Tuesday, July 22, 2014

பொறுத்தார் நாடாள்வர்; பொங்கியோர் காடாள்வர்' ---பொறுமையின் பெருமை


பொறுத்தார் நாடாள்வர்; பொங்கியோர் காடாள்வர்' ---பொறுமையின் பெருமை


பொறுத்தார் நாடாள்வர்; பொங்கியோர் காடாள்வர்' என்பது, பெரியோர் வாக்கு. இதற்கு மிகப் பெரிய உதாரணமே, மகாபாரத சகோதரர்கள் தான்.
பாண்டவர்கள், பொறுமையை கடைபிடித்ததால், நாட்டை ஆள முடிந்தது. கவுரவர்களுக்கு பொறுமையும், விட்டுக் கொடுக்கும் தன்மையும் இல்லாததால், பாரதப் போரில் மடிந்தனர். அதனால் தான், சான்றோர், பொறுமையை, பூமா தேவிக்கு ஒப்பிட்டும், கோபத்தை, மனித குலத்திற்கு எதிரான சத்ரு என்றும் கூறினர். பொறுமையின் பெருமையை விளக்கும் இக்கதையை படியுங்கள்...
புத்தர் பெருமான், ஒருமுறை, காட்டெருமையாகப் பிறவி எடுத்திருந்தார். காட்டெருமையின் பலமோ அளவிட முடியாதது; அதைக்கண்டு, மற்ற மிருகங்கள் பயந்து நடுங்கும். அத்தகைய பலமிகுந்த காட்டெருமையாகப் பிறந்தும், புத்தர் காட்டில் வாழும் எந்த ஜீவராசியையும் பயமுறுத்தவில்லை; மிகவும் சாதுவாகவே இருந்தார்.
சாதுவாக இருந்தாலே, மற்றவர்கள் சீண்டிப் பார்ப்பது உலக நியதி தானே! அந்த தத்துவத்தின்படி, ஒரு குரங்கு, சாதுவாக இருந்த காட்டெருமையை சீண்டிக் கொண்டே இருந்தது. அது, காட்டெருமையின் முதுகில் ஏறி சவாரி செய்வதும், அதன் கொம்புகளைப் பிடித்து ஆட்டுவதும், வாலைப் பிடித்திழுப்பதும், கடிப்பதுமாக இம்சித்துக் கொண்டே இருந்தது.
இவ்வளவு செய்த போதும், காட்டெருமையாகப் பிறந்திருந்த புத்த பகவான், மிகவும் பொறுமையோடு இருந்தார்.
அவர் பொறுமையைக் கண்டு, தேவர்களுக்குப் பொறுக்க முடியவில்லை. அவர்கள் புத்தரிடம் வந்து, 'சாந்தத்தின் மொத்த உருவமே... உங்களைப் படாதபாடுபடுத்தும் அக்குரங்கை தண்டிக்காமல், நீங்கள் அமைதியாக இருக்கிறீர்களே... அந்தக் குரங்கிடம் பயமா?' என்று, கேட்டனர்.
அதற்கு, பகவான் புத்தர், 'அந்தக் குரங்கைக் கண்டு, நான் ஏன் பயப்படப் போகிறேன்... நான் தலையைக் கொஞ்சம் ஆட்டினாலே போதும். அக்குரங்கின் வாழ்நாள் முடிந்து விடும். இருந்தும், அக்குரங்கின் குற்றத்தை பொறுத்துக் கொள்கிறேன். ஏன் என்றால், நம்மை விட பலசாலியாக இருப்பவர்கள் செய்யும் குற்றங்களை பொறுத்துப் போவதற்கு பெயர் பொறுமை இல்லை... நம்மை விட பலம் குறைந்தவர்கள் நமக்கு செய்யும் குற்றங்களைப் பொறுத்துக் கொள்வதற்கு பெயர் தான் பொறுமை. அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன்...' என்றார்.
விநாடி நேரம் அவசரப்பட்டு பொறுமையை இழந்து, பின், வாழ்நாள் முழுவதும் அல்லல் படுகிறோம். பொறுமை, என்றுமே பெருமையைத் தான் தரும்; சிறுமையைத் தராது.

No comments:

Post a Comment