடு (மரத்தாலான பாதுகைகள்)செய்து கொடு... என்று, கட்டளையிட்டார். மறுநாள், தச்சு வேலை செய்பவர், முருகப் பெருமானின் உத்தரவுப்படியே பாதக்குறடுகள் செய்து வந்து, பாம்பன் சுவாமிகளிடம் தந்து, முருகப் பெருமானின் உத்தரவையும் கூறினார். பாம்பன் சுவாமிகளுக்கு மெய் சிலிர்த்தது; அவர், முருகனின் கருணையை எண்ணி உருகினார். அடியார்கள் மனம் வருந்த, ஆண்டவன் பொறுக்க மாட்டார் என்பதை, விளக்கும் நிகழ்ச்சி இது.

No comments:

Post a Comment