Tuesday, July 22, 2014

பிதாமகர் பீஷ்மரின் கடைசி பிரார்த்தனை

பிதாமகர் பீஷ்மரின் கடைசி பிரார்த்தனை....
அற்புதமான கீழ்க்கண்ட துதியைச் செய்து பீஷ்மர் சுவாசம் அடங்கப் பெற்றார்:-
-ஸ்ரீமத் பாகவதம், முதல் ஸ்கந்தம் , ஒன்பதாம் அத்தியாயம் ......
யாதவர்களில் சிறந்தவனும், பாகவதர்களுக்கு நாதனும், சேதனாசேதனங்களைக் காட்டிலும் வேறுபட்டு, எல்லையில்லாத மஹிமை உடையவனும் அளவிறந்த ஸ்வபாவ சித்தமான ஆனந்தமுடையவனும், ஓரிடத்தில் விளையாடுவதற்காக வடிவம் கொண்டவனும், தன் ஸங்கல்பத்தினால் சேதனர்களுக்கு சம்சார ப்ரவாஹத்தை விளைவிப்பவனுமாகிய கிருஷ்ண பகவானிடத்தில் என் புத்தி மற்றொன்றிலும் விருப்பமின்றி நிலை நின்றிருக்குமாக!
மூன்று லோகங்களும் காண ஆசைப்படத் தகுந்ததும் பச்சிலை நிறமுடையதும், சூரிய கிரணம் போல பொன் நிறம் அமைந்த மேலான பீதாம்பரம் உடுத்தி இருப்பதும், முன் நெற்றி மயிர்களின் வரிசைகளால் மறைந்து அழகான தாமரை மலர் போன்ற முகமுடையதுமான உருவம் தரித்தவனும், அர்ஜுனனுக்கு நண்பனுமாகிய ஸ்ரீ கிருஷ்ணனிடத்தில் எனக்குப் பரிசுத்தமான – ப்ரயோஜனங்கள் ஒன்றையும் விரும்பாத – ப்ரீதி உண்டாகுமாக!
யுத்தத்தில் குதிரைகளின் குளப்படிகளால் கிளம்பின தூசுகள் படிந்து அழுக்கடைந்து நாற்புறமும் தொங்குகின்ற முன் நெற்றி மயிர்களாலும், பெருகி வழிகின்ற வேர்வை ஜலங்களாலும் அலங்காரமுற்ற முகம் உடையவனும், நான் பிரயோகித்த கூரான பாணங்களால் பிளவுண்ட தோலுடையவனும் ரத்தத்தினால் விளங்கும் கவசம் அமைந்தவனுமாகிய ஸ்ரீ கிருஷ்ண பகவானிடத்தில் என் மனம் அங்குமிங்கும் பெயராமல் நிலையுற்றிருக்குமாக!
யுத்தம் தொடங்குகின்ற அந்தக் கணத்தில் நண்பனான அர்ஜுனன் மொழிந்த சொற்களைக் கேட்டு தன்னுடையவரான பாண்டவர்களுடையதும் எதிரிகளான கௌரவர்களுடையதுமான இரண்டு சைன்யங்களுக்கு இடையில் ரதத்தை நிறுத்தி, நின்று, கண் பார்வையினாலேயே எதிரி சைன்யத்தில் இருந்தவர்களுடைய ஆயுளைப் பறித்தவனும் அர்ஜுனனுக்கு நண்பனுமான ஸ்ரீ கிருஷ்ணனிடத்தில் எனக்கு ப்ரீதி உண்டாகுமாக!
கொஞ்ச தூரத்தில் மறைந்திருக்கும் சைன்யத்தின் முன்பாகத்தைக் கண்டு அங்கிருப்பவர் உறவினர்களாயிருப்பதை அறிந்து உறவினர்களைக் கொல்வது தோஷமென்னும் புத்தியால் அதினின்று முகம் மாற வைத்த அர்ஜுனனுடைய குத்ஸித புத்தியைக் கண்டு ஆத்ம ஸ்வரூபத்தை அறிவிக்கின்ற கீதையாகிற உபநிஷத்தை எவன் உபதேசித்து அந்த துர்புத்தியைப் போக்கினானோ அப்படிப்பட்ட ஸர்வாதிகனான எல்லோரிலும் சிறந்த பகவானுடைய சரணாரவிந்தங்களில் எனக்கு ப்ரீதி உண்டாகுமாக!
நிரபராதியைக் கொல்லும் தன்மையுள்ள என்னுடைய பாணங்களால் அடியுண்டு கவசம் முறிந்து ரத்தத்தினால் உடம்பு முழுவதும் நிறைந்தவனாகி, ‘ஆயுதம் எடுக்க மாட்டேன்’ என்ற தன் பிரதிக்ஞையை துறந்து ‘ஆயுதம் எடுக்கச் செய்கிறேன்’ என்ற என் பிரதிக்ஞையை சத்யம் செய்வதற்காக, ரதத் தலிருந்தவன் அதிலிருந்து கிளம்பிக் குதித்து சுதர்ஸன சக்கரத்தை ஏந்திக் கொண்டு, யானையை வதம் செய்யும் பொருட்டு கிளம்பிப் பாயும் சிங்கம் போல, பலாத்காரமாக என்னை வதிக்கும் பொருட்டு பூமி நடுங்கும்படி எவன் என்னை எதிர்த்து வந்தானோ, அந்த முகுந்தனே -ஸ்ரீ கிருஷ்ண பகவானே- எனக்குக் கதி ஆவானாக!
அர்ஜுனனுடைய ரதமே குடும்பமாகப் பெற்றவனும் உழவுகோலையும் குதிரைகளின் கயிறுகளையும் பிடித்துக் கொண்டு அந்த சோபையினால் ஆயிரம் கண்கள் கொண்டு காணும்படி மிகவும் அழகானவனுமாகிய பகவானிடத்தில், மரணம் அடைய முயன்றிருக்கிற எனக்கு ப்ரீதி உண்டாகுமாக!
த்வந்த்வ யுத்தத்தில் மாண்டவர் அனைவரும் எவனைப் பார்த்த மாத்திரத்தில் தமக்கு ஸ்வபாவ சித்தமான பாபமிற்றிருக்கை முதலிய குணங்கள் தோற்றப் பெறுகையாகிற மோக்ஷத்தை அடைந்தார்களோ, அப்படிப்பட்ட பகவானிடத்தில் எனக்குப் ப்ரீதி உண்டாகுமாக்
!
அழகிய நடையாலும், விலாஸத்தினாலும், அழகான புன்னகையாலும் அன்பு பெருகி வழிகின்ற கண்ணோக்கத்தினாலும் மிகுந்த வெகுமதி செய்யப்பெற்ற இடைப் பெண்கள் காமம் தலைக் கொண்டு விவேகமற்று ஸ்ரீ கிருஷ்ணனை சாதாரணமாக நினைத்து அவன் செய்த பூதனா சம்ஹாரம் முதலிய சேஷ்டைகளை அனுபவித்தவர்களாகி எவனுடன் ஒற்றுமை அடைந்தார்களோ, அப்படிப்பட்ட பகவானிடத்தில் எனக்குப் ப்ரீதி உண்டாகுமாக!
யுதிஷ்டிரன் செய்த ராஜசூய யாகத்தில் முனிவர் கூட்டங்களும், ராஜ ச்ரேஷ்டர்களும் நிறைந்த சபையின் மத்தியில் எவன் இந்த யுதிஷ்டிரன் முதலியோர் நடத்தினதும் முனிகணங்கள் அனுமதித்தது மான அக்ர பூஜையைப் பெற்றானோ அப்படிப்பட்டவனும் பார்க்கப் பதினாயிரம் கண்கள் வேண்டும்படி மிகவும் அழகியவனும் எனக்கு அந்தராத்மாவுமான இந்த ஸ்ரீ கிருஷ்ணன் நான் சரீரத்தை விடும் வரையில் என் கண்களுக்குப் புலப்பட்டுக் கொண்டு என் முன்னே இருப்பானாக!
அங்ஙனம் கீழ்ச் சொன்ன இயற்கையுடையவனும் தான் அவரவர் செய்த புண்ய பாப ரூப கர்மங்களுக்குத் தகுந்தபடி சிருஷ்டித்த பிராணிகளின் இதயந்தோறும், சூர்யன் தான் ஒருவனே ஆயினும், கண்ணுக்குப் புலப்படுகிற ஜலம் முதலிய வஸ்துக்களில் வெவ்வேறாகத் தோன்றுவது போல, இயற்கையில் தான் ஒரே தகையனாயினும் பலவாறு தோற்றுகின்றவனுமாகிய பரம புருஷனைப் பெற்றேன்.
இப்படி இறுதியாக பிரார்த்தனை செய்த பீஷ்மர் ஸ்ரீ கிருஷ்ண பகவானிடத்தில் மனம் வாய், கண் ஆகிய இவற்றின் வியாபாரங்களுடன் ஆத்மாவைப் புகச் செய்து சுவாசம் அடங்கப் பெற்றார்,

No comments:

Post a Comment